தீவுத்திடலில் 70 நாள் நடந்த சுற்றுலா பொருட்காட்சி நிறைவு: 5.86 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்: சுற்றுலாத்துறை தகவல்

சென்னை: சென்னை தீவுத்திடலில் 70 நாட்கள் நடைபெற்ற சுற்றுலா பொருட்காட்சி முடிவடைந்தது. இதனை, மொத்தம் 5.86 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர், என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 48வது சுற்றுலா பொருட்காட்சி சென்னை தீவுத்திடலில் கடந்த ஜனவரி 12ம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த பொருட்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதில், 51 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவை தவிர கடைகள், பொழுதுபோக்கு வளாகம் ஆகியவையும் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், 32க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள், சாகச விளையாட்டு சாதனங்கள், நவீன கேளிக்கை சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், அரசு பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

தினம்தோறும் பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக சென்று சுற்றுலா பொருட்காட்சியை கண்டுகளித்தனர். 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சுற்றுலா பொருட்காட்சி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த பொருட்காட்சியை மொத்தம் 5.86 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர். இவர்களில் 4,91,361 பேர் பெரியவர்கள், 94,637 பேர் குழந்தைகள். பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடப்பதால் கடந்த வாரம் பொது மக்களின் வருகை குறைந்தது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் நிறைவு விழா நடத்தப்படாமல் பொருட்காட்சி முடிவடைந்தது. சிறந்த அரங்குக்கான விருது ஜூன் மாதம் அறிவிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post தீவுத்திடலில் 70 நாள் நடந்த சுற்றுலா பொருட்காட்சி நிறைவு: 5.86 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்: சுற்றுலாத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: