திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாத தரிசனம்: திரளான பக்தர்கள் வழிபாடு

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி இன்று தியாகராஜரின் பாத தரிசனத்தை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு வருகின்றனர். திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தியளிக்கும் ஸ்தலமாக விளங்கி வருகிறது. பூங்கோயில் என்று அழைக்கப்பட்டு வரும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர். இக்கோயில் ஆழித்தேரானது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த இக்கோயிலில் தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே தியாகராஜரின் பாதங்களை காண முடியும். பங்குனி உத்திர பெருவிழாவின்போது இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழாவின்போது வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இந்தாண்டு பங்குனி உத்திர பெருவிழா கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் கடந்த 21ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி இன்று காலை 6 மணி முதல் பதஞ்சலி வியாக்கிர பாத மகரிஷிகளுக்கு தியாகராஜ சுவாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி தியாகராஜ சுவாமிக்கு நேற்றிரவு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை விளமல் பதஞ்சலி கோயிலிலிருந்து பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர்கள் புறப்பட்டு திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு வந்து தியாகராஜரின் பாத தரிசனத்தை தரிசித்தனர். இதையடுத்து தியாகராஜர் பக்தர்களுக்கு பாத தரிசனம் அருளினார். இதில் திருவாரூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 4 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தியாகராஜரை வழிபட்டனர்.

The post திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பாத தரிசனம்: திரளான பக்தர்கள் வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: