ஏகலிங்கம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிவபெருமான் ஒருவனே காலங்களைக் கடந்த காலாதீதன், அழிவற்றவன். இந்த உலகம் அவனிடத்தில் இருந்து தோன்றி, நெடுங்காலம் வளர்ந்து, அவனிடத்திலேயே ஒடுங்குகிறது. அவன் ஒருவன் மட்டுமே நிலையாக இருக்கிறான். உலகப் படைப்பிற்கு முன்பாக, அவன் ஒருவன் மட்டுமே இருந்தான். உலகம் நடைபெறும் போதும், அவற்றை வழிநடத்து வோனாக அவன் மட்டுமே இருக்கிறான்.

அவனால் படைக்கப்பட்ட பிரம்மா, விஷ்ணு முதலான எண்ணற்ற தேவர்கள் உலகைப் படைத்தும், காத்தும், அழித்தும் ஓயாது தொழில்புரிந்த போதிலும், அவர்கள் எல்லோரும் சிவபெருமானால் இயக்கப்பட்டு, இறுதியில் அவனிடத்தில் ஒடுங்குபவர்களே. அவர்கள், சிவபெருமானின் ஆணைப் படியே தத்தம் தொழிலை நடத்துகின்றனர். தேவர்களுக்கெல்லாம் தேவனாக இருப்பதால், சிவபெருமான், “தேவதேவன்’’ என்று அழைக்கப்படுகிறான்.

அவனை “ஏகன்’’ என்றும், ஒருவன் என்றும் சமய நூல்கள் குறிக்கின்றன. வடமொழியில் அவனை ஏகன் என்றும், ஏகநாதன் என்றும் அழைக்கின்றனர். ஏகநாயகன், இமையவர் நாயகன், புண்ணிய மூர்த்தியே என்பர். திருவாசகம், “ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க’’ என்று புகழ்கிறது. தனியொருவனாக இருக்கும் அவனே எல்லாவுயிர்களிலும் நிறைந்து நின்று அவற்றை இயக்குகிறான். அதையொட்டியே முதலில் ஏகன் என்று துதித்துத் தொடர்ந்து அனேகன் என்றும் போற்றுகின்றார். திருமுறைகளில் அவன் பல இடங்களில் ஒருவன் என்ற தொடரால் குறிக்கப்படுகிறான்.

அவனைப் போலவே, அவனது வாகனமான பெருங்காளையும் ஒன்று என்று சொல்லாலேயே குறிக்கப்படுகின்றன. எக்காலத்தும் அழிவின்றி நிற்கும் அவன், தனக்கென வண்ணம் வடிவம், குணம், இன்பதுன்பம் அற்றவன் என்றாலும், வானவரும், தானவரும், மண்ணவரும் அவனுக்குத் தத்தம் விருப்பப்படி பல்லாயிரம் பெயர்களைச் சூட்டி வழிபடுகின்றனர். தேவர்கள் எண்ணரிய திருநாமங்களைக் கூறி அவனைப் போற்றி வழிபடுவதை, ‘‘பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெருமான்’’ என்று குறித்துள்ளனர்.

தனக்கென வடிவம் ஏதும் அற்றவனாக இருந்தபோதிலும், அருவினுக்கு அருவாயும் தோன்றும் உருவினுக்கு உருவாயும், ஒப்பிலதாய் முளைத்தெழுந்த சிவலிங்கமாக அவன் காட்சி தருகிறான். அந்த லிங்கத்தை ஏகன் என்றும், ஏகலிங்கம் என்றும் போற்றுகின்றோம். காஞ்சியில் மாமரத்தின் கீழ் நிற்கும் ஏகலிங்கனைப் புராணங்கள் “ஏகாம்பரன்’’ என்று போற்றுகின்றன. அவனது ஆலயம் ஏகம்பம் என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டில், ஏகலிங்கம் என்ற பெயரில் பல சிவாலயங்கள் காணப்படுகின்றன.

ஏகலிங்கத்தை ஏகநாதர் எனவும், அழைப்பர். ஏகநாதனை இமையவர் தொழும் ஆதிநாதனை ஒருமுகலிங்கமாக அமைத்து வழிபடும் வழக்கமும் உள்ளது. இதனை ஏகமுக லிங்கம் என அழைப்பர். ஏகலிங்க வழிபாடு யாவும் சிவனே, எங்கும் அவன் பரவி நிறைந்துள்ளான். அழிவற்ற அவன் ஒருவனே உலகிற்கு மூலகாரணன், ஆதிகாரணமாக இருப்பதால் காரணீசன் என்று அழைக்கப்படுகிறான்.

தொகுப்பு: அனந்தபத்மநாபன்

The post ஏகலிங்கம் appeared first on Dinakaran.

Related Stories: