தெளிவு பெறு ஓம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ராகு காலத்தை எப்பொழுதும் பார்க்க வேண்டுமா?
– வி.ஆனந்தன், தர்மபுரி.

பதில்: எல்லாக் காரியங்களுக்கும் ராகு காலத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. நீங்கள் அடிக்கடி (routine) செய்ய வேண்டிய காரியங்களுக்கு ராகு காலம் பார்க்க வேண்டியது இல்லை. அவசர அறுவை சிகிச்சை, குழந்தையை வெளியே எடுக்க வேண்டிய சூழல் முதலிய உயிர்ப் பிரச்னைகள் வருகின்ற பொழுது ராகு காலம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், புதிதாக ஒரு செயலோ, ஒரு வியாபாரமோ, ஒரு பயணமோ தொடங்கப் போகிறீர்கள் என்றால், கால நேரத்தைப் பார்ப்பது சிறந்தது.

ராகுகாலம் என்பது ஒவ்வொரு நாளிலும் ஒன்றரை மணி நேரம் வரும். அந்த ஒன்றரை மணி நேரம் தவிர்த்து அந்தக் காரியத்தை செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தால் அதை ஏன் நாம் ராகு காலத்தில் அவசரமாக செய்ய வேண்டும்? இன்னொரு விஷயமும் உண்டு.

ராகுகாலத்தைப் பார்க்கின்றபொழுது அன்றைய சூரிய உதய நேரத்தையும் நாம் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். சில நேரங்களில், ராகு காலம் முடிந்துவிட்டது என்று சொல்லி, ராகுகாலத்திலேயே அந்தச் செயல் நடப்பதுண்டு. இதில் கொஞ்சம் கவனம் தேவை.

? சொர்க்கம் நரகம் என்பது எங்கு இருக்கிறது?
– எஸ்.பி.பிரசன்னா, பரமக்குடி.

பதில்: இந்த நிலவுலகத்தில் வாழ்ந்து முடிந்த பின், நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு தகுந்த பலனாக, புண்ணியங்களுக்கான இடமாக சொர்க்கமும், பாவங்களுக்கு தண்டனையாக நரகமும் கிடைக்கும் என்று சொல்லி இருக்கின்றார்கள். அதை நாம் நம்புகிறோம். அதில் ஒன்றும் தவறு இல்லை. அதனால், இந்த உலகத்தில் பாவங்கள் செய்யாமல் புண்ணியமான காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டினால் அது அவருக்கும் நல்லது; அவர் வாழும் உலகத்துக்கும் நல்லது.

இது ஒரு புறம் இருக்க, சொர்க்கமும் நரகமும் நம்மிடையே இங்கேயே இருப்பதாகவும் நாம் எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக, ஒரு குடும்பம், அனுசரணையோடு ஒருவருக் கொருவர் பேசிக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றால், அந்த வீடு சொர்க்கம் போல் இருக்கிறது. ஒரு வீட்டில் எப்பொழுது பார்த்தாலும் சண்டை சச்சரவு, அழுகை, கோபம் என்று இருந்தால், ‘‘இது என்ன நரகமாக இருக்கிறது’’ என்று சொல்கிறோம்.

நாம் நம்மைச் சுற்றி அன்பையும் சந்தோஷத்தையும் விதைத்தால், அந்த இடம் சொர்க்கம் ஆகி விடுகிறது. கோபத்தையும், எரிச்சலையும், தகாத வார்த்தைகளையும், சண்டையையும், அழுகையையும் விதைத்தால், அந்த இடம் நரகம் ஆகிவிடுகிறது. எனவே, ஒரு இடத்தை சொர்க்கமாக்குவதும், நரகமாக்குவதும் நம்மிடம்தான் இருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

? இறைவன் எதை விரும்புகின்றான்?
– விசாலாட்சி, தேவராயபுரம், கோவை.

பதில்: இறைவன் விரும்புவது மூன்றுதான். நேர்மை, சத்தியம், பக்தி. நேர்மையும் சத்தியமும் இல்லாத பக்தி செல்லாத காசு. பயனில்லை.

? படிப்பதினால் நல்ல குணங்களைப் பெற முடியுமா?
– மனோன்மணி, இந்திராநகர், பெங்களூர்.

பதில்: அதற்குத்தான் படிப்பு. கல்வி என்பது நல்ல குணங்களைத் தரவேண்டும். தராவிட்டால் அந்த கல்வியால் அனர்த்தம்தான் விளையும். பாரதி, “படிச்சவன் சூதும் வாதும் செய்தால், போவான் போவான் ஐயோ என்று போவான்’’ என்று உணர்ச்சியோடு பாடுகிறார். காந்தியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ‘‘எது உங்களை வருத்தத்தில் ஆழ்த்துகிறது.?’’ காந்தி பதில் சொன்னார், ‘‘படித்த பலரின் இதயமற்ற தன்மைதான் எனக்கு வருத்தத்தைத் தருகிறது.’’

? பஞ்சாங்கத்தில் மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாள்கள் என்று போட்டு இருக்கிறார்கள். இதனால் என்ன பயன்கள்?
– வே. காமராஜன், குரோம்பேட்டை, சென்னை.

பதில்: ஒரு நாளில் ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய 9 நட்சத்திரங்கள் இருந்தால், அந்த நாள் மேல் நோக்கு நாள். பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய நாட்கள் இருந்தால், அவை கீழ் நோக்கு நாட்கள் என்பார்கள். மேல்நோக்கு நாள் அன்று மாடி, கொடிமரம், மதில்சுவர், வாசல் கால், பந்தல் முதலிய வேலைகளைச் செய்வதற்கு ஏற்ற நாள் என்று எடுத்துக் கொள்ளலாம். பூமிக்கு கீழே தோண்ட வேண்டிய குளம், கிணறு, முதலியவற்றைச் செய்வதற்கு கீழ்நோக்கு நாட்கள் ஏற்றவை. நாம் வீட்டுக்கு போர் போட வேண்டும் என்று சொன்னால் கீழ்நோக்கு நாளில் ஒன்றை எடுத்துக் கொண்டு போர் போடுவது சிறந்தது.

? அஷ்டதிக் கஜங்கள் என்கிறார்களே? அப்படி என்றால் என்ன?
– சுதர்சனம், சோளிங்கர்.

பதில்: அஷ்ட என்றால் எட்டு. திக் என்றால் திசைகள். கஜம் என்றால் யானை. திசைகள் எட்டையும் திசையானைகள் தாங்குகின்றன. கிழக்குத் திசையை ஐராவதம் என்கிற யானையும், தென்கிழக்குத் திசையை புண்டரீகம் என்ற யானையும், தெற்குத் திசையை வாமனம் என்கிற யானையும், தென்மேற்குத் திசையை குமுதம் என்கிற யானையும், மேற்குத் திசையை அஞ்சனம் என்கிற யானையும், வடமேற்குத் திசையை புஷ்பந்தம் என்னும் யானையும், வடக்குத் திசையை சர்வ பவ்மம் என்கிற யானையும், வடகிழக்குத் திசையை சுப்ரதீபம் என்கிற யானையும் தாங்குவதாகச் சொல்லுவார்கள்.

ராவணன் இந்த திசையானைகளோடு போர் புரிந்து, அதன் தந்தங்களால் தன்னுடைய மார்பை குத்தச்செய்து, அப்படி குத்திய இடங்களில் உள்ள புண்களை மறைத்துக் கொள்வதற்காக பொன்னால் செய்த ஆபரணங்களை அணிந்துகொண்டிருந்தான் என்று ராமாயணத்தில் வருகின்றது. (திசையானை விசைகலங்கச் செருச் செய்து மருப்பொசித்த இசையாலே நிறைந்தபுகழ் ராவணவோ ராவணவோ)ராமானுஜரின் புனர் அவதாரமும், வைணவ சம்பிரதாயத்தில் நிறைவு ஆச்சாரியாரான சுவாமி மணவாள மாமுனிகள், தமக்கு பின்னால் வைணவத்தை வளர்ப்பதற்காக எட்டு மகனீயர்களை நியமித்தார். அவர்களை வைணவ மரபில் “அஷ்டதிக் கஜங்கள்” என்று சொல்வார்கள். அவர்கள்;

1. வானமாமலை ஜீயர்.
(பொன்னடிக்கால் ஜீயர்)
2. பட்டர் – பிரான் ஜீயர்.
3. திருவேங்கட ராமானுஜ ஜீயர்.
4. கோவில் அண்ணா.
5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா.
6. எறும்பியப்பா.
7. அப்பிள்ளை.
8. அப்புள்ளார்.

? சில ஊர்களில் ஒரு குறிப்பிட்ட தினத்தில் பலரும் ஒரு இடத்தில் கூடி கருடதரிசனம் பார்க்கிறார்களே? உங்கள் கருத்து என்ன?
– பர்வதயாழினி, கும்பகோணம்.

பதில்: ஆம்; இன்றைக்கும் பல்வேறு ஊர்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட கிழமைகளில், கருடதரிசனம் பார்ப்பதற்கு என்று திரளுகின்ற பக்தர்கள் கூட்டம் உண்டு. வேதத்தின் வடிவம் கருடன், அவருடைய இறக்கைகள் மூன்று வேதங்களையும் குறிப்பன, மற்ற பறவைகளைப் போல கருடன் இறக்கையை உதறவிட்டு பறக்க மாட்டார், ஒளி மயமானவர், கூர்மையான பார்வையை உடையவர், நாகத்தை ஆபரணமாகப் பூண்டவர், பகவானின் கண்ணாடியாக நிற்கிறார் என்று சொல்வார்கள். அதனால்தான் விஷ்ணு ஆலய புறப்பாடு சமயத்தில் கண்ணாடி சேவை நடைபெறுகிறது.

கருடனை சேவித்தால், உடனே சொல்ல வேண்டிய மந்திரம் “மங்களாணி பவந்து;” கருடனின் குரல் கருடத்வனி என்ற ராகமாகச் சொல்வார்கள். அதில் சில கீர்த்தனைகள் உள்ளன. மங்களகரமான ராகம். சாமவேதத்திற்கு ஒப்பானது. விவரம் தெரிந்தவர்கள் திருமாங்கல்ய தாரண சமயத்தில் இந்த ராகத்தை ஆலாபனை செய்வார்கள். உறங்கச் செல்லும் போதும், ஊருக்குச் செல்லும் போதும், திருமண விசேஷங்களின் போதும் கருட மந்திரம் சொல்வது சிறப்பு.

? பாபி வேறு, மகாபாவி வேறா?
– அழகியமணவாளன், ஸ்ரீரங்கம்.

பதில்: ஆம்; சில பாவங்கள் பிராயச்சித்தத்தினால் போய்விடும். சில பாவங்கள் அனுபவித்துத்தான் கழிக்க வேண்டி இருக்கும். ஒருவரைத் திட்டுவதும், கொலை செய்வதும் ஒரே மாதிரியான அளவுள்ள பாவங்கள் அல்ல. எனவே, நம்முடைய முன்னோர்கள் பாவங்களை பல வகையாகப் பிரித்திருக்கிறார்கள். பாவம், மகாபாவம், மகாபாதகம், அதிபாதகம், சம பாதகம் என்று பல வகையுண்டு.

இதில் மகாபாவம், மகாபாதகம், அதிபாதகம், சம பாதகம் ஆகிய பாவங்களுக்கு பிராயச்சித்தம் கிடையாது. கொலை, களவு, மது, பிறன்மனை காமம், குரு நிந்தனை இவை ஐந்தும் “பஞ்சமாபாதகம்’’ எனப்படும். இதற்கான தண்டனையை அனுபவித்துத் தான் தீரவேண்டும். கோயில் சொத்துக்களைத் திருடுவது, பக்தி உள்ள சாதுக்களை நிந்திப்பது, இதெல்லாம் மகாபாதகங்கள் என்பார்கள். திருமங்கை ஆழ்வார் ஒரு பாசுரம் பாடி இருக்கிறார்;

“வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து
பிறர் பொருள் தாரம் என்று இவற்றை
நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி
எற்றி வைத்து எரி எழுகின்ற
செம்பினால் இயன்ற பாவையைப்
பாவீ தழு வென மொழிவதற்கு அஞ்சி
நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன்
நைமி சாரணி யத்துள் எந்தாய்’’

அக்னி சாட்சியாக தாம் கல்யாணம் செய்துகொண்ட மனைவியை விலக்கிவிட்டு, பிறருடைய மனைவியையும் பொருளையும் கைப்பற்றி, இவ்வுலகில் மனம் போனபடி திரிந்தவர்கள், நிச்சயம் ஒருநாள் அந்தப் பாவங்களின் பலனை அனுபவிப்பதற்கு யமலோகம் செல்வார்கள். அங்கு யமபடர்கள் வந்து பிடித்துக் கொண்டு சக்தியுள்ளவளவும் அடித்துப் புடைப்பார்கள்.

தங்களுக்கும் இளைப்பு உண்டானபோது ‘இங்கே கிடவுங்கள்’ என்று ஒரு மூலையில் தள்ளிவைத்து, செம்பினால் செய்யப்பட்டு நெருப்பிலே பழுக்கப் பழுக்கக் காய்ச்சப்பட்டு எரி வீசுகின்ற பதுமையைக் கொணர்ந்து முன்னே நிறுத்துவார்கள். ‘‘பாவீ! முன்னே பிறர் மனைவியை அணைந்தாயே; இப்போது இந்தப் பதுமையை அணைந்து கொள்” என்று சொல்லி அணைவித்துத் துன்பப்படுத்துவார்கள்.அதனால் தவறு செய்ய அஞ்சி உன் திருவடிகளில் சரணடைந்தேன் என்கிறார் ஆழ்வார். இதில் மகாபாபத்தைப் பற்றி குறிப்பு இருக்கிறது.

? குரு சீடர்களிடம் எப்படி இருக்க வேண்டும்?
– வனிதாஸ்ரீநாத், மந்தைவெளி.

பதில்: இதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கையில் இருந்து ஒரு உதாரணத்தைச் சொல்லலாம். பெரும்பாலும் மகாஞானிகள் வெறும் வார்த்தையோடு நிறுத்திக் கொள்வதில்லை. அவர்கள் வாழ்ந்துகாட்டுகின்றார்கள். இந்த சம்பவம் பாருங்களேன். ராமகிருஷ்ணர் நோய்வாய்ப்பட்டு இருக்கிறார். சீடர் சசி பூசணர் அவரை கவனித்துக் கொண்டிருக்கிறார். நல்ல குளிர் காலம். ராமகிருஷ்ண பரம ஹம்சரின் கழிவு கலயம் நிரம்பிவிட்டதால், சுத்தப்படுத்துவதற்காக சீடனான சசி பூசணர் வெளியே போயிருக்கிறார்.

சற்று நேரத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் எழுந்து பார்க்கும் போது சசி பூசணர் இல்லை. ‘‘இவன் எங்கே வெளியே போய்விட்டான்?’’ என்று சுற்று மட்டும் பார்க்கிறார். கழிவுக் கலயம் இல்லை என்ற உடனே, “இதைச் சுத்தம் செய்வதற்காகத் தான் வெளியே போயிருக்கிறான்’’ என்று அவருக்குத் தெரிகிறது. உடனே அவர் பக்கத்தில் இருந்த ஒரு போர்வையை எடுத்துக் கொண்டு ஒரு குச்சியையும் கையில் ஊன்றிக் கொண்டு வெளியே வருகிறார்.

அப்போது சசிபூசணர், ‘‘இவர் எதற்காக இந்தக் குளிரில் உடல்நிலை சரியில்லாதபோது வெளியே வருகிறார்?’’ என்று பதறிப் போய், ‘‘சுவாமி என்ன காரியம் செய்கிறீர்கள்? எதற்காக இப்போது வெளியே வருகின்றீர்கள்? கையில் போர்வையை வைத்திருக்கிறீர்களே… உங்களுக்கு நான் போர்வையை தராமல் போய்விட்டேன் போலிருக்கிறது. அது என் தவறுதான்.

வெளியே போகும் போது நான் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுவிட்டுப் போயிருக்க வேண்டும்?’’ என்று கேட்டவுடன், ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னார்; ‘‘குழந்தாய்! இந்த போர்வை எனக்காக நான் எடுக்கவில்லை. இந்த குளிரைப் பார்க்காமல் நீ வெளியே போயிருக்கிறாயே, குளிரில் நீ என்ன பாடுபடுவாயோ என்று பயந்து உனக்காக நான் இந்த போர்வையை எடுத்துவந்தேன்’’ என்று சொன்னாராம். தான் நோய்வாய்ப்பட்டிருந்த பொழுதும் தன்னை கவனிக்கும் சிஷ்யனுக்கு எந்த துன்பமும் வந்து விடக் கூடாது என்று நினைக்கக் கூடிய அந்த
உள்ளம்தான் குருவினுடைய உள்ளம்.

தொகுப்பு:  தேஜஸ்வி

The post தெளிவு பெறு ஓம் appeared first on Dinakaran.

Related Stories: