வாக்குசாவடிகளுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பது: போலீசார் தீவிர ஆலோசனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாக்குசாடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு எவ்வாறு போலீசார் பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் 18 வது பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்தார். இதனையடுத்து நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மக்கள் தேர்தல் திருவிழாவில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் பல்வேறு இடங்களில் பறக்கும் படைகள், போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் உரிய ஆவனங்கள் இன்றி எடுத்துச்செல்லப்படும் பணங்கள், நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் இரவு பகல் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரித்துறையில் இருந்து அதிகாரிகள் பல இடங்களில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிறப்பு பறக்கும் படைகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதபோல் பல இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் தற்போது களத்தில் இருந்து வீடு வீடுவாக சென்று வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேட்பாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சில கட்சி நிர்வாகிகள் தெருமுனை பிரசாரம் மற்றும் திண்ணை பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும், வேட்பாளர்கள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை துண்டு அறிக்கையாக தயார் செய்து பொதுமக்களிடம் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புதுக்கோட்டை எஸ்பி வந்திதா பாண்டே மேற்பார்வையின் கீழ் எஸ்பி அலுவலகத்தில் தேர்தல் கட்டுபாட்டு அறை செயல்பட்டு வருகின்றனர். காவலர்கள் பணியில் 24 மணி நேரமும், பணியில் இருந்து வருகின்றனர். வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குபதிவின் போது யார் யார் எந்தெந்த வாக்கு சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

மேலும் எப்படி பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும் என்றும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குபதிவு முடிந்தவுடன் மாலையில் வாக்குபெட்டிகளை எப்படி பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்வது, பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் அந்த பகுதியில் பிரச்னை ஏற்படும்போது எவ்வாறு உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து கூடுதல் போலீஸ் பெறுவது, முதற்கட்டமாக அருகில் உள்ள ஸ்டேசன்களுக்கு எப்படி தகவல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் பிரசாரத்திற்கு வரும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவது, அனைத்து இடங்களிலும் எவ்வாறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது எவ்வாறு கண்காணிக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

The post வாக்குசாவடிகளுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பது: போலீசார் தீவிர ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: