சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என நாட்டு மக்களுக்கு சிறையில் இருந்து செய்தி அனுப்பியதாக அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு 9.05 மணி அளவில் அவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மார்ச் 28ம் தேதி வரை முதல்வர் கெஜ்ரிவாலை 7 நாள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். இந்நிலையில் நாட்டு மக்களுக்கு சிறையில் இருந்து செய்தி அனுப்பியதாக அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்; எந்த சிறையும் என்னை நிரந்தரமாக அடைத்து வைத்திருக்க முடியாது. சிறையில் இருந்து வெளிவந்தவுடன் நான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். நான் கடுமையான நெருக்கடிகளை சந்தித்துள்ளேன்; இந்த கைது என்னை ஆச்சரியப்படுத்தவில்லை என்று கூறியதாக கூறியுள்ளார்.

The post சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்: அரவிந்த் கெஜ்ரிவால் appeared first on Dinakaran.

Related Stories: