சிஎஸ்கே கேப்டன் பதவி எனக்கு கிடைத்த பாக்கியம்: ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி

சென்னை: 17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி மே 26ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்டஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு 8 மணிக்கு நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் சிஎஸ்கே அணியை இதுவரை வெற்றிகரமாக வழிநடத்தி 5 முறை சாம்பியன் பட்டம் வெல்ல வைத்த டோனி, நேற்று திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி ருதுராஜ் கூறியதாவது: “டோனியின் இடத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்படுவது மிகப்பெரிய பொறுப்பான வேலை. அணியில் மூத்த வீரர்களான டோனி, ஜடேஜா, ரகானே ஆகியோர் என்னை வழிநடத்த இருக்கிறார்கள். அதனால் கேப்டன் பொறுப்பு குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. தான் இதை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். கேப்டன் பொறுப்பை நன்றாக உணர்கிறேன். இது எனக்கு ஒரு பாக்கியம். அதைவிட இது பெரிய பொறுப்பு. ஆனால் எங்களிடம் இருக்கும் சிறந்த குழுவின் காரணமாக நான் உற்சாகமாக இருக்கிறேன். எல்லோரும் நல்ல அனுபவம் பெற்றவர்கள். அதனால் நான் கேப்டன்ஷியில் தனியாக பெரிதாக ஒன்றும் செய்வதற்கு கிடையாது, என்றார்.

சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், “அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே டோனி இந்த முடிவை எடுத்துள்ளார். கேப்டன்சி குறித்த பயிற்சி வகுப்புகளில் ருதுராஜ் சிறப்பாக செயல்பட்டார். எனவே புதிய கேப்டனாக அவரை நியமனம் செய்ய இதுவே சரியான நேரம். அந்த அடிப்படையில் தான் அவர் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்படுவதில் எங்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் கிடையாது. மூத்த வீரர்களின் ஆலோசனையை பெற்று அவர் களத்தில் சிறப்பாக செயல்படுவார். டோனி இந்த சீசனில் எல்லா போட்டிகளிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கிறேன். அவரது உடல் தகுதி முன்பை விட மிகச் சிறப்பாக இருக்கிறது’’ என்றார்.

The post சிஎஸ்கே கேப்டன் பதவி எனக்கு கிடைத்த பாக்கியம்: ருதுராஜ் கெய்க்வாட் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: