ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர் வேண்டாம்’ என எழுதிய பெண்ணுக்கு 8 நாட்கள் சிறை தண்டனை!!

மாஸ்கோ : ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர் வேண்டாம்’ என எழுதிய பெண்ணுக்கு 8 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனிய மக்கள் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். எந்த ஒரு பிரச்னைக்கும் போர் தீர்வாகாது என உக்ரைனுக்கு ஆதரவாக, ரஷ்யாவுக்கு எதிராகப் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.ரஷ்யாவில் இருந்தும் சிலர் உக்ரைனிய மக்களுக்கு இரக்கம் காட்டியதோடு, தங்களுடைய அரசிடம் போரை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இப்படி தன்னுடைய நாட்டில் இருந்து கொண்டே தங்களுக்கு எதிராகப் பேசுபவர்களின் குரலை, ரஷ்ய அரசு ஒடுக்கி வருகிறது. அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை அளித்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவில் அதிபர் தேர்தல் அண்மையில் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதையே அதிபர் புடின் மீண்டும் வெற்றி பெற்றார். கடந்த 1999ம் ஆண்டு முதல் அதிபர் அல்லது பிரதமராக புதின் ரஷ்யாவை வழிநடத்தி வருகிறார். இதனிடையே வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்குச்சீட்டில் ‘போர் வேண்டாம்’ என எழுதிய பெண்ணுக்கு 8 நாட்கள் சிறை தண்டனை வழங்கியுள்ளது அந்நாட்டு அரசு. மேலும் அந்த பெண்ணுக்கு ரூ. 40,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ராணுவத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டி இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர் வேண்டாம்’ என எழுதிய பெண்ணுக்கு 8 நாட்கள் சிறை தண்டனை!! appeared first on Dinakaran.

Related Stories: