ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தமிழக பாஜவில் மீண்டும் இணைந்தார் தமிழிசை: கஷ்டமான முடிவை இஷ்டமான முடிவாக எடுத்ததாக பேட்டி

சென்னை: தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்திரராஜன் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மீண்டும் நேற்று பாஜவில் இணைந்தார். தமிழக பாஜ தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் கடந்த 25 ஆண்டுகளாக பாஜவில் உறுப்பினர் மற்றும் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளார். இதனால், அவருக்குத் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் பதவியை பாஜ தலைமை வழங்கியது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு தமிழிசை கடிதம் அனுப்பினார். அவரது ராஜினாமாவை குடியரசு தலைவரும் ஏற்றுக் கொண்டார்.

பிரதமர் மோடி, இவரை தேர்தலில் போட்டியிட கூறியதாகவும், எனவே தான் பதவியை ராஜினாமா செய்திருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல் முறையாக நேற்று சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜ தலைமை அலுவலகத்துக்கு தமிழிசை வந்தார். அவரை மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். தொடர்ந்து, கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழிசை சவுந்திரராஜன் பாஜவில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார். அவருக்கு உறுப்பினர் கார்டை, மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார். பழைய உறுப்பினர் எண் கொண்ட அட்டையே தமிழிசைக்கு வழங்கப்பட்டது.

பின்னர் தமிழிசை அளித்த பேட்டியில், ‘‘மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது நான் கஷ்டமான ஒரு முடிவை எடுத்திருப்பதாக சொன்னார். ஆனால் உண்மையிலேயே கஷ்டமான முடிவை இஷ்டமான முடிவாக எடுத்திருக்கிறேன். 400 நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமரிடம் சமர்ப்பிப்பதற்காக நான் இங்கு இணைந்து இருக்கிறேன் என்று அண்ணாமலை சொன்னார். நான் சொல்வது என்னவென்றால், 400 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நானும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதற்காக நான் இணைந்து இருக்கிறேன். ஒரு சதவிகிதம் கூட அவ்வளவு பெரிய பதவியை விட்டுவிட்டு வந்தேன் என்று எனக்கு தோன்றவில்லை. ஏனென்றால் அந்த பதவியை விட பாஜ உறுப்பினர் என்பதை தான் நான் மிகப்பெரிய பதவியாக கருதுகிறேன்’’ என்றார்.

The post ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் தமிழக பாஜவில் மீண்டும் இணைந்தார் தமிழிசை: கஷ்டமான முடிவை இஷ்டமான முடிவாக எடுத்ததாக பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: