சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ₹100 கட்டணத்தில் ரோப் கார் மூலம் 11 நாளில் 12 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

*முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வருகை அதிகரிப்பு

சோளிங்கர் : சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ₹100 கட்டணத்தில் ரோப் கார் சேவை தொடங்கிய நிலையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது. ரோப் கார் மூலம் 11 நாளில் 12 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 108 திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற யோக லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த மலைக்கோயிலுக்கு 1,305 படிக்கட்டுகள் ஏறிச்சென்று பக்தர்கள் லட்சுமி நரசிம்மரை தரிசித்து வந்தனர். இதனால் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பெரும்பான்மையான பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

எனவே மலை அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்கு செல்ல ரோப்கார் அமைத்துத்தர வேண்டும் என 25 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசால் கடந்த 2006ம் ஆண்டு ₹6.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் 2014ம் ஆண்டு ₹9.5 கோடி மறு மதிப்பீட்டில் ரோப்கார் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு காரணங்களால் ரோப்கார் அமைக்கும் பணிகள் தாமதமானது.

இந்நிலையில் 2021ம் ஆண்டு திமுக அரசு அமைந்தவுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ரோப் கார் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தினார். இதையடுத்து ரோப்கார் அமைக்கும் பணிகள் கடந்த மாதம் நிறைவு பெற்றது. மேலும் நன்கொடையாளர்கள் நிதியிலிருந்து ₹12 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்குவதற்கு அடிப்படை வசதிக்கான கட்டுமான பணிகளும் நிறைவுற்றதையடுத்து கடந்த 8ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக ரோப் கார் சேவையை தொடங்கி வைத்தார்.
இந்த ரோப் காரில் 8 கேபின்கள் இருக்கின்றன.

4 கேபின்கள் மேலே செல்லும், மீதமுள்ள 4 கேபின்கள் ஒரே நேரத்தில் கீழே நகரும் வகையில் அமைக்கப்படுள்ளன. ஒவ்வொரு கேபினிலும் 4 பேர் பயணிக்கலாம். அதாவது ஒரே நேரத்தில் 16 பேர் மேலே செல்லவும், 16 பேர் கீழே இறங்கவும் முடியும். இதற்காக மேலே சென்று மீண்டும் கீழே இறங்க ₹100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இல்லாவிட்டால் மேலே செல்லவோ, கீழே இறங்கவோ ஒருமுறை ரோப் கார் சேவைக்கு ₹50 மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும். ரோப்கார் சேவை துவங்கப்பட்டதைத் தொடர்ந்து பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. இந்த ரோப் கார் வசதி மக்களிடையே பெரிதும் ஈர்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரோப் கார் சேவை கடந்த 8ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது வரை பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்தும் நிலையில், கடந்த 11 நாட்களில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ரோப் காரில் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர்’ என்றனர்.

தமிழக முதல்வருக்கு பக்தர்கள் நன்றி

ரோப் கார் சேவை குறித்து பக்தர்கள் கூறுகையில், ‘ரோப் கார் சேவை பயன்பாட்டுக்கு வந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மலையேறி சென்று சுவாமியை தரிசிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த நிலையில், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோரின் தீவிர முயற்சியாலும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கையாலும் தற்போது இந்த ரோப்கார் சேவை கிடைத்துள்ளது. இது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ரோப் கார் சேவையை தொடங்கி வைத்த தமிழக முதல்வருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றனர்.

The post சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ₹100 கட்டணத்தில் ரோப் கார் மூலம் 11 நாளில் 12 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: