ஆறுமுகப் பெருமானின் பன்னிரு கரங்களும் அதன் பணிகளும்

ஆறுமுகப் பெருமானின் ஆறுதிருமுகங்களுடன் திகழ்வதற்கு ஏற்ப பன்னிருகரங்கள் கொண்டவராகக் காட்சி தருகிறார். இதையொட்டி பன்னிரு கரத்தோன் என்பது அவருக்குப் பெயராயிற்று அன்பர்கள் பன்னிருகை எனும் பெயரைச் சூடிக்கொள்கின்றனர். அவரது பன்னிரண்டு கரங்களும் என்னென்ன செயலைச் செய்கின்றன என்பதை அன்பர்கள் பலவிதங்களில் பாடி மகிழ்கின்றனர்.சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள திருமுருகாற்றுப் படையிலும் அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்வந்த கந்தர் கலிவெண்பாவிலும் முருகனின் பன்னிரு கரங்கள் செய்யும் செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இரண்டும் ஒரே மாதிரியாக அமையவில்லை என்றாலும் அவற்றைத் தொடர்ந்து அறிந்து மகிழலாம்.

சங்க இலக்கியமான திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் முருகனின் பன்னிரண்டு கரங்களைப் பற்றிக் கூறுமிடத்து. ஒருகையில் அங்குசம், மற்றோர் கையில் ஈட்டி, ஒருகையில் மணி என்று அவர் மூன்று ஆயுதங்களை மட்டுமே ஏந்தியவாறு யானைமேல் வருவதாகக் கூறுகிறார். மற்றைய ஒன்பது கரங்களின் மூலம், மார்பின் நடுவே வைத்து ஆத்ம ஞானத்தை
உபதேசித்தல், வான்வழி செல்லும் அந்தணர்க்கு அருள்செய்வது, தன் மார்பில் அணிந்துள்ள மாலையை பற்றுவது, தொடைமீது வைத்துக் கொண்டிருப்பது. வான் அர மகளிர்க்கு மண மாலை சூட்டமாலை ஏந்தியிருப்பது, மழைபொழியும் படி செய்வது எனும் செயல்களைச் செய்வதாகவும் குறித்துள்ளார்.அவனது பன்னிருகரங்களில் ஒரு கை மணி மாலை தவழும் மார்பிடை இருந்து உயிர்களுக்கு ஆத்மஞானத்தை உபதேசிக்கிறது. ஒரு கை வேலேந்துகிறது.

ஒரு கை துறவியர்களைப் பாதுகாக் கிறது. அதற்கிணையான கை மடிமீது வைக்கப்பட்டுள்ளது.ஒரு கை அங்குசத்தை ஏந்த, மற்ற கை யானையை செலுத்தும் தொரட்டியைத் தாங்கியுள்ளது. ஒன்று வேற்படையை சுழற்ற, அதற்கிணையான கைகேயத்தைத் தாங்குகிறது.நான்காம் இணை கைகளில் ஒன்று மார்பிடையும், மற்றது அதற்குச் சற்று கீழேயும் உள்ளன.ஐந்தாம் இணைக் கையில் வலது கை போரிட, சேனைக்கு உத்தரவு கொடுக்க அதற்கிணையான கை காவலைக் குறிக்கும் கனத்த மணியை ஒலிக்கிறது. ஆறாம் இணைக் கைகளில் இடது கை மழை மேகத்தை பொழிவிக்கிறது. அதற்கிணையான வலதுகை வான்அரமகளுக்கு மணமாலையைச் சூட்டுகிறது.கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபரர் முருகன் பன்னிரண்டு கரங்களிலும் ஏந்தயுள்ளவற்றைக் குறிப்பிடும்போது.

1. தேவர்களுக்கு அமுதம் அளிக்க அமுதகும்பத்தைத் தாங்கிய கரம்.
2. சூர் அரமகளிரை மனம் மகிழத் தழுவி மகிழும் கரம்.
3. மழையை பொழிவிக்கும் கரம்.
4. மார்பில் அணிந்துள்ள மாலைகளை சரி செய்து கொள்ளும் கரம்.
5. மார்பின் மீதுவைத்து ஆத்ம ஞானத்தை உபதேசிக்கும் கரம்.
6. மாறாத சுகத்தில் இருப்பதைக் குறிக்கும் வகையில் இடைமீது வைத்து ராஜலீலா சுகத்தைக் குறிக்கும் கரம்.
7. வளை எனும் ஆயுதம் ஏந்திய கரம்.
8. மணியை ஒலிக்கும் கரம்.
9. ஆனையை செலுத்தும் அங்குசம் ஒருகரம்.
10. கேடயம் ஏந்தி தன்னைக் காத்துக் கொள்ளும் கரம்.
11. ஒளிபொருந்திய வாளைக் கொண்டகரம்.
12. இடையில் வைத்து மகிழ்ச்சியில் ஆழ்ந்திருப்பதைக் குறிக்கும் வகையில் வைத்துள்ள கரம்.

என பன்னிரண்டு கரங்களின் பணியையும் குறிப்பிடுகின்றது. இதில் அங்குசம், வாள், கேடயம், வளை, மணி என்று ஐந்து ஆயுதங்கள் மட்டுமே முருகன் ஏந்தியிருப்பதாகக் கூறப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.அவனது ஆறுதிருமுகத்திற்கு இணையான வேலைகளை அவனது பன்னிரண்டு கரங்களும் செய்கின்றன.

ஆறுமுகப் பெருமானின் ஆறுமுகங்களும் அதன் பணிகளும்

ஆறுமுகம் என்பதே மந்திர மொழியாகும். அடியார்கள் ஆறுமுகம் ஆறுமுகம் என்று உச்சரித்து மேன்மை அடைகின்றனர். அடியவர்கள் ஆறுமுகப் பெருமானின் கருணைகூர் முகங்கள் ஆறும் செய்யும் பணிகளைப் பலவாறு பட்டியலிட்டுள்ளனர். சங்க நூலான திருமுகாற்றுப் படையும் செந்தூர் முருகன் அருள்பெற்ற குமரகுருபரர் பாடிய கந்தர் கலிவெண்பாவும் ஆறுமுகம் செய்யும் பணிகளைப் பட்டியலிட்டு கூறுகின்றன. அவற்றை இங்கே சிந்திக்கலாம்.

முதலில் திருமுருகாற்றுப்படை கூறும் செய்தியைப் பார்ப்போம்.ஆறுமுகச் செவ்வேளின் ஒருமுகம் அசுரர்களின் தலைவனான சூரனை அழிக்கிறது. ஒரு முகம் உயிர்களைத் தொடர்ந்து வரும் பழவினைகளை அறுத்து அவற்றை பேரின்ப நிலையில் திளைக்க வைக்கிறது.ஒரு முகம் வேதங்களையும் ஆகமங்களையும் வழங்குகிறது. ஒருமுகம் உயிர்களை பற்றியுள்ள பாச இருளையும் அதனால் வரும் துன்பங்களையும் விலக்கி தாமரைபோல் மலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் அடைய வைக்கிறது.கந்தர் கலிவெண்பாவின்படி, முருகனின் ஒருமுகம் உலகின் பெரிய கரிய இருளை அகற்றும் வகையில் பல ஒளிக் கதிர்களைப் பரப்புகிறது.இரண்டாவது முகம் அன்பர்களின் வேண்டுதலை உவந்து ஏற்று அவர் வேண்டும் வரங்களை அளிக்கிறது.

மூன்றாவது முகம் வேத மந்திரங்களை ஓதி வேள்விகளைச் செய்யும் தவமுடையோர்க்கு இடையூறு வராதபடி காக்கின்றது. வேதவிதிப்படி செய்கின்ற வேள்விகளாலேயே தேவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள், என்றும் அவர்கள் அருளால் மழை பொழிகிறது. பூமி விளைந்து நற்பலனைத் தருகிறது. அதன் பொருட்டு முருகன் வேள்விகளைக் காக்கும் தெய்வமாகப் போற்றப்படுகிறான்.
நான்காவது முகம் மெய் நூல்களான தத்துவ நூல்களாலும் அறிந்து கொள்ள முடியாத நுண்பொருளை சான்றோர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கி சந்திரனைப் போல் அனைத்து திசைகளிலும் ஒளி வீசி நிற்கும்.

ஐந்தாவது முகம் பகைவர்களையும், அசுரர்களையும் வெரட்டி கலங்கி ஓடும்படிச் செய்கிறது.ஆறாவது முகம் குறவர் குலப்பாவையான வள்ளியோடு சிரித்து மகிழ்ச்சியில் கலந்திருக்கிறது.
நூல்கள் அவரது ஆறுமுகங்களின் செயல்களைப் பலவாறு பட்டியலிட்டாலும் அவை அன்பர்களுக்கு அருள்புரிவதோடு அஞ்சேல் என்று அபயம் அளிப்பதாகவும் இருக்கின்றன.
பின்னாளில் அருணகிரிநாதர் ஆறுமுகம் செய்யும் செயல்களை பட்டியலிட்டு

ஏறுமயில் ஏறி விளையாடுமுகம் ஒன்று
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்று
கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று
குன்றுருவ வேல் வாங்கி நின்றமுகம் ஒன்று

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்று
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று
ஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்
ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே

என்று பாடுவதைக் காண்கிறோம். இப்பாடலே பெருமளவில் அன்பர்களால் ஓதப்பட்டு வருவதாகும்.அடியவர்கள் பலரும் ஆறுமுகன் தன் மலர்ந்த வதனங்களால் செய்யும் அருளைப்பாடி மகிழ்ந்துள்ளனர்.

ஆட்சிலிங்கம்

The post ஆறுமுகப் பெருமானின் பன்னிரு கரங்களும் அதன் பணிகளும் appeared first on Dinakaran.

Related Stories: