ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்காத பாஜக… அதிருப்தி அடைந்த ஒன்றிய அமைச்சர் ராஜினாமா!!

பாட்னா: பா.ஜ.க. கூட்டணியுடனான அதிருப்தியால் ஒன்றிய அமைச்சர் பசுபதி பராஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீகார் மாநிலத்தில் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், ஒன்றிய அமைச்சரும், பஸ்வான் தம்பியுமான பசுபதிகுமார் பராஸ் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி, ஜிதன்ராம் மஞ்சி தலைமையிலான கட்சி, முன்னாள் அமைச்சர் உபேந்திரா குஷ்வாகா கட்சிகள் இடம் பெற்றன.

இந்த நிலையில் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் தலைமையிலான லோக்ஜனசக்தி கட்சியும் பா.ஜ கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்தது. இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ தலைவர் நட்டா ஆகியோர் சம்மதம் தெரிவித்து 5 சீட் ஒதுக்கியதாக தகவல் வெளியானது. மேலும் சிராக் பஸ்வான் சித்தப்பா பராஸ் போட்டியிட்ட ஹாஜிப்பூர் தொகுதியும் சிராக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதை அறிந்த ஒன்றிய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் முறையான அறிவிப்பு வெளிவந்ததும், நாங்கள் பா.ஜ கூட்டணியில் இருந்து வெளியேறுவது பற்றி முடிவு செய்வோம்’ என்றார்.

இந்த நிலையியல் நேற்று பா.ஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு முறையாக அறிவிக்கப்பட்டது. அதன்படி பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதியிலும் பா.ஜ 17, நிதிஷ் தலையைிலான ஐக்கிய ஜனதாதளம் 16, சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 சீட், முன்னாள் முதல்வர் ஜிதம்ராம் மஞ்சி கட்சிக்கு ஒரு தொகுதி, உபேந்திரா குஷ்வாகா கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஒன்றிய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் தலைமையிலான லோக்ஜனசக்தி கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கவில்லை. அந்த கட்சி பா.ஜ கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டது.

இதையடுத்து ஒன்றிய அமைச்சரும், பஸ்வான் தம்பியுமான பசுபதிகுமார் பராஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  மோடி மிகப்பெரிய தலைவராக இருந்தாலும், தமக்கும், தன்னுடைய கட்சிக்கும் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாரஸ் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு, லோக் ஜன் சக்தி கட்சியில் பிளவு ஏற்பட்டபோது பாஜகவுக்கு ஆதரவளித்து மத்திய அமைச்சர் ஆனார் பாரஸ். பசுபதிகுமார் பராஸ் பாஜக அமைச்சரவையில் உணவு பதப்படுத்தும் தொழில் துறைக்கு அமைச்சராக இருந்து வந்தார். இதனிடையே பீகாரில் ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகளின் “இந்தியா” கூட்டணியில் பசுபதி குமார் பராஸின் ராஷ்டிரிய லோக் ஜன சக்தி இணையக் கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்காத பாஜக… அதிருப்தி அடைந்த ஒன்றிய அமைச்சர் ராஜினாமா!! appeared first on Dinakaran.

Related Stories: