பார்த்தசாரதி! அவன் பாதமே கதி!!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தெப்பம் 7 நாட்கள். அதனை ஒட்டி திருவல்லிக்கேணி தரிசனம் செய்வோம். ஓலை கட்டி தூது நடந்த எம்பெருமான், தன் பக்தனுக்கு சாரதியாய் இருந்து, அவன் தன் காலால் பெருமாள் முதுகில் தீண்டி அழுத்தி, ‘‘அப்படி ஓட்டு, இப்படி ஓட்டு’’ என்று விரட்டிச் சொல்லும் நிலைக்கு ஆட்படுத்திக்கொண்டான் என்றால், அவன் எளிமைக்கு எல்லை நிலம் ஏது? பார்த்தனுக்கு கீதை உபதேசம் செய்து, அவனை முன்னிட்டு நம் எல்லோரின் மயக்கத்தைத் தீர்த்த எம்பெருமான், தேரோட்டியாய், பார்த்தசாரதியாய், முறுக்கிய மீசையும், முகம் முழுக்க போரில் தன் பக்தனுக்காக ஏற்ற தழும்புகளுமாக, கருணைக் கடவுளாகக் காட்சி தரும் திருத்தலம்தான் திருவல்லிக்கேணி.

வங்கக் கடலோரம், வான் தொடும் கோபுரம் காட்சித் தர, இதோ அவன் திருக்கோயில் முன்னே இருகரம் கூப்பி நிற்கின்றோம். இத்தலத்தின் பெருமாளை நோக்கி பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் கூறுகின்றார். ‘‘நீ உன்னை இகழ்ந்தவர்களையும், எதிர்த்தவர்களையும் அவர்களின் குற்றங்களை மறந்து மன்னித்து உன் பால் சேர்த்துக் கொள்ளும் நேர்மை குணம் பெற்றுள்ளாய். இதற்கு எத்தனையோ உதாரணங்கள் காட்டலாம். உன்னிடம் சரணமடைந்தவர்களைக் கைவிட்டதில்லை. உன் கருணைக்கு அளவே இல்லை. அப்பேர்பட்ட நீ, நேர்மையில்லாத கொடிய உள்ளம் பெற்ற அடியேனின் நீசச் செயல்களையும் பொறுத்தருளி, என் மீதும் இரக்கம் காட்டு’’ என்கிறார்.

“திரிந்துழலுஞ் சிந்தைதனைச் செவ்வே நிறுத்திப்
புரிந்து புகன் மின்? புகன்றால் – மருந்தாம்
கருவல்லிக் கேணியா மாக்கதிக்குக் கண்ணன்
திருவல்லிக் கேணியான் சீர்’’.

திருமங்கையாழ்வார் பதிகம் முழுவதிலும் ‘‘திருவல்லிக்கேணி கண்டேனே’’
என்று வாயாரப்பாடி பரவுகிறார்.
“வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை
விழுமிய முனிவரர் விழுங்கும்
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை
குவலயத்தோர் தொழுதுஏத்தும்
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை
ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும்
மாட மா மயிலைத்
திருவல்லிக்கேணி கண்டேனே’’

நுட்பமான பாசுரம். எம்பெருமான்தான் வேதம். வேதத்தின் முடிவான பொருளும் அவனே. இந்த உலகத்தில் ஒவ்வொருவருடைய விருப்பம் ஒவ்வொருவகையாக இருக்குமாதலால் அவரவர்களுடைய விருப்பத்திற்கிணங்க உபாயங்களையும் பலன்களையும் வேதமூலமாகக் காட்டிக் கொடுத்திருக்கின்றான் என்பதால், வேதத்தின் சுவைப்பயனை என்றார் ஆழ்வார். வியாசர், பராசரர், வால்மீகி முதலிய முனிவர்களுக்கு இனிய கனிபோலே மிகவும் போக்யனாயிருப்பது பற்றி “விழுமிய முனிவர் விழுங்கும் கோதிலின் கனியை” என்றார்.

இத்தனையும் எங்கோ மேல் உலகத்தில் இல்லை. இந்த திருவல்லிக்கேணியில் கண்டேன் என்கிறார் திருமங்கை ஆழ்வார். பிரம்மாண்ட புராணத்தில், “பிருந்தாரண்ய மகாத்மியம்’’ என்ற பகுதியில், இத்தலத்தின் பெருமை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பிருந்தம் என்றால் துளசி. ஆரண்யம் என்றால் காடு. எனவே “பிருந்தாண்யம்’’ என்றால் “துளசிவனம்’’ என்று பொருள். திருவல்லிக்கேணி என்பது ஒரு காலத்தில் துளசிவனமாக இருந்தது.

இனி தலபுராணம் வருவோம்ம ஹாபாரதத்தில் மிகவும் ஈடுபாடுகொண்ட சுமதி என்றொரு மன்னன் இருந்தான். அவனுக்குப் பெருமாளைத் தேரோட்டியாய்க் காணவேண்டும் என்று ஆசை. அதற்காக நீண்ட தவம் செய்தான். அவன் தவம் இருந்த இடம் திருமலை. வரம் கொடுக்கும் வள்ளல் அல்லவா பெருமாள். சீனிவாச பெருமாள் அசரீதியாய் குரல் கொடுத்தார். ‘‘மன்னனே, நீ விரும்பிய தோற்றத்துடன் என்னைக் காண வேண்டும் என்றால், திருவல்லிக்கேணிக்கு வா,’’ என்றார். சுமதியும் இங்கு வந்து பார்த்தசாரதியைத் தரிசனம் செய்தான் என்பது வரலாறு.
எப்படித் தரிசனம் செய்தான் என்பதற்குப் பின்வரும் கதை.

வேதவியாசருக்கு ஆத்ரேய மகரிஷி என்னும் ஒரு சீடர் இருந்தார். அவர் தம் குருவின் கட்டளைப்படி, இத்தலத்திற்கு தவம் செய்ய வந்த பொழுது, அவரால் கொடுக்கப்பட்ட கண்ணனின் திவ்ய மங்கள விக்ரகம் ஒன்றையும் கொண்டு வந்தார். அந்த விக்கிரகம், அற்புத அழகோடு இருந்தது. ஒரு கையில் சங்கு ஏந்தி, ஒருகை தன் திருவடியில் சரணம் அடையக் காட்டியது. எல்லா தர்மங்களையும் அறவே தியாகம் செய்துவிட்டு, என் ஒருவனையே சரணடைக. உன்னை நான் எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிப்பேன். கவலைப்படாதே. (ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் ரணம் வ்ரஜஅஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஶ்யாமி மா ஸுச) என்ற கீதையின் சாரமான பொருளுக்குச் சான்றாக விளங்கிய உருவம் அது.

பிருந்தாரண்யம் வந்த ஆத்ரேய மகரிஷி, சுமதி என்கிற மகரிஷியைக் கண்டு (சுமதி மன்னர் வேறு) மகிழ்ந்து தம் வருகையைக் கூற, இருவரும் பெருமாளை கடற்கரை ஓரமான இந்த ஷேத்திரத்தில் மந்திர பூர்வமாக பிரதிஷ்டை செய்து வணங்கி வந்தார்கள்.

“சரணம் ஆகும் தனதாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்’’
– என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தில் சொன்னபடி, பார்த்தசாரதியான
எம்பெருமானை வழிபட்டு, அவ்விருவரும் மோட்ச உலக பெற்றனர்.

அப்படிப்பட்ட எம்பெருமானைக் கண்டு வழிபடுமாறு ஏழுமலையான் கட்டளைஇட, சுமதி மன்னன் இங்கே வந்து வழிபட்டான். வேங்கடத்து பெருமானால் காட்டப்பட்டதால், பெருமாளுக்கு வேங்கடகிருஷ்ணன் என்ற திருநாமம் உண்டாயிற்று. திருக்கோயில் விமானம் மிகவும் சிறப்பானது. “ஆனந்த பிரணவ புஷ்பக சேஷ தைவீக’’ விமானங்கள். தீர்த்தத்திற்கு “கோவிந்த கைவீரனி சரஸ்’’ (அல்லிக் கேணி தீர்த்தம்) என்று பெயர். இத்தீர்த்தத்தில், இந்திர, சோம, அக்கினி, மீன, விஷ்ணு என ஐந்து தீர்த்தங்கள் சூழ்ந்துள்ளதாம். கடலுக்கு மிக அருகில் இருந்தாலும், மீன்கள் இதில் வசிப்பதில்லை. திருமஞ்சனத்திற்கு இதுவே பயன்படுகிறது. இந்தத் திருக்குளத்தில் ஒருமுறை நீராடினால் கங்கையில் அறுபதாயிரம் ஆண்டுகள் நீராடிய பலன் கிடைக்குமாம். பிரம்மஹத்தி தோஷமும் நீங்குமாம். புஷ்கரணியில்தான் பார்த்தசாரதி தெப்போற்சவம் ஏழு நாட்கள் நடைபெறுகிறது.

சிறப்பான திருவிழா

இந்த காட்சியை அப்படியே அழகான பாடலாக்கியிருக்கிறார் உளுந்தூர் பேட்டை சண்முகம். சீர்காழியின் கணீர்குரலில் கேட்க, நம் கண்முன் பார்த்தசாரதி தோன்றுவார்.
“கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான் கேட்டவர்க்கு கேட்டபடி வாழ்வு தருகிறான்..

அன்பு வள்ளல் வருகிறான்..
அன்பு வள்ளல் வருகிறான்..வருகிறான்..(கீதை சொன்ன)
நீல மேனி கோலம் காண கண்கள் மறுக்குமோ- அவன்
நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் நெஞ்சம் மறக்குமோ
வீரன் வடிவும் மீசை அழகும் வெற்றி ரகசியம் – அவன்
பாரதப் போர் நடத்தி வைத்த யுக்தி அதிசயம்
அது முக்தி ரகசியம் (கீதை சொன்ன)

அல்லிக்கேணி குளத்தின் அருகில் கள்ளன் சிரிக்கிறான் – திரு
அல்லிகேணி குளத்தின் அருகில் கள்ளன் சிரிக்கிறான்
அன்பு கொண்டு வருபவர்க்கு ஒன்று உரைக்கிறான்
சொல்லும் மந்திரம் எட்டெழுத்தில் சொர்க்கம் தோன்றுதே (2)
சொல்ல சொல்ல அய்யன் தோற்றம் வானில் நீண்டதே
விஸ்வரூபம் தோன்றுதே (கீதை சொன்ன)

பார்த்தனுக்கு பாடம் சொன்ன கீர்த்தன் வருகிறான்
பசித்தவர்க்கு விருந்தளிக்க அமுது கொணர்கிறான்
காப்பதற்கு கையில் ஏந்தும் சங்கு சக்கரம் – அதன்
கழல்களுக்கு விளக்கம் தானே பிரம்ம சூத்திரம்
நான்கு வேத சாஸ்திரம் (கீதை சொன்ன)

இத்தலத்தில் இறைவனைக் காட்சி கண்டவர்கள் சுமதி மகராஜன், பிருகு மகரிஷி, மதுமான் மகரிஷி, சப்த ரோமரிஷி, அத்திரி மகரிஷி, அனிருத்தன், மார்க்கண்டேயன், அர்ஜுனன். அழகிய அல்லி மலர்கள் நிறைந்த குளம். எனவே இப்பகுதிக்கு அல்லிக் கேணி என்று பெயர் உண்டாயிற்று என்பர். திருமயிலை எனப்படும் மயிலாப்பூரின் பகுதியாக திருவல்லிக்கேணியும் ஒரு காலத்தில் குறிக்கப்பட்டன. ‘‘மாதர்கள் வாழும் மாட மாமயிலை திருவல்லிக் கேணி’’ என்றே திருமங்கை ஆழ்வார் பாசுரத்தில் வருகிறது.

மூலவர், பெரிய மீசையுடன் எழுந்தருளியுள்ள ஸ்தலம் இது ஒன்றுதான். மூலவருக்கு இரண்டே திருக்கரங்கள். வலது கரத்தில் சங்கம். இடது கரத்தில் வெறும் சாட்டையை வைத்துக் கொண்டு காட்சி தருகிறான். எந்த ஆயுதமும் எடுக்காமல் வெறும் சாட்டையை மட்டும் வைத்துக் கொண்டே பாரதப்போர் முடித்தான். போரின் தொடக்கத்தில், இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு கொடுத்ததால், போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார்.

“பற்றலர் வீய கோல் கையில் கொண்டு
பார்த்தன்தன் தேர் முன் நின்றானை”
– என்பது ஆழ்வார்கள் வாக்கு.

பொதுவாக உட்கார்ந்துதான் தேரை ஓட்டுவது வழக்கம். இங்கே மட்டும் ஏன் நின்றான் என்று சொன்னால், ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. தன்னை நம்பி போர் புரியும் அர்ஜுனன் மீது எந்த அம்பும் பட்டுவிடக் கூடாது என்றால், தான் அமர்ந்திருந்தால் முடியாது. தன் பின்னால் நிற்கக்கூடிய அர்ஜுனனின் முகத்தில் மீதும், உடம்பின் மீதும் எதிரிகளுடைய அம்பு பாய்ந்து
விடும். தன்னுடைய தோழனின் மார்பிலும், முகத்திலும், தோள்களிலும் அம்பு பாயக் கூடாது என்பதால், அர்ஜுனன் தேர்முன் நின்று, அர்ஜுனன் மீது வீசப்படும் அம்புகளையும், ஆயுதப் பிரயோகங்களையும் தன்மீது வாங்கிக் கொண்டான். அதனால்தான், இப்பொழுதும் திருவல்லிக்கேணியிலே உற்சவரைப் பார்த்தால், முகத்தில் அம்பு தோய்ந்த தழும்புகள்தான் நிறைந்திருக்கும். அப்படிப்பட்ட தியாக மூர்த்தியவர்.

இங்கு ஐந்து மூர்த்திகள் ஒருங்கே எழுந்தருளி உள்ளனர் என்பது இத் தலத்தின் சிறப்பு. இந்தக் கோயிலில் ஒரு சம்பிரதாயம், பார்த்தசாரதியைச் சேவிக்கும் முன்பே மற்றவர்களையெல்லாம்
தரிசித்துவிட வேண்டும்.

*அத்திரி முனிவரின் தவத்திற்கு மகிழ்ந்த திருமால், அவர் விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக எழுந்தருளி இருக்கிறார்.

* மதுமான் மகரிஷி என்னும் முனிவரின் தவத்திற்கு இசைந்து, அவர் விரும்பிய வண்ணம் ராமன், சீதை, இலக்குவன், பரத, சத்ருக்கணனுடன் இத்தலத்தில் எழுந்தருளி இருக்கிறார்.

* சப்த ரோமர் என்னும் ரிஷியின் தவத்திற்கு ஏற்ப, கஜேந்திர வரதர் கோரத்தில் இத்தலத்தில் எழுந்தருளி இருக்கிறார்.

* சுமதி என்னும் மன்னனின் விருப்பத்திற்கு இசைந்து, வேங்கடகிருஷ்ணனாய் அவதாரம் செய்திருக்கிறார்.

* முதல் ஆழ்வார்கள் ஒருவரான பேயாழ்வாரும், திருமழிசை ஆழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் எம்பெருமானை மங்களாசாசனம் செய்திருக்கின்றனர்.

“மன்னுதண் பொழிலும் வாவியும் மதிளும்
மாடமா ளிகையும் மண்டபமும்,
தென்னன்தொண் டையர்க்கோன்
செய்தநன்மயிலைத் திருவல்லிக்
கேணிநின் றானை,

கன்னிநன் மாட மங்கையர் தலைவன்
காமரு சீர்க்கலி கன்றி,
சொன்னசொன் மாலை பத்துடன்
வல்லார் சுகமினி தாள்வர்வா னுலகே’’
– என்பது திருமங்கை ஆழ்வார் வாக்கு.

‘‘தென்னன் தொண்டையர்க்கோன் செய்தநன்மயிலைத் திருவல்லிக் கேணி நின் றானை,” என்று பாடியதால், தொண்டைமான் சக்கரவர்த்தி இத்தலத்தின் கோயில் கட்டினார் என்பது தெரிகிறது. திருவல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள நரசிம்ம மூர்த்தியை, “தெள்ளிய சிங்கமாகிய தேவை திருவல்லிக்கேணி கண்டேனே’’ என்று மங்களாசாசனம் செய்தார். அழகிய சிங்கப் பெருமாளுக்குத் தெளிசிங்கப் பெருமாள் என்று திருநாமம் உண்டு; ‘துள சிங்கப் பெருமாள்’ என்று பலரும் வழங்குவது, பிழையென்று குறிப்பிடுகிறார் பிரதிவாதி பயங்கரம் அண்ணாங்கராச்சாரியார் சுவாமி. இங்குள்ள தாயாருக்கு வேதவல்லி என்று திருநாமம்.

ஒருமுறை திருமாலிடம் ஊடல் கொண்ட திருமகள், வைகுந்தத்தைவிட்டு, இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த பிருகுமகரிஷியின் குடிசைக்கருகில் குழந்தையாய் நின்றாள். முனிவர் பார்த்தார். வேதங்களில் கூறப்பட்ட மகாலட்சுமி இவள்தான் என்று அவருக்குப் புரிந்தது. அதனால், வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். தக்க பருவம் வந்ததும், ரங்கநாதப் பெருமாள், இளவரசர் வடிவம் பூண்டு, திருமகளை ஏற்றுக்கொண்டார். எனவே திருமண கோலத்தில் ரங்கநாதராக இத் தலத்தில் காட்சி தருகின்றார். மகாலட்சுமி (வேதவல்லி), “இவரே என் நாதர்” என்று சொன்னதால், “மன் நாதர்’’ என்று பெயர். திருமணம் மாசி சுக்ல துவாதசியில் நடைபெறும்.

ரங்கநாதர் திருமுடியருகே வராக மூர்த்தியையும், திருவடியருகே நரசிம்மரையும் சேவிக்கலாம். கோயில் கோபுரங்களும், மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்தது இக்கோயில்.
இரண்டு கொடிமரங்கள் உண்டு. ஒன்று பார்த்தசாரதிக்கு. ஒன்று தெள்ளிய சிங்கருக்கு. (நரசிம்மர்). இங்கே வைணவ ஆச்சாரியாரான ராமானுஜரின் பெற்றோர்கள், குழந்தை செல்வத்திற்காக பெருமாளை வேண்டி யாகம் செய்தார்கள். இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பெருமாள் பார்த்தசாரதியே அவர்களுக்கு மகனாக பிறந்தார்.

வைணவதலங்களில் முக்கியமான மூன்று தலங் களான வேங்கடம், திரு அரங்கம், காஞ்சிபுரம். இந்த முத்தலத்துப் பெருமாள்களும் இத்தலத்தில் காட்சி தருவது மிகப் பெரிய சிறப்பு. இத்தலத்தை இரண்டாவது திருப்பதி என்று அழைக்கிறார்கள். புரட்டாசி சனிக் கிழமைகளில், திருப்பதியை போல இங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும், திருமலையை போலவே மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. கிருஷ்ணன், குடும்பசமேதராய் காட்சித் தரும் திருத்தலம் இது.

வலதுபுறம் ருக்மிணி பிராட்டி, இடதுபுறம் தம்பி சாத்யகி, தெற்கே அண்ணன் பலராமன், வடக்கே பிள்ளை பிரத்யும்னன், பேரன் அநிருத்தன் என கிருஷ்ணகுடும்பத்தை தரிசித்தால், நம் குடும்பகஷ்டங்கள் தானே தீரும்.இக்கோயிலில், ஐப்பசி திருமூலம் நன்னாளில், கைத்தல சேவை சிறப்பு வாய்ந்தது. தியாகராஜ ஸ்வாமிகளும், முத்துசுவாமி தீக்ஷிதரும், கவியரசு பாரதியும் பாடிய கண்ணனை நாமும் போற்றுவோம்.

முனைவர் ராம்

The post பார்த்தசாரதி! அவன் பாதமே கதி!! appeared first on Dinakaran.

Related Stories: