இறைவனின் குடும்பம்!

இஸ்லாமும் மத சகிப்புத்தன்மை பற்றி பெரிதும் வலியுறுத்துகிறது. மக்கள் அனைவரும் இணைந்து வாழ வேண்டும்; பிரிந்தும் பிளவுபட்டும் வாழக்கூடாது என்றுதான் இறைத்தூதர்கள் அனைவரும் அறிவுறுத்தினார்கள். ‘இறைநெறி மக்களை ஒன்று சேர்க்க வந்துள்ளதே தவிர, பிரிப்பதற்கு அல்ல. வெறுப்புக்கும் பிரிவினைக்கும் பதிலாக அன்பின் பாதையை மேற்கொள்ளுங்கள்’ என்றார்கள் நபிமார்கள். இஸ்லாத்தின் தெளிவான பிரகடனம் இதுதான்: ‘மனிதர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினரே. அவர்கள் எந்த நாட்டை, இனத்தை, மொழியைச் சேர்ந்தவர்களாக, எந்த நிறத்தை உடையவர்களாக இருந்தாலும் சரி, தங்களைப் படைத்த இறைவனுக்குத் தலைசாய்க்கும்போது இந்த வேறுபாடுகள் அனைத்தும் களையப்பட்டு மக்கள் ஒன்றிணைகிறார்கள்.

அவ்வாறு இணைந்து வாழும்போது, வேறுபாடுகள் மறைந்து இதயங்கள் இணைகின்றன; மொழிகள் வளர்கின்றன; இனங்கள் செழிக்கின்றன.’ சகிப்புத் தன்மையை குர்ஆன் பெரிதும் வலியுறுத்துகிறது. திருமறையில் இறைவன் கூறுவதைப் பாருங்கள்… ‘மார்க்கத்தில் (இறைநெறியை மேற்கொள்வதில்) யாதொரு கட்டாயமோ நிர்ப்பந்தமோ இல்லை. தவறான வழியில் இருந்து நேரான வழி தெளிவாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.’ (2: 256)அண்ணல் நபியவர்கள் கூறினார்கள்: ‘படைப்பினங்கள் முழுவதும் இறைவனின் குடும்பமே! ஓர் அரபிக்கு அரபி அல்லாதவனைவிட, ஓர் அரபியல்லாதவனுக்கு அரபியைவிட, கறுப்பருக்கு வெள்ளையரை விட, வெள்ளையருக்குக்

கறுப்பரைவிட எந்த உயர்வும் மேன்மையும் இல்லை. மனிதர்கள் அனைவரும் ஆதத்தின் வழித்தோன்றல்களே. ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர்.’பஞ்சாபில் வாழ்ந்த சூபி ஞானி, பாபா ஃபரீதிடம் ஒருவர் வந்து மிக அழகான விலையுயர்ந்த கத்தரிக்கோல் ஒன்றை அளித்தார். அதை வாங்க மறுத்த பாபா ஃபரீத் கூறினார்: ‘எனக்கு இது தேவையில்லை; ஊசி தாருங்கள். நான் மனிதர்களைவெட்டுவதற்கு அல்ல, இணைப்பதற்காகவே செயல்படுகிறேன்.’
– சிராஜுல்ஹஸன்

 

The post இறைவனின் குடும்பம்! appeared first on Dinakaran.

Related Stories: