கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் அலுவலகம் திறப்பு: 24 மணி நேரமும் இயங்கும் வகையில் ஏற்பாடு

பெரம்பூர்: கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அலுவலகம் திறக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து சட்டமன்ற அலுவலகங்கள், மாமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களையும் மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதியிலும் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழக முதல்வரின் சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.  கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பேப்பர் மில்ஸ் ரோடு, 67வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே இந்த புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.  இதேபோன்று கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு இந்த அலுவலகத்தில் தனித்தனியான அறை ஒதுக்கப்பட்டு அவர்கள் நேற்று முதல் தங்களது பணிகளை தொடங்கினர்.

மேலும் பறக்கும் படையினர், வீடியோ கேமராவுடன் கூடிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தினமும் இந்த அலுவலகத்திற்கு வந்து தங்களது பணியை தொடங்குகின்றனர். 3 ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பணிபுரியும் வகையில் இவர்களுக்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் போடுவது மற்றும் பல்வேறு கூட்டங்களுக்கு அனுமதி வாங்குவது, ஒரு கட்சியினர் மற்றொரு கட்சியினர் மீது புகார் அளிப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் இந்த அலுவலகத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நேற்று புதிதாக தொடங்கப்பட்ட இந்த அலுவலகத்தை திருவிக நகர் மண்டல செயற்பொறியாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

The post கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் அலுவலகம் திறப்பு: 24 மணி நேரமும் இயங்கும் வகையில் ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: