சூளை பகுதியில் பைப்லைன் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்

பெரம்பூர்: சூளை பகுதியில் பைப்லைன் உடைந்து சாலையில் குடிநீர் வழிந்தோடுவதால், அதனை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை சூளை பகுதி, சூளை நெடுஞ்சாலை, ஜென்ரல் காலின்ஸ் சாலை சந்திப்பு அருகில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குடிநீர் வாரிய ஊழியர்கள் குடிநீர் பணியை மேற்கொள்வதற்காக பள்ளம் தோண்டினர். பணிகளை சரிவர முடிக்காமல் கடந்த 3 நாட்களாக பள்ளமும் மூடப்படாமல் அப்படியே உள்ளது.

பணிகள் முழுமையாக முடிவடையாததால் தோண்டப்பட்ட பள்ளத்திலிருந்து, பைப்லைன் உடைந்து குடிநீரானது சூளை நெடுஞ்சாலை மற்றும் ஜென்ரல் காலின்ஸ் சாலை சந்திப்பு அருகே சாலையில் கடந்த 2 நாட்களாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் அந்தப் பள்ளத்தில் இருந்து அளவுக்கு அதிகமான தண்ணீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் பணிக்கு செல்பவர்களும், அருகில் இருக்கும் மாணவ மாணவியரும் சிரமத்துடன் அந்த பகுதியை கடந்து சென்றனர். உடனடியாக குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரிய அதிகாரிகள் இதனை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சூளை பகுதியில் பைப்லைன் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய குடிநீர் appeared first on Dinakaran.

Related Stories: