நாட்டில் ஏற்பட்டுள்ள பேராபத்தில் இருந்து மக்களை காக்கும் கடமை காங்கிரசுக்கு உள்ளது: செல்வப்பெருந்தகை பேச்சு

பெரம்பூர்: வடசென்னை காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று மாலை புளியந்தோப்பில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு திரு.வி.க.நகர் 2வது சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாபுகான் ஏற்பாடு செய்திருந்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு சிறுபான்மைத்துறை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், ‘‘குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்து, பாஜ அரசு இந்தியர்களை பிரித்தாள நினைக்கிறது. பிரதமரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்த்து அனைவரும் கைகொட்டி சிரிக்கின்றனர். அனைத்து மதத்தினரும், அனைத்து சாதியினரும், அனைத்து தரப்பு மக்களும் இந்தியர்களாக வாழக்கூடிய சூழ்நிலை வரவேண்டும்.

இதற்கு இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். ராகுல்காந்தி பிரதமராக வேண்டும். ஆட்சி மாற்றம் மட்டுமே இதற்கு தீர்வை தரும்,’’ என்றார். செல்வப்பெருந்தகை பேசுகையில், ‘‘தற்போது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த பேராபத்தை உணர்ந்து பொது மக்களை காக்கக்கூடிய கடமை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. இதைத்தான் எங்கள் தலைவர் ராகுல்காந்தியும் கூறி வருகிறார். இதில் அரசியல் கிடையாது. இது உணர்வுப்பூர்வமான விஷயம். நாடாளுமன்ற தேர்தலில் ஒரு நல்ல முடிவு வரும்,’’ என்றார்.

The post நாட்டில் ஏற்பட்டுள்ள பேராபத்தில் இருந்து மக்களை காக்கும் கடமை காங்கிரசுக்கு உள்ளது: செல்வப்பெருந்தகை பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: