தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலி கண்காணிப்பு வளையத்திற்குள் விமான நிலையம்: சிறப்பு பறக்கும் படை தீவிர கண்காணிப்பு

சென்னை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட அந்த நிமிடத்தில் இருந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். குறிப்பாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், தீவிரமாக கண்காணிக்கப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக, கணக்கில் இல்லாத பணங்கள் எடுத்துச் செல்வதை வருமான வரித்துறை, சுங்கத்துறை, மத்திய தொழில் பதுகாப்பு படை, அமலாக்கப் படையினர் மற்றும் அமலாக்கத் துறையினர் கண்காணித்து, பறிமுதல் செய்வார்கள் என்று அறிவித்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும், சென்னை விமான நிலையத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் சுறுசுறுப்படைந்தது. அதோடு சென்னை விமான நிலைய வருமான வரித்துறை அலுவலகத்திற்கு கூடுதல் பணியாளர்கள் வந்துள்ளனர். விமான நிலைய வருமான வரித்துறை அலுவலகத்தில் வழக்கமாக 2 அல்லது 3 அலுவலர்கள் மட்டுமே பணியில் இருப்பார்கள். இப்போது 20க்கும் மேற்பட்ட அலுவலர்கள் தொடர்ச்சியாக பணியாற்றுகின்றனர்.

அவர்கள் சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச முனையம், தனி விமானங்கள் இயங்கக்கூடிய பழைய விமான நிலையம், விமான நிலைய கார்கோ பகுதி ஆகியவற்றில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதோடு மட்டுமின்றி, விமான நிலைய வளாகத்திற்குள் நடமாடுகிறவர்களையும் திடீர் சோதனைகள் நடத்தி வருகின்றனர். விமானங்களில் பயணம் செய்யும் சாதாரண பயணிகள் மட்டுமின்றி, தனி விமானங்களில் பயணிக்கும் பயணிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரின் உடமைகளையும் கண்காணித்து பரிசோதனை செய்கின்றனர்.

அதேபோல் சுங்கத்துறை, மத்திய தொழில் பாதுகாப்புபடை ஆகியோரும், பயணிகளை தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்துகின்றனர். மேலும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றுக்கு சென்னை விமான நிலையத்தில் தனியாக அலுவலகங்கள் இல்லை. ஆனாலும், அவர்கள் சென்னையில் உள்ள தங்களுடைய அலுவலகங்களில் இருந்து திடீர் திடீரென, சென்னை விமான நிலையத்திற்கு வந்து சோதனைகளில் ஈடுபடுகின்றனர்.

மத்திய வருவாய் புலனாய்வுத்துறை, அமலாக்க பிரிவினர், குறிப்பாக சென்னை பழைய விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அங்குள்ள விமான நிலைய சரக்ககங்களில் கையாளப்படும் பார்சல்களில் பணம், பரிசு பொருட்கள் வருகிறதா என்பதை கண்காணிக்கின்றனர். இதேபோல் தனி விமானங்களில் பயணிப்பவர்களை உன்னிப்பாக கண்காணித்து, அவர்களுடைய உடமைகளும் பரிசோதனை செய்யப்படுகிறது. இவர்கள் தவிர தேர்தல் சிறப்பு பறக்கும் படையினரும், விமான நிலைய வளாகம், பழைய விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சென்னை விமான நிலையம் மற்றும் அதன் வளாகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

The post தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலி கண்காணிப்பு வளையத்திற்குள் விமான நிலையம்: சிறப்பு பறக்கும் படை தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: