தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை விதிமீறும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

சென்னை: சென்னை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாஜ உள்ளிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

கட்சிகள், வேட்பாளர் நடத்தை விதிகள்
* தேர்தலில் வாக்குகளை பெற வாக்காளர்களுக்கு கையூட்டு வழங்குவதோ, வாக்காளர்கள் வாக்களிக்க கையூட்டு பெறுவது ஆகியவை தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரான செயலாகும். இதுபோன்ற குற்றங்கள் கண்டறியப்பட்டால் இந்திய தண்டனை சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* வாக்காளர்களை அச்சுறுத்துதல், ஆள்மாறாட்டம் செய்தல், தேர்தல் பரப்புரைக்கான நிறைவு நேரத்தில் இருந்து, வாக்குப்பதிவு முடிவறும் வரையிலான 48 மணி நேரத்திற்குள் (பொதுக்கூட்டங்கள் நடத்துதல், வாக்குச்சாவடிகளில் இருந்து 100 மீ. எல்லையில் வாக்கு சேகரிப்பு ஆகியவை தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரான முறைகேடான செயல்.

* வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வரவும், வாக்கு செலுத்திய பின்னர் திரும்ப அழைத்துச் செல்லவும் வாகன வசதிகளை ஏற்படுத்தித் தருதல் தவிர்க்கப்பட வேண்டிய முறைகேடான செயலாகும்.

* பிற அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை ஏற்படுத்த முனைதல், பிற கட்சி கூட்டங்களில் தனது கட்சி ஆதரவாளர்களை கொண்டு கேள்வி எழுப்புவதன் மூலமும், துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்வதன் மூலமும் தொல்லை கொடுத்தல், பிற கட்சி பேரணிகள் நடைபெறும் பாதை வழியாக அடுத்த கட்சியினர் பேரணியை நடத்த முற்படுதல், ஒரு கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகளை மற்றொரு கட்சியின் தொண்டர்கள் கிழித்து எறிதல் ஆகிய செயல்களில் ஈடுபடக் கூடாது.

* பல்வேறு சாதி, இனம், மதம், மொழியை சார்ந்த மக்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்துவதோ, இருதரப்பினர் இடையே வெறுப்பை உருவாக்குவதோ, பதற்றத்திற்கு வழி செய்யும் எந்த செயலிலும் எந்த ஒரு கட்சியோ, வேட்பாளரோ ஈடுபடக்கூடாது.

* இன மற்றும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் வேண்டுகோள்கள் விடுக்கக்கூடாது. தேர்தல் பிரசார களமாக மசூதி, தேவாலயம் மற்றும் கோயில் போன்ற வழிபாட்டுத் தளங்களை பயன்படுத்தப்படக் கூடாது.

தேர்தல் செலவுகண்காணிப்பு
* தேர்தலின்போது, ஒவ்வொரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஒருநாள் முன்பிருந்து, தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் வரை புதிய வங்கிக் கணக்கினைப் பராமரிக்க வேண்டும்.

* ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் ரூ.95 லட்சம் வரை செலவழித்திட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

* வேட்பாளர் இந்த வரம்பிற்குட்பட்டே தேர்தல் செலவுகளை செய்ய வேண்டும்.

* ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் முடிவுகள் வெளியிட்ட 30 நாட்களுக்குள் தங்கள் செலவு கணக்கை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் இந்திய தேர்தல் நடத்தை விதிகளின்படி, தகுதி நீக்கம் செய்யப்பட வழிவகை உண்டு.

* வங்கி கணக்கானது வேட்பாளர் பெயரிலோ அல்லது அவரது முகவருடன் இணைந்தோ தொடங்கப்பட வேண்டும்.

* வேட்பாளரால் செலவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தொகை, இந்த வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட பின்னரே செலவு செய்யப்பட வேண்டும்.

* செலவு செய்யப்படும் தொகையானது காசோலையாகவே செலுத்தப்பட வேண்டும். காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை ரூ.10,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊர்வலம்
* அனைத்து போக்குவரத்து விதிகளும், கட்டுப்பாடுகளும் கவனமாக கடை பிடிக்கப்பட வேண்டும். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாவண்ணம் முன்கூட்டியே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* ஊர்வலம் செல்லும்போது ஊர்வலத்திற்கு வலதுபுறம் போதுமான இடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பணியிலிருக்கும் காவலர்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளின்படி தவறாது நடந்து கொள்ள வேண்டும்.

* ஒரே பாதையில் ஒன்றிற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்ய விரும்பினால் எவ்வித மோதல்களும் ஏற்படாவண்ணம் முன்கூட்டியே முடிவுசெய்து கொள்ள வேண்டும். இருதரப்பினரும் திருப்திகரமாக ஏற்பாடு செய்வதற்காக உள்ளூர் காவல்துறையின் உதவியை நாடி பெறலாம்.

* ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் தங்கள் கையில் கொண்டு செல்லும் பொருட்களை தவறாக பயன்படுத்தாவண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிற அரசியல் கட்சிகளையோ, பிற தலைவர்களையோ உருவகப்படுத்தும் உருவப் பொம்மைகளை எடுத்துச் செல்வதோ, எரிப்பதோ, பிற வகையான போராட்டங்கள் நடத்துவதோ கூடாது. இவ்வாறு தெரிவித்தார்.

* சென்னையில் வாக்குப்பதிவு குறைவு
கூட்டத்திற்கு பின்னர் தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி: கூட்டத்தில் சென்னையில் நியமிக்கப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளை அரசியல் கட்சியினருக்கு அறிமுகம் செய்து வைத்தோம். தேர்தல் நடத்தும் நடைமுறைகள் குறித்தும் பிரசாரம் செய்யும் விதிமுறைகள் குறித்தும் கட்சியினர் உடன் கலந்து ஆலோசித்தோம். இதில் சில கட்சியினர் சார்பில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது அதனை மாநில தேர்தல் அதிகாரிகளிடம் கொண்டு சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 579 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் கூடுதலாக காவல் கண்காணிப்பை உறுதிப்படுத்தியுள்ளோம். கோடை காலம் என்பதால் வெப்பம் அதிகமாக இருக்கும் அதற்காக கூடுதல் முன்னேற்பாடுகளை வாக்குச்சாவடிகளில் உருவாக்கி உள்ளோம். சென்னையில் தான் 59%, 60% என வாக்குப்பதிவு மிகவும் குறைவாக உள்ளது. எனவே வாக்காளர்கள் விழிப்புணர்வுடன் தங்களது வாக்கினை இந்த முறை செலுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

* பிரசார அலுவலகங்கள்
தற்காலிக பிரசார அலுவலகங்களை அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்தோ, வாக்குச்சாவடியிலிருந்து 200 மீ. பகுதிக்குள்ளோ அமைத்தல் கூடாது. இத்தற்காலிக அலுவலகங்களில் ஒரே ஒரு கட்சி கொடியினை, ஒரு கட்சி பதாகை போட்டோவை வைத்துக் கொள்ளலாம். மேற்படி அனுமதிக்கப்பட்ட பேனர் அளவு 4 x 8 ஆகும்.

* அனுமதி சீட்டு
வாக்குச்சாவடியில் பணிபுரியும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் தொண்டர்களுக்கு, அவர்கள் சார்ந்த கட்சியின் பெயர் மற்றும் வேட்பாளரின் பெயர் குறிப்பிட்ட அடையாள வில்லைகள் வழங்கப்பட வேண்டும். வாக்குச்சாவடிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரக் கடிதம் அல்லது அனுமதிச் சீட்டு இன்றி வாக்குச்சாடிக்குள் நுழைய எவருக்கும் அனுமதி இல்லை.

* வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு
சென்னை மாநகராட்சியில் 85 வயதிற்கு மேற்பட்ட 63,849 வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளார்கள் அவர்கள் வீட்டிலிருந்தபடியேயும் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் அவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க விரும்பினாலும் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும், என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

The post தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை விதிமீறும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அதிகாரி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: