பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி முதல்வரின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரான பொன்முக்கு மாநில அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்திருக்கிறார். சட்ட ரீதியான தடைகள் ஏதும் இல்லாத போது மாநில அரசின் பரிந்துரையை நிறைவேற்றுவது தான் மாநில ஆளுநரின் கடமை. ஆனால், தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளுக்கும், முடிவுகளுக்கும் முட்டுக்கட்டை போடுவதே ஆளுநரின் செயலாக இருக்கிறது.

பதவி ஏற்பு பிரச்னையிலும் ஆளுநர் தனது அதிகார வரம்பை மீறுகிறார். இது முதல்வரின் பரிந்துரையையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் அப்பட்டமாக மீறுகிற நடவடிக்கை. பொன்முடி மீதான தீர்ப்பை செயல்படுத்துவதற்கு உச்சநீதி மன்றம் தடை விதித்திருக்கும் நிலையில்தான், அவருக்கு அமைச்சர் பதவி அளிப்பதற்கு மாநில அரசு பரிந்துரை செய்திருக்கிறது. இதற்கு சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லை. மேலும், ஒருவர் குற்றவாளி என்று இறுதி தீர்ப்பளிக்கப்படும் வரை அவர் நிரபராதி தான் என்கிற சட்டவிதிகளின் அடிப்படையில் அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என்று சபாநாயகர் தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, தமிழ்நாடு ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு தனது கடமையை நிறைவேற்றிட வேண்டும். மாநில அரசின் பரிந்துரையை ஏற்று பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும்.

The post பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: