மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டி: பாமக பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் அறிவிப்பு

சென்னை: பாஜக உடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாமக பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் அறிவித்துள்ளார். பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் தெரியவரும் என்றும் தெரிவித்தார். நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த சனிக்கிழமை வெளியிட்டார். மொத்தம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொதுவாக இரண்டாம் கட்டத்தில் தான் லோக்சபா தேர்தல் நடக்கும்.

ஆனால், இந்த முறை முதல் கட்டத்திலேயே, அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. ஒரு மாதம் மட்டுமே அவகாசம் இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏற்கனவே திமுக கூட்டணியை உறுதி செய்து தொகுதி பங்கீட்டை இறுதி செய்துவிட்டது. ஆனால், அதிமுகவும் சரி, பாஜகவும் சரி இன்னும் கூட்டணியை உறுதி செய்யவில்லை. இந்த இரு கட்சிகளுமே பாமகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதிமுக பாமக இடையே கூட்டணி இறுதியாக உள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இதற்கிடையே ஒரே நாளில் மொத்தமாக நிலைமை மாறி இருக்கிறது.

லோக்சபா தேர்தலில் பாஜக உடன் பாமக கூட்டணி அமைக்கிறது. இதை பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உறுதி செய்துள்ளார். பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடும் என்ற பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை அன்புமணி ராமதாஸ் சந்திக்க வாய்ப்புள்ளது என்றும் பாஜக உடன் கூட்டணி என்பது ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் சேர்ந்து எடுத்த முடிவு தான் என்றும் அவர் தெரிவித்தார். நாளை சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டி: பாமக பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: