திருமாலிருஞ்சோலை கள்ளழகர்

திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் இந்தத் ‘திருமால் இரும் மலை’, திருமாலின் இதயம் கவர்ந்த திருத்தலம். இதை அவரே ரசித்து, மகிழ்ந்து, விருப்பமுடன் தன் தலமாக அமைத்துக் கொண்டிருக்கிறார். ‘தாடகைமாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில்’ அன்றும், ‘தடங்கடல் வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்’ என்றும் திருமங்கையாழ்வார் இத்தலத்தை இறைவனே தேர்ந்தெடுத்து கோயில் கொண்டதை சிலாகித்துப் பாடுகிறார். ‘புயல் மழை வண்ணர் புரிந்து உறை கோயில்’ என்று நம்மாழ்வாரும் இந்தக் கருத்துக்குத் தோள் கொடுக்கிறார். ராமானுஜரோ, தன் ராமானுச நூற்றியந்தாதியில், ‘இருப்பிடம் வைகுந்தம், வேங்கடம்….. மாலிருஞ்சோலை என்னும் பொருப்பிடம்….. இவை மூன்றும் மாயனுக்கு என்பர் நல்லோர்’ என்று சொல்லி மெய்சிலிர்க்கிறார்.

இவர் எப்படி இங்கே வந்தார்?
கேரளத்து மன்னன் ஒருவன் ஒருமுறை திருமாலிருஞ்சோலைக்கு வந்து கள்ளழகரை தரிசித்தான். தன் உள்ளம் கொள்ளை கொண்ட அந்த அழகரைத் தன் நாட்டுக்குக் கடத்திச் சென்றுவிட அவன் துடித்தான். ஆனால் அங்கிருந்த பக்தர்கள், வைணவ அடியார்களின் பெரும் பக்தியைக் கண்டு திகைத்த அவன், அவ்வாறு அவரைக் களவு கொண்டு செல்வது என்பது முடியாத காரியம் என்றுணர்ந்தான். இந்த தெய்வத்தை மாந்திரியக சக்தியாலேயே வசப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தான். பிறகு தன் நாட்டிற்குத் திரும்பிய அவன், வசிய மந்திர, தந்திரங்களில் தேர்ந்த 18 பணிக்கர்களை அழைத்தான். அவர்களை திருமாலிருஞ்சோலைக்கு அனுப்பி, அழகரைக் கவர்ந்து வந்துவிடப் பணித்தான்.

அவர்களும் ஒரு தெம்புடன் இந்தத் தலத்தை அடைந்தார்கள். தம் மாந்திரிக, தாந்திரிக வித்தைகளைப் பிரயோகித்து தம் நோக்கத்தை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கினார்கள். இந்த விஷயம் ஊருக்குள் பரவவே, உள்ளூர் பக்தர்கள் சிலர் வந்து, கோயில் படிகளில் அமர்ந்தபடி, மாந்திரிகத்தில் ஈடுபட்டிருந்த அவர்களை அப்படியே பிடித்து, ஒரு படிக்கு ஒருவராக அந்தந்தப் படியிலேயே புதைத்துவிட்டனர். இந்த பதினெட்டு பேரின் மந்திர சக்திக்கு உட்பட்டு அவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடன் வந்திருந்த காவல் தெய்வம் சற்று தயங்கியது. அழகரின் அழகில் மயங்கி நின்ற அந்த சக்தி, அவரைக் கடத்திச் செல்ல இயலாது என்பதைப் புரிந்துகொண்டது.

ஆனால் அவரைவிட்டுப் பிரியவும் மனமில்லாமல் தவித்தது. தான் கோயிலுக்குள் போய் அழகருடன் அமர்ந்திருக்க விரும்பினாலும், சாஸ்திர, சம்பிரதாயங்கள் அதற்கு இடம் கொடுக்காது என்பதையும் புரிந்துகொண்டது. ஆனாலும் அவரை நிரந்தரமாக, நேருக்கு நேர் பார்த்தபடி அங்கேயே நிலைகொள்ள ஆசைப்பட்டது. உடனே ஊர்ப் பெரியவர்களிடம், அந்த அழகனுக்குத் தான் ஒரு கதவாக அமைவதாகவும், பெருமாளின் வாசலையும், இந்தப் பதினெட்டுப் படிகளையும் காவல் காப்பதாகவும் அதற்குத் தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும், இந்தப் பணிக்குப் பிரதியுபகாரமாக, அர்த்தஜாம பூஜையில் அழகனுக்கு படைக்கப்படும் பிரசாதத்தைத் தனக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. இன்றளவுக்கும் கள்ளழகருக்கே காவல் தெய்வமாக, கருப்பண்ணசாமியாக விளங்கி வருகிறது!

இன்றைக்குக்கூட பொய், களவு, நம்பிக்கை துரோகம் சூது, ஏதேனும் குற்றம் என்று வழக்குகள் இந்த கருப்பணசாமி கதவுக்கு முன்னால் பஞ்சாயத்து பேசப்பட்டு, நியாயம் நிலைநாட்டப்படுகிறது என்கிறார்கள். தீய மனது டையவர், குற்றம் புரிந்தவர் தம் மனமாற்றத்துக்காக இந்த கருப்பண்ணசாமியை வழிபட்டு நல்மனமும், நல்வாழ்வும் அமையப் பெறுகிறார்கள்!

கருப்பண்ணசாமி என்ற காவல் கதவை வணங்கிவிட்டு, சற்று சுற்றிக்கொண்டு கோயிலினுள் நுழையலாம். எதிரே வட்டச் சுவர் கொண்ட ஒரு சிறு திடல். உள்ளே கிருஷ்ணர் சிலை வடிவாக நின்றிருக்கிறார். அவரை பக்தர்கள் வலம் வருகிறார்கள். அங்கேயே இருக்கும் வேம்பு, புன்னை மரங்களில் பிள்ளைவரம் வேண்டும் பெண்கள் தொட்டில் கட்டி பிரார்த்தனை செலுத்தியிருக்கிறார்கள்.
இவரை வலம் வந்து கள்ளழகர் கோயிலின் பிரதான வாயிலுக்குப் போகலாம். இடப்புறம் ஆஞ்சநேயர் தனி சந்நதி கொண்டு நம்மை வாழ்த்தி வரவேற்கிறார். அவரிடம் ஆசி பெற்று உள்ளே சென்றால், கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் நின்ற கோலத்தில் அழகு தரிசனம் அளிக்கிறார். அந்த உற்சவர் சிற்பம் தனி அழகோடு விளங்குவதை உணர முடிகிறது. அதற்கு முக்கிய காரணம், அது அபரஞ்சி என்ற பிரத்யேக தங்கத்தால் ஆனதுதான்! ‘சோலை
மலைக்கரசர்’ என்றே திவ்யபிரபந்தம் இந்த அழகனை வர்ணித்து மகிழ்கிறது. ‘ரிஷபாத்ஷர்’ என்று புராணம் போற்றுகிறது. இங்கும், திருவனந்தபுரத்திலும் மட்டுமே இந்த உற்சவத் திருமேனிகள் அபரஞ்சி தங்கத்தால் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலவரைவிட உற்சவர் பெரும் புகழ் பெற்றத் திருத்தலம் இது என்றால் மிகையாகாது. மூலவரைப் போலவே உற்சவரும் பஞ்சாயுதங்களுடன் திகழ்கிறார். இந்த உற்சவர் பங்கேற்கும் ‘அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா’ மிகவும் பிரசித்தம். மூலவருக்கு அருகில் பிராகாரத்தில் வலம்புரி விநாயகர் சந்நதி இருக்கிறது. வடக்குப் பிராகாரத்தில் விஷ்வக்சேனர், ஜெயதேவியுடன் காட்சியளிக்கிறார். இவரையடுத்து இருப்பவர் பைரவர். இந்த பைரவர் நீளமான தந்தங்களுடன், கோரைப் பற்களுடன், திரிசூலத்துடன், நாய் வாகனத்துடன் தரிசனம் தருகிறார்.

அடுத்தது க்ஷேத்திர பாலகர் சந்நதி. இதற்கு முனையதரையன் திருமண்டபம் என்றும் ஒரு பெயர் உண்டு. சிவபெருமான் விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்து, க்ஷேத்திர பாலகராக இக்கோயிலில் இடம் பெற்றார் என்று விருஷபாத்ரி மகாத்மியம் கூறுகிறது. தலையில் காவி வண்ண முண்டாசு கட்டி நின்ற கோலத்தில் திகழ்கிறார், இவர். இந்த அழகர் திருக்கோயிலில் எம்பெருமானைப் பாதுகாக்கும் அரும்பணியை ஆற்றுகிறார் இவர். படியிறங்கி வெளியே வந்தால், சரஸ்வதி நாச்சியாரை தனி சந்நதியில் தரிசிக்கலாம். அவரை அடுத்து தசாவதார அர்ச்சாவதாரங்கள் வரிசையாக, தனியே அமைந்திருக்கின்றன. ஆழ்வார்களும், ஆசார்யார்களும், தாங்களும் தனி சந்நதி கொண்டு, பெருமாள் சேவையில் ஆழ்ந்திருக்கிறார்கள். உயிர்த்துடிப்புள்ள, ஆனால் வேறெந்த பிரதிபலனும் எதிர்பாராத அருஞ்சேவையில் கல்லாக சமைந்துவிட்டது போலவே அவர்கள் தோற்றம் அளிக்கிறார்கள். சாளக்கிராம தரிசனமும் தவிர்க்கக் கூடாத ஒன்று. இவை இங்கு நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. இவற்றிற்கு அபிஷேகம் செய்த தீர்த்தம், தினமும் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பிராகார வலம் வரும்போது கல்யாண சுந்தரவல்லித் தாயாரின் கருணை முகத்தை தரிசிக்கலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த சந்நதியில் முகூர்த்த உற்சவம் நடைபெறுகிறது. தாயாருக்கு முன்னால் கல்லாலான ஒரு சிறு மேடை. அந்த உற்சவ நாளில் தாயாரின் உற்சவர் விக்ரகத்தை அந்த மேடையில் நிறுத்தி வழிபாடுகளை மேற்கொள்கிறார்கள். அது ஒவ்வொரு வெள்ளியும் கொண்டாடப்படும் புனித மேடை என்பதால், பக்தர்கள் அதனை மிதிக்காதபடி, சுற்றிக்கொண்டு சென்று சந்நதிக்குள்ளிருக்கும் தாயார் மூலவரையும், உற்சவரையும் வணங்குகிறார்கள்; பிறகு பிரசாதம் பெற்றுக்கொண்டு அந்த மேடையைச் சுற்றியபடி சந்நதியை விட்டு வெளியே செல்கிறார்கள். உற்சவ மேடையை மிதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு, தரிசன வரிசையில் ஒரு ஒழுங்கைக் கடைப்பிடிக்க வைத்திருப்பது, பாராட்டத்தக்க உத்தி.

தாயார் தரிசனத்துக்குப் பிறகு பிராகாரத்தில் ஒரு குறுகலான வழியைக் காணலாம். இரண்டே படிகள் கொண்ட, ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய அந்த வழியில் சென்றால், திடீரென்று ‘ஹோ’வென்று விரிகிறது ஒரு பெரிய மண்டபம்! தாயாரிடம் ஆசி பெற்றுக்கொண்டு, அந்தப் பிராகாரத்தை மேலும் வலம் வந்தால், இடது பக்கத்தில் பல படிகள் கொண்ட கட்டைக் காணலாம். அதில் ஏறி சக்கரத்தாழ்வாரை தரிசிப்பதுதான் வழிபாட்டு முறை. அந்தக் குறுகிய வழி, பூஜைகளை நிறைவேற்றும் பட்டர்களும், கோயில் நிர்வாகிகளும் சென்று வருவதற்கானது என்று தெரிந்தது. அங்கே சக்கரத்தாழ்வார் சந்நதி கொண்டிருக்கிறார். இவரையும் வலம் வந்து ஆனந்த தரிசனம் கண்ட நிறைவில் நடை பயின்றால், தனி சந்நதியில் யோக நரசிம்மர் சற்று கோபமாகவே உற்று நோக்குகிறார்.

பிரகலாதனை மட்டுமல்லாமல், இந்த பூவுலகத்தையே காக்க, ஹிரண்யனை வதைத்து, கோரத்தாண்டவம் ஆடிய நரசிம்மர், வெகு காலத்துக்கு அந்தக் கோப வெப்பம் தணியாமலேயே இருந்தார் என்கிறது புராணம். பிரகலாதன், மஹாலட்சுமி, சரபேஸ்வரர் என்று ஆளாளுக்கு தம் பங்காக அவரது கோபத்தைத் தணிக்க முயற்சித்தார்கள் என்றும், ஆனாலும், அவர்கள் கண்ணோட்டத்தில் அவர் கோபத்தீ தணிந்ததுபோலத் தோன்றினாலும், இன்னும் வதைக்கப்பட வேண்டிய அரக்கர்களை நினைத்தாரோ என்னவோ நரசிம்மர் உள்ளத்துக்குள் கோபம், தணல் கட்டி, கனன்றுகொண்டுதான் இருக்கிறது. இந்தத் தலத்தில் அந்தக் கோபத்தை மனித முயற்சியாலும் தணிக்கும் வழிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது நரசிம்மர் அமர்ந்திருக்கும் பீடத்துக்கு மேல் விதானத்தில் ஒரு துவாரம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியே தினமும் இவருக்கு எண்ணெய், பால், தயிர் மற்றும் நூபுர கங்கை தீர்த்தத்திலிருந்து எடுத்துவரப்படும் நீர் ஆகியவற்றால் திருமஞ்சனம் செய்விக்கப்படுகிறது. அவ்வாறு செய்யும்போது அவர் சிரசிலிருந்து கோபாக்கினி ஆவியாகி மேலே செல்வதாக ஐதீகம். எந்த மனிதரின் நல்வாழ்வுக்காக தீயோரை அழிக்கக் கடுங்கோப விரதம் கொண்டிருக்கிறாரோ, அந்த நரசிம்மர், அதே மக்கள் தன் கோபத்தைத் தணிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் கண்டு, மனம் குளிர்கிறார். அதனாலேயே இவர் யோக நரசிம்மராகவும் திகழ்கிறார்.

யோக நரசிம்மரை தரிசித்துவிட்டு நகர்ந்தால், அடுத்தடுத்து பூவராகர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணன், ஆண்டாள்,ரங்கமன்னார், கருடாழ்வார், பார்த்தசாரதி, ருக்மிணி,வேணுகோபாலன், சத்யபாமா, ஹயக்ரீவர் என்று திருமாலின் பல அம்சங்களை கண்குளிர தரிசிக்கலாம். இன்னொரு சந்நதியில் விஸ்வரூப கிருஷ்ணன் என்று பெயர்ப் பலகை மாட்டி கிருஷ்ண தரிசனம் செய்விக்கிறார்கள். ஒரு சராசரி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கிருஷ்ணன் சிலை, விஸ்வரூபமாக இல்லாவிட்டாலும், அவனது ஆற்றல்களை நம் மனத்திரையில் ஓட்டி அந்த பிரமாண்டத்தை மனப்பூர்வமாக தரிசித்து மகிழலாம்.

அடுத்து, மேட்டுக் கிருஷ்ணன் சந்நதி. நிறையப் படிகள் ஏறி, மேலே சென்றால் பல தூண்கள் நிறைந்துள்ள மண்டபத்தில் இந்த கிருஷ்ணன் அருள்பாலிப்பதைக் காணலாம். இங்கே பக்தர் யாரையும் காணாதது வியப்பாக இருந்தது. அன்னதானம் அல்லது கோயில் பிரசாதத்துக்காக நெல் தானமளிக்க விரும்புவோர், இந்த மண்டபத்திற்கு வந்து, இரு வாய்கள் வழியாக நெல்லை, உள்ளே குதிருக்குள் கொட்டிச் சேர்க்கிறார்கள்.  கள்ளழகர் கோயில் சுற்றை முடித்துக்கொண்டு வெளியே வரும்போது நீண்டதொரு படிக்கட்டு மலைமேலேறிச் செல்வதைக் காணலாம். அது நூபுர கங்கை என்ற நீரூற்றுக்குப் போகும் வழி. நுழைவாயில் வளைவில், ‘நூபுரகங்கைக்குப் போகும் வழி. ராக்காயி அம்மன் கோயிலுக்குப் போகும் வழி’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். பகல் வேளையிலேயே அடர்ந்த மரங்களாலும், செடி, கொடி, புதர்களாலும் போதுமான வெளிச்சம் இல்லாத அந்த மலைப்படிப் பாதையை மாலை வேளைகளில் பக்தர்கள் பயன்படுத்துவதில்லை. வெளிச்சம் இல்லாதது மட்டுமல்லாமல், விலங்குகளாலும் ஏதானும் ஆபத்து ஏற்படலாம் என்றும் சொல்கிறார்கள்.

இந்த நூபுர கங்கையை மலைச்சாலையில், வாகனங்களில் பயணித்தும் செல்லலாம். இதற்கு, அடிவாரத்திலேயே கட்டணம் செலுத்தி, அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனங்கள் செல்லும் இந்தப் பாதையில், மக்கள் நடந்தும் செல்கிறார்கள். சிலர் சிறு குடங்களிலும், பிளாஸ்டிக் பாட்டில்களிலும் நீர் நிரப்பிக்கொண்டு கீழிறங்கி செல்வதைப் பார்க்க முடிகிறது. இந்த மலைப்பாதையில், நடுவே ஒரு முருகன் கோயில். பழமுதிர்சோலை முருகன் என்று அழைக்கிறார்கள். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இது ஆறாவது என்று கோயிலினுள் எழுதி வைத்திருக்கிறார்கள். வெளியே சற்றுத் தள்ளி பிரமாண்டமான ஒரு நாவல் மரம். அதனடியில் ஒரு பிள்ளையார். இந்த நாவல் மரத்தின் மேலிருந்தபடிதான் முருகப் பெருமான், ஔவைப் பாட்டிக்கு ‘சுட்டப் பழங்களையும், சுடாத பழங்களையும்’ உதிர்த்தானாம். அதனாலேயே பழம் உதிரும் சோலை என்றழைக்கப்பட்டு, பின்னாளில் பழமுதிர்சோலை என்றும் வழங்கப்பட்டதாம். ஆனால் இப்பகுதி, அறுபடைவீடு எனப்படும் முருகன் தலம் இல்லை என்றும், அழகர், தன்னுடைய இந்தத் திருமாலிருஞ்சோலையில் மருமகன் முருகனுக்கும் இடம் அளித்திருக்கிறார், அவ்வளவுதான், என்றும் சொல்கிறார்கள். வாதங்கள் எப்படி இருந்தாலும் இந்தத் திருமலையில் சைவமும், வைணவமும் தழைத்தோங்குவதைக் கண்டு இன்புற முடிகிறது. உண்மையில், தன் சகோதரி மீனாட்சியின் திருக்கல்யாணத்தில் பங்குபெறத்தானே கள்ளழகர் இங்கிருந்து புறப்பட்டு மதுரைக்குச் செல்கிறார்! ஆகவே இரு அழகர்கள் இங்கே கொலுவீற்றிருப்பது பொதுவான பக்தர்களுக்கு அற்புத தரிசனப் புண்ணியம்தான்.

திருமாலிருஞ்சோலை எம்பெருமானின் பேரருளுக்குப் பாத்திரமானவன், மலயத்துவசன் என்ற மாமன்னன். இவன், அர்ஜுனன் – சித்ரவாகனன் – பப்ருவாகனன் – இந்த்ரத்யும்ன- என்ற பரம்பரையில் வந்தவன். மதுரைக்கு அருகில் மணலூர் என்ற தலத்தில் இந்த பரம்பரையினர் அரசோச்சி வந்தனர். இந்த மலயத்துவசனின் பக்தி செலுத்தும் முறை மிகக் கடுமையானது. தினமும் இவன், காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, பிறகு கயை சென்று அங்கிருந்த கதாதரன் என்ற பெருமாளை சேவித்துவிட்டுத் திரும்புவது வழக்கம். இந்த தினசரி வழிபாட்டை இவன் தவறாது மேற்கொள்ளும் பொருட்டு, அகத்திய முனிவர் இவனுக்கு ஒரு புஷ்பக விமானத்தைத் தயாரித்துத் தந்திருந்தார். அந்த விமானத்தில்தான் அவன் இவ்வளவு தொலைதூரம் போய் வந்து கொண்டிருந்தான்.

ஒருநாள், அவ்வாறு அவன் புறப்பட்டபோது, சிறிது தூரத்திலேயே விமானம் சட்டென்று விண்ணில் நின்றது. அதுமட்டுமல்லாமல், அப்படியே கீழே இறங்கியது. அவ்வாறு அந்த விமானம் இறங்கிய இடம், திருமாலிருஞ்சோலை. தரையில் இறங்கிய விமானத்தில் திகைப்புடன் அமர்ந்திருந்த மலயத்துவசனை ஓர் அசரீரி ஈர்த்தது: ‘‘மன்னவனே, பக்தியில் நீ காட்டும் ஈடுபாடு பாராட்டத்தக்கது. ஆனால் பெருமாள் தரிசனத்துக்காக தொலைதூரம், வெகுநேரம், நீ மெனக்கெடுவது எதற்காக? அங்கே நீ கங்கையில் நீராடுகிறாய்; இங்கே உனக்காக கங்கைக்கு ஒப்பான நூபுர கங்கை என்ற சிலம்பாறு ஓடுகிறதே. அங்கே கதாதரனை வணங்கும் நீ, இங்கேயே இருக்கும் கள்ளழகரை வணங்கலாமே!’’

மனம் தெளிந்தான் மன்னன். தூரமும், நேரமும் பெரிதும் மிச்சப்படும் என்பதோடு, இங்கே கூடுதல் நேரத்தை இறைவழிபாட்டில் செலவிடலாமே என்று பெரிதும் மகிழ்ந்தான். அதற்குப் பிறகு மன்னன் திருமாலிருஞ்சோலைக்கே தினமும் வந்தான்; நூபுர கங்கை எனப்படும் சிலம்பாற்றில் நீராடி, அழகரை தரிசித்துப் பேறு பெற்றான். இந்த நூபுர கங்கை கங்கைக்கு ஒப்பானது என்று புராணம் சொல்கிறது. எம்பெருமான் திரிவிக்ரம அவதாரம் எடுத்து, விண்ணை ஒரு காலால் அளந்தபோது, அந்த பாதத்துக்கு பிரம்மன் திருமஞ்சனம் செய்தான். அந்த நீரே கங்கையாகப் பெருகியது. அவ்வாறு பெருகிய நீர், சிறிதளவு, பெருமாள் அணிந்திருந்த சிலம்பில் பட்டுத் தெறித்து, தென்னாட்டை நோக்கி சிலம்பாறாகப் பெருகி ஓடிவந்தது. ஆகவே கங்கைக்கு ஒப்பான பெருமை கொண்ட ஆறு இது என்று போற்றுவதும் சரிதான்.

சிலப்பதிகாரம், ‘இட்ட சித்தி எய்துவீர் ஆயின், இட்ட சித்தி எய்துவீர் நீரே’ என்று இந்த சிலம்பாறு என்ற நூபுர கங்கையை, ‘இட்ட சித்தி’ என்று குறிப்பிடுகிறது. திருமாலை தரிசித்துவிட்டு திருவரங்கம் செல்கிறான் மாடலன் என்பவன். அவன், வழியில், மதுரையை நோக்கி வந்துகொண்டிருந்த கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரையும் சந்திக்கிறான். புலம்பெயர்ந்து நல்வாழ்வை எதிர்பார்த்து செல்லும் கோவலன், கண்ணகிக்குத் துணையாக வந்த கவுந்தி அடிகள் ஆகியோரை ஆறுதல்படுத்தும் நோக்கத்துடன், அந்த மலையில் அமைந்திருக்கும் மூன்று தீர்த்தங்களைப் பற்றிச் சொல்கிறான். ‘‘இங்கிருந்து இடப்பக்கமாக நீங்கள் சென்றால், திருமால்குன்றத்தைக் காண்பீர்கள். அங்கே ஒரு சுரங்கப் பாதை இருக்கிறது. அந்தப் பாதை வழியாகச் சென்றால், மூன்று தீர்த்தங்களை அடைவீர்கள். புண்ணிய சிரவணம், பவகாரிணி, இட்டசித்தி என்று பெயர்கள் கொண்டவை அவை. முதலாவதான புண்ணிய சிரவணப் பொய்கையில் நீராடினால், இந்திரன் எழுதிய ‘ஐந்திர வியாகரணம்’ என்ற நூலறிவை நீங்கள் பெறுவீர்கள்; பவகாரிணியில் மூழ்கி எழுந்தால், பிறவி பற்றிய ஞானம் உண்டாகும்; இட்டசித்தியில் நீராடினால் எண்ணியதெல்லாம் கைகூடும்,’’ என்று தெரிவிப்பதாக சிலப்பதிகாரம் வர்ணிக்கிறது. இந்த இட்டசித்திதான் சிலம்பாறு என்ற நூபுர கங்கை.

தமிழ்த் திவ்ய சூரிசரிதம்,
‘நூபுர கங்கையின் அரவம் மிடைந்த பாங்கர்
அனைத்துலகும் புகழ் திருமாலிருஞ்சோலைப் பேர்
அம்மலையின் அழகன் இவன், மதுரை மூதூர்
தனைப் புரந்த முன் மலயத்துவசன் செல்வம் தானாகி
அடைபவருக்கு ஐந்துருவுமாகி
சுந்தரவல்லிகை தனக்குச் சுரக்கும் இன்பச் சுந்தரனாம்’

என்று வர்ணிக்கிறது. அதாவது, ‘பேரிரைச்சலுடன் வீழ்கிறது நூபுர கங்கை எனும் ஆற்றருவி. இப்படி விழும் அருவியைக் கொண்டிருக்கும் கானகம், ஓர் உயர்ந்த மலையையும் கொண்டிருக்கிறது. இந்த மலைமீது திருக்கோயில் கொண்டிருக்கிறான், அழகன். மலையத்துவசன் பெற்றப் பெருநிதி இவன். உலகத்து அழகையெல்லாம் தானே உறிஞ்சி மயக்கும் தோற்றம் கொண்டுத் திகழ்கிறான் இவன். சுந்தரவல்லித் தாயார் கண்டு பெருவிருந்தாக அனுபவிக்கும் பாங்காகவும், தாயார் பெருமை கொள்ளும் வகையிலும் இந்தப் பேரழகன், அமைந்திருக்கிறான்,’ என்கிறது.

எப்படிப் போவது: மதுரையிலிருந்து 18 கி.மீ தொலைவிலுள்ளது இந்தத் தலம். மலை அடிவாரக் கோயில். மதுரையிலிருந்து பேருந்து, ஆட்டோ வசதிகள் உண்டு. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் மதியம் 12.45 மணிவரை; மாலை 3.30 முதல் இரவு 8 மணிவரை. முகவரி: அருள்மிகு கள்ளழகர் பெருமாள் திருக்கோயில், அழகர் கோயில் அஞ்சல், மதுரை – 625301.

தியான ஸ்லோகம்
புண்யே ஸ்ரீவ்ருஷ பாசலே வஸதியஸ் ஸௌந்தர்ய வல்யாந்வித:
ரூபாந் நிர்ஜித லப்த கோடி மடநோ நாம்நாச யஸ்ஸுந்த்ர:
யோவை நூபுர கங்க யாச்ரித பத: சந்த்ராக்ய வை மாநிக:
வஜ்ரீதிக்வதந: ப்ரபாதி ஹ்ருதயே தர்மேண ஸாக்ஷாந் க்ருத:

The post திருமாலிருஞ்சோலை கள்ளழகர் appeared first on Dinakaran.

Related Stories: