மனநோயை குணப்படுத்தும் குணசீலப் பெருமாள்

இத்தலத்தில் நடக்கும் சஹஸ்ரநாம அர்ச்சனை வழிபாடு மிக விசேஷம். அரைமணி நேரத்துக்கு நடைபெறும் இந்த வழிபாட்டில், நூற்றுக் கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

கலியுகம் முடியும் வரை இத்தலத்தில், தான் சாந்நித்யத்துடன் வசிப்பதாக பெருமாளே கூறியுள்ள அற்புதத் தலம். பெருமாள், “பிரசன்ன வெங்கடாஜலபதியாக’’ அருள்கிறார். இத்தலம் தென்திருப்பதி என போற்றப்படுகிறது. மார்கழி மாத கூடாரவல்லி, வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி மாத பிரம்மோற்சவம் போன்றவை இத்தல விசேஷங்கள். இத்தலம், சிறந்த பிரார்த்தனை தலமாகவும், பரிகாரத் தலமாகவும் போற்றப்படுகிறது. கருவறையில் கிழக்கு நோக்கி நின்று, மார்பில் மகாலட்சுமி துலங்க, கையில் செங்கோல் ஏந்தியபடி பெருமாள் காட்சி தருகிறார்.

வைகானஸ ஆகமத்தை தோற்று வித்த விகனஸருக்கு, இந்த ஆலயத்தில் தனி சந்நதி நிர்மாணிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டுள்ளது. தால்பிய மகரிஷியும் அவர் சீடர் குணசீல மகரிஷியும் திருப்பதி பெருமாளின் பேரழகில் மயங்கி அவரைப் போன்ற மூர்த்தத்தை தமிழ்நாட்டில் பிரதிஷ்டை செய்ய விரும்பினார்கள். அதன்படியே செய்ததோடு அந்தத் தலத்துக்கு சீடரின் பெயரையும் வைத்து அவருக்குப் பெருமை சேர்த்தார் குரு. பவிஷ்யோத்திர புராணத்தில், இத்தலம் பற்றி “குணசீலமகாத்மியம்’’ எனும் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதிலிருந்தே, இத்தலத்தின் தொன்மை விளங்கும்.

உறையூரைத் தலைநகராகக் கொண்ட சோழமன்னன், நியாயவர்மன் என்பவர் இத்தலத்தை புதுப்பித்திருக்கிறார். தீய சக்திகளால் ஆட்பட்டவர்களையும் இந்த பெருமாள் குணப்படுத்துகிறார் என்பதால், அமானுஷ்ய பாதிப்புக்குள்ளானவர்களும் பெருமாளை தரிசித்து துன்பம் நீங்கப் பெறுகிறார்கள். தன் கையில் உள்ள செங்கோலால் பக்தர்களின் உடல் நலம், மன நலம் காப்பதில் இந்த பெருமாள் நிகரற்றவராகத் திகழ்கிறார்.

மற்ற திருமால் ஆலயங்களில், வாரம் ஒரு முறையே திருமஞ்சனம் நடக்கும். ஆனால் இத்தலத்தில் பெருமாளுக்கு தினமும் திருமஞ்சன சேவை நடக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், 48 நாட்கள் காவிரியில் நீராடி, கோயிலில் உச்சிக்கால பூஜையையும், அர்த்தஜாம பூஜையையும் தரிசிக்க, அவர்கள் மனநலம் குணமடையப் பெறுகிறார்கள்.

திருப்பதி சென்று பெருமாளை தரிசிக்க இயலாதவர்கள், குணசீலம் சென்று தரிசித்தால் திருப்பதியை தரிசித்த பலன் கிட்டும் என பெருமாளே குணசீல மகரிஷியிடம் வரம் தந்துள்ளதாக புராண வரலாறு சொல்கிறது. இத்தல பெருமாளுக்கு செய்யப்படும் சந்தனக் காப்பு அலங்காரம், மிக அற்புதமானது. நாம் குருவாயூரில்தான் இருக்கிறோமோ! என்று திகைக்க வைத்த வண்ணம் அந்த அலங்காரம் அழகுற அமைந்திருக்கும்.

`குணம்’ என்றால் குண மடைதல். `சீலம்’ என்றால் இடம் என்று பொருள். பக்தர்களின் உடல் நோய்களையும், மனநோய்களையும் குணப்படுத்துவதால் இத்தலம் குணசீலம் என்றாயிற்று.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து, நாமக்கல், சேலம், முசிறி ஆகிய பேருந்துகள் இத்திருத்தலத்தில் நின்று செல்லும்.

தொகுப்பு: நாகலட்சுமி

The post மனநோயை குணப்படுத்தும் குணசீலப் பெருமாள் appeared first on Dinakaran.

Related Stories: