?வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் எத்தனை கதவுகள் இருக்க வேண்டும்?

– ஸ்ரீனிவாசாச்சார், கோவிலடி.

வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் தலைவாயில் மற்றும் பின்புற கொல்லைப்புற வாயில் என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். இயலாத பட்சத்தில், தலை வாயிலுக்கு நேர் எதிரே வீட்டின் பின்புறம் ஒரு ஜன்னல் ஆவது அமைந்திருக்க வேண்டும். வீட்டிற்குள் இருக்கும் அறைகள் என்பதும் அவற்றிற்கான வாயில்களும் நமது சௌகரியப்படி அமைத்துக் கொள்ளலாம். எல்லா அறைகளுக்கும் கதவு என்பது முக்கியம். அமையும், வாயிற்படியின் அளவுக்கேற்ப ஒற்றைக்கதவா அல்லது இரட்டைக்கதவுகளா என்பதை தீர்மானிக்க வேண்டும். கதவில்லாத வாயிற்படி என்பது இருக்கக் கூடாது.

?கோயில்களும் வாஸ்து பார்த்துதான் கட்டப்பட்டிருக்கிறதா?
– அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

நிச்சயமாக. மன்னர்கள் காலத்தில் எழுப்பப்பட்ட அத்தனை ஆலயங்களுமே வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் கட்டப்பட்டவைதான். வாஸ்து சாஸ்திரம் என்பதே ஆலயங்கள் கட்டப்
படும்போது, சில்ப சாஸ்திரத்தின் ஒரு அங்கமாக உருவானதுதான். கருவறையின் அளவு, அது அமைய வேண்டிய இடம், விமானத்தின் அளவு, கோயிலின் நீள அகலம் ஆகிய அனைத்தும் வாஸ்து சாஸ்திர அடிப்படையில் அமைந்ததுதான். அதனால், பல நூற்றாண்டுகள் கடந்தும் அந்த ஆலயங்கள் அனைத்தும் நம் கண் முன்னே கம்பீரமாக காட்சி அளிக்கின்றன.

?மரணத் தருவாயில் இருப்போருக்கு உறவினர்கள் பால் கொடுப்பது ஏன்?
– பி.கனகராஜ், மதுரை.

பிறந்த உடனேயே குழந்தைக்கு ஊட்டப்படுவதும் பால்தானே. மனிதன் பிறக்கும்போது, அன்னையின் தாய்ப்பாலை உணவாக உட்கொள்கிறான். அதே போல இறக்கும் தருவாயில் இருப்போருக்கும் பாலினை ஊட்டுகிறார்கள். வாழ்க்கையின் அதிமுக்கியமான தருணங்களில் பால்தான் முக்கியத்துவம் பெறுகிறது. பிறந்தவுடன் பால் ஊட்டுகிறார்கள், திருமண பந்தத்தில் நுழையும்போது மணமக்களுக்கு பாலும் பழமும் தருகிறார்கள். முதலிரவின் போதுகூட மணப்பெண் பால் சொம்பினைத் தான் கையில் எடுத்துச் செல்கிறாள். அதேபோல, புதிதாக வீடு கட்டிக் குடியேறும்போதும் பால் காய்ச்சி அதைத்தான் முதலில் பருகுகிறார்கள். அப்படி, வாழ்க்கையின் அதிமுக்கியமான தருணங்கள் அனைத்திலும் பால் சாப்பிடுவது போன்று வாழ்க்கையை நல்லபடியாக வாழ்ந்து முடித்து மரணத் தருவாயில் இருப்பவருக்கும் பாலினை ஊட்டி அவர்களது வாழ்க்கை பூரணத்துவம் பெற்றிருப்பதாக அவர்களை உணரச் செய்து நல்லபடியாக இறைவனடி சேரவேண்டும் என்பதற்காகத்தான் அந்த நேரத்திலும் பாலினை ஊட்டுகிறார்கள். நம்முடைய சடங்குகள், சம்பிரதாயம் அனைத்திலும் காரண காரியம் என்பது கண்டிப்பாக உண்டு. அதனை மெய்ப்பிக்கும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

?சித்தர்களை முறையாக வழிபட என்ன வழி?
– ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.

சித்தர்கள் எல்லா இடத்திலும் வசிக்கும் சக்தி பெற்றவர்கள். சித்தர்களும் குருமகான்களைப் போன்றவர்கள்தான். எந்த சித்தரை வழிபட நினைக்கிறீர்களோ அவரை மனதில் தியானித்து அவரது நாமத்துடன் “ஓம் நமசிவாய’’ என்ற பஞ்சாட்சர மந்திரத்தையும் தொடர்ந்து ஜபித்து வந்தாலே போதுமானது. அதே நேரத்தில், ஐம்புலன்களையும் அடக்கி ஜபம் செய்ய வேண்டும். குறிப்பாக,
நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் கவனம் செலுத்தாமல், மனதை ஒருமுகப்படுத்தி தியானித்தால், சித்தர்கள் ஏதேனும் ஒரு வடிவில் உங்களுக்கு காட்சி அளிப்பார்கள். ஜபம் செய்யும்போது நெற்றியில் திருநீறும், கழுத்தினில் ருத்ராட்சமும் அணிந்திருப்பது கூடுதல் பலத்தினைத் தரும்.

?கோயில் தூண்களில் சிலர் விபூதி குங்குமத்தை வைத்துவிட்டு செல்கிறார்கள். அவற்றை நாம் இட்டுக் கொள்ளலாமா? – வண்ணை கணேசன், சென்னை.

கூடாது. நமக்கு அளிக்கப்படும் விபூதி, குங்குமம் பிரசாதத்தை, கோயில் தூண்களில் போட்டுவிட்டு வருவதே முதல் தவறு. இறைவனின் அருட்கொடையான பிரசாதத்தை யாராவது வேண்டாம் என்று அங்கேயே விட்டுவிட்டு வருவார்களா. அதுவே தவறுதான். அந்த தவறினை நியாயப்படுத்தும் வகையில் அவ்வாறு அவர்கள் மீதம் வைத்துவிட்டு போன அந்த விபூதி குங்குமத்தை நாம் நெற்றியில் இட்டுக் கொள்ளக் கூடாது. அர்ச்சகரிடம் இருந்து நேரடியாக விபூதி குங்குமம் பிரசாதத்தை வாங்கி இட்டுக் கொள்ள வேண்டும். அல்லது, ஆலயத்திலேயே சந்நதிக்கு நேராக சிறு கிண்ணங்கள் வைத்து அதில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட விபூதியையும், அம்மனுக்கு அர்ச்சிக்கப்பட்ட குங்குமத்தையும் பிரசாதமாக வைத்திருப்பார்கள். அப்படி அந்த கிண்ணங்களில் வைக்கப்பட்டிருக்கும் விபூதி, குங்குமம் பிரசாதத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். வீட்டிற்குக் கொண்டு வந்து மற்றவர்களுக்கும் தரலாம்.

?சுண்டுவிரலின் கீழ் கண்ணி (மச்சம்) போன்ற அடையாளம் இருந்தால் அது எதைக் குறிக்கிறது?
– மாருதி, திண்டிவனம்.

வலது கையா, இடது கையா என்பதைப் பொறுத்து பலன் மாறுபடும். ஆண்களுக்கு வலது கையிலும், பெண்களுக்கு இடது கையிலும் இருந்தால் நற்பலன்கள் நடக்கும். மாறி இருக்கும் பட்சத்தில் எதிர்மறையான பலன்கள் நடக்கும். பொதுவாக சுண்டுவிரல் அல்லது அதனை ஒட்டிய கீழ்ப்பகுதியில் மச்சம் இருந்தால், சரஸ்வதி கடாட்சம் பெற்றவர்கள் என்பதாக பலன் சொல்லப்படுகிறது. கல்வி அறிவு நிரம்பியவர்களாகவும், மற்றவர்களால் அறிவாளிகள் என்று போற்றப்படுபவர்களாகவும் இருப்பார்கள். நல்லறிவு காரணமாக அவர்களின் தோற்றம் ஒருவித கம்பீரத்தன்மையுடன் இருக்கும். கற்றோர் மத்தியில் செல்வாக்குடன் இருப்பார்கள். தொழில்முறையில் மக்கள் தொடர்பிலும் மார்க்கெட்டிங் செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள். நவகிரகங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், வித்யா காரகன் ஆகிய புதனின் ஆதிக்கத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள்.

?வீட்டில் செய்யும் கணபதி ஹோமத்தை விடியற்காலைக்குள் செய்யும் தாத்பரியம் என்ன?
– தஞ்சை ஹேமலதா, வெண்டையம்பட்டி.

சூரிய உதயத்திற்கு முன்னதாக வரக்கூடிய விடியற்காலை பொழுது என்பது பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரம்ம முகூர்த்த காலத்திற்கு திதி, வார, நட்சத்திர தோஷம் எதுவும் கிடையாது என்பதால், இந்த நேரத்தில் கணபதி ஹோமத்தினை நடத்துகிறார்கள். அதே நேரத்தில், கணபதி ஹோமத்தினை பிரம்ம முகூர்த்தத்தில்தான் நடத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

The post ?வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் எத்தனை கதவுகள் இருக்க வேண்டும்? appeared first on Dinakaran.

Related Stories: