திருவருள் பெருக்கும் திருமெய்யம்

பக்தர்களுக்கு சோதனை வந்தால் பகவான் காப்பாற்றுவார். அந்த பகவானுக்கு சோதனை வந்தால் என்ன நடக்கும்? என்றதொரு கேள்வி நமக்கெல்லாம் வந்தாலும் வரலாம். அதற்கு சரியான விடை என்ன என்பதை பகவான் முன்கூட்டியே நமக்கு தந்திருக்கிறார். பகவானுக்கு சோதனை எப்படி வரும் என்பதைவிட அப்படி வந்து, பகவான் காப்பாற்றப்பட்டு இருக்கிறார் என்பதற்கு திருமயம் குகைக் கோயில் ஒரு சாட்சியாகும். புதுக்கோட்டைக்கு தெற்கே, 24 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பது திருமெய்யம், ஆதிரங்கம், பத்மகக் கோட்டை, ஊமையன் கோட்டை. என்று இதற்கு பல பெயர்களும் உண்டு. இக்கோயில், 40 ஏக்கர் நிலப்பரப்பளவில், சிறுமலைக்கோட்டையாக, ஒன்றின் தெற்குப் பக்கம் உள்ளது. இது ஒரு குடைவரைக்கோயில். கோயிலைச்சுற்றி ஏழு சுற்று மதில்கள் உண்டு. மூலவர் சத்தியகிரி நாதன், சத்தியமூர்த்தி பெருமாள். நின்ற திருக்கோலம். தாயார், உய்யவந்த நாச்சியார். விமானம், சத்தியகிரி விமானம். தீர்த்தம், கதம்ப புஷ்கரணி, சத்திய தீர்த்தம், நல்ல பரிச்சயம் ஆலமரம்.

திருமெய்யம், பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்று. பல்லவர் காலத்தில், சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஒரே சுற்றுச்சுவருடன் சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது. இந்த சத்திய மூர்த்தி பெருமாள் ஆலயத்தைத், தனியே சுற்றி வரமுடியாது. மூலவர் சந்நதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது என்பது சிறப்பு. மது, கைடபர் என்னும் அரக்கர்கள், பெருமாள் பாம்பணையில் படுத்து உறங்கிக்கொண்டு இருக்கும்போது தேவி, பூதேவி ஆகியோரை அபகரிக்க வந்தனர். அதை கண்டு அஞ்சிய ஸ்ரீ தேவி, பெருமாளின் மார்பிலும், பூதேவி பெருமாளின் திருவடி அருகிலும் ஒளிந்து கொண்டனர். அப்போது, பெருமாளின்உறக்கம் கலையக்கூடாது என்று ஐந்து தலை நாகம் ஆதிசேஷன், தன் வாயிலிருந்து நஞ்சைக் கக்கி, அரக்கர்களை விரட்டிவிட்டது. பெருமாளின் அனுமதி இல்லாமல் இப்படி செய்துவிட்டோமே என்று நாகம் அஞ்சி இருக்கும் நேரத்தில், பெருமாள் என் அனுமதியின்றி செய்தாலும் நல்லதே செய்திருக்கிறாய், பாராட்டுக்குரிய செயல் என்று கூறியதாக வரலாறு.

இதை மெய்ப்பிக்கும் வகையில், இத்தலத்தில் ஆதிசேஷன் தன் தலையை அஞ்சி சுருங்கியவாறு காட்சி தருவது சிறப்புக்குரியது. இந்த குகைக் கோயிலிலுள் பகவான் ஆனந்த சயனம் கொண்டு அருள்பாலிக்கிறார். பாறையோடு வடிக்கப்பட்ட சிலை. ஆதிசேஷன்மீது சயனம். பகவானது கை, ஆதிசேஷனை தட்டிக் கொடுக்கிறது. சகலவிதமான தேவர்களும், ரிஷிகளும் புடைசூழக்காட்சி தரும் இந்த குடைவரைப் பெருமாள், பெரிய திருமேனியை கொண்டுள்ளார். சந்திரன், சத்திய முனிவர், புருவரச் சக்கரவர்த்தி, ஆதிசேஷன் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்ற ஸ்தலம். கருடனுக்கு மகாபலத்தையும், சக்தியையும் கொடுத்த தலமும்கூட. திருமங்கை ஆழ்வார் பாடல் பெற்ற தலம். இக்கோயில், மிகவும் பழமையானது என்றும், இதன் காரணமாக இதற்கு ‘ஆதிரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சத்ய மகரிஷியின் முன்தோன்றி, பெருமாள் காட்சி தந்த தலம். திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள் மொத்தம் 46 ஆகும்.

அவற்றுள் இந்தத் திருமெய்யமும் ஒன்று. சிவபெருமானே நாரதருக்கு இத்திருத்தலப் பெருமைகளைக் கூறியதாகவும், கலியுகத்தில் இங்கு வந்து வழிபடுபவர்களுக்குக் கவலை இல்லா மனத்தையும் நீண்ட ஆயுளையும் அளிப்பதாகவும் புராண வரலாறு கூறுகிறது. “சத்தியகிரி’’ எனும் இம்மலை, சாளக்கிராம மலைக்கு ஒப்பானது என்று பிரம்மாண்ட புராணத்தில் கூறப்படுகிறது.
ராகு – கேதுவால் துன்பப்படுகிறவர்கள், வியாதிகளால் நிம்மதி இல்லாமல் தவிக்கிறவர்கள், போட்டி பொறாமை போன்ற துஷ்டத்தால் நொந்து இருப்பவர்கள், இந்த சத்திய கிரிநாதர் பெருமாளையும், ஆதிசேஷனையும் வழிபாடு செய்தால், கிரகணம் நீங்கியது போல் மலர்ந்த முகத்தோடு பெருவாழ்வு பெறுவார்கள். காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் நடைதிறந்திருக்கும். புதுக்கோட்டையிலிருந்து, கிட்டத்தட்ட 20 கி.மீ தொலைவில், திருமெய்யம் திருக்கோயில் அமைந்துள்ளது.

ராதாகிருஷ்ணன்

The post திருவருள் பெருக்கும் திருமெய்யம் appeared first on Dinakaran.

Related Stories: