இந்த வார விசேஷங்கள்

திருச்சுழி அம்பாள் பவனி 17.3.2024 – ஞாயிறு

விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழியில் உள்ள கோயில், “திருச்சுழி திருமேனிநாதர்’’ கோயில் அம்பாள் திருநாமம். துணைமாலை நாயகி. இந்தக் கோயிலுக்கு “பூமிநாத சுவாமி’’ கோயில் என்று பெயர்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில். இங்கு பங்குனி பிரம்மோற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறும். தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், சுவாமி தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார். எட்டாம் நாள் விழாவாக, திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். ஒன்பதாம் நாள் விழாவில், தேரோட்டம் நடைபெறும். சுற்றியுள்ள பல்வேறு கிராமமக்களும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள். அதில் இன்று அம்பாளும், ஈஸ்வரனும் வீதி உலா காட்சி தருகின்றனர்.

கணநாதர் குருபூஜை 18.3.2024 – திங்கள்

கணநாத நாயனார், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். ஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழியில் அந்தணர் குலத்தில் பிறந்தவர். அவர் சீர்காழி திருத்தோணியப்பருக்கு நாளும் அன்போடு பூசனை செய்தார். தம்மிடம் வந்த அன்பர்களின் குறைதீர்த்தார். அவர்களுக்கு வேண்டும் வசதிகளைச் செய்து கொடுத்தார். இல்லறத்தில் வாழ்ந்த இவர், அடியார்களை வழிபட்டார். நல்ல சிவத்தொண்டர்களை உருவாக்கினார். கணநாத நாயனார், திருஞானசம்பந்த நாயனாரிடம் மிகுந்த ஈடுபாடும் பக்தியும் கொண்டிருந்தார். அவரையே தனது குருவாக எண்ணினார். இவர், திருஞானசம்பந்த நாயனாரை எப்பொழுதும் பேரன்போடு வழிபட்டு வந்தார். இவரது வழிபாட்டின் சிறப்பும், சிவனடியார்கள் மீது வைத்த பக்தியும், சிவத்தொண்டும், சிவத்தொண்டு புரிய பக்தர்களை பழக்கியதும் சிவனடியார்களின் அளவில்லாத அன்பை பெற்றுத்தந்தது. ஆளுடைய பிள்ளையார் (சம்பந்தர்) திருவடியில் மூண்ட அன்போடு நாளும் முப்பொழுதும் செய்தார். ஞானசம்பந்தப் பெருமாளை நாளும் வழிபட்ட நலத்தால் இறைவரது திருக்கயிலை மாமலையில் சேர்ந்து கணங்களுக்கு நாதராகி தொண்டில் நிலைபெற்றார். “கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை. அவர் குரு பூஜை ஆண்டுதோறும் கணநாத நாயனார் முக்தி அடைந்த நாளான, பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், இவரது குருபூசை நாள் சீர்காழியில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இவரது குருபூஜை தினத்தன்று, எல்லா சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.

ஸ்ரீ வில்லிபுத்தூர் பங்குனி ஆண்டாள் சந்திரபிரபை, ரெங்கமன்னார் சிம்ம வாஹனம் 18.3.2024 – திங்கள்

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மிகச் சிறந்த பெருமை உண்டு. அது ஆண்டாள் அவதரித்த ஊர். நாச்சியார் கோயில் என்ற பெயருடன் அமைந்த கோயில். அங்கு ஆண்டாள், நாச்சியாருக்குத் தான் முதல் சிறப்பு.
இத்திருக்கோயிலில், ஆடி மாசம் ஆண்டாளுடைய நட்சத்திரமான பூரநட்சத்திரம் ஒட்டி நடைபெறுகின்ற விழாவும், பங்குனியில் ஆண்டாள் திருக்கல்யாணத்தை ஒட்டி நடக்கக்கூடிய பங்குனி உத்திரப் பெரு திருவிழாவும் மிகச் சிறந்த விழாக்கள் ஆகும். பங்குனி உத்திரத் திருவிழாவில் ஒவ்வொருநாளும் ஆண்டாளும் ரங்கமன்னாரும் ஒவ்வொரு வாகனத்தில் பவனி வருவார்கள். பங்குனி உத்திரத்தன்று, திருக்கல்யாணம் நடைபெறும். இன்று ஆண்டாள், சந்திர பிரபையிலும், ரங்க மன்னார் சிம்ம வாகனத்திலும், வலம் வருகின்றார்கள்.

திருப்புல்லாணி ஜெகந்நாதர் அனுமார் வாகனம் 19.3.2024 – செவ்வாய்

பிரசித்தி பெற்ற திருத்தலம் திருப்புல்லாணி. ஆழ்வார்களால் பாசுரம் பெற்ற இந்த திருத்தலத்தில், பங்குனி உற்சவப் பெருவிழா மிக கோலாகலமாக நடை
பெறும். ஒவ்வொரு நாளும் திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள், ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வருவார். இன்று, அனுமன் வாகனத்தில் வீதி உலா வருகின்றார்.

அமலாகி ஏகாதசி 20.3.2024 – புதன்

“அமலாகி’’ என்றால் நெல்லிக்காய். பத்மபுராணத்தின் படி, நெல்லிக்காய் மரம், விஷ்ணுவுக்கு உரியது. இந்த மரத்தில், ஸ்ரீஹரியும், லட்சுமி தேவியும் வசிக்கிறார்கள். இதன் காரணமாக, அமலாகி ஏகாதசி நாளில், விஷ்ணுவை அம்லா (நெல்லி) மரத்தடியில் அமர்ந்து வழிபடுகின்றனர். பங்குனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி அமலாகி ஏகாதசி என்று அழைக் கப்படுகிறது. இது, “ஆம்லா ஏகாதசி’’ என்றும், “ரங்பர்னி ஏகாதசி’’ என்றும் அழைக்கப்படுகிறது. மார்ச் 20,2024 புதன்கிழமை, அமலாகி ஏகாதசி. ஏகாதசி திதி ஆரம்பம். மார்ச் 20, 2024 மதியம் 12:21 மணிக்கு ஏகாதசி திதி முடிவடைகிறது. அமலாகி ஏகாதசி அன்று விரதம் அனுசரித்து, பகவான் ஸ்ரீமன் நாரயணனை வணங்குவதன் மூலம், அனைத்து பாவங்களிலிருந்தும் விமோசனம் கிடைக்கும். ஏகாதசி அன்று, விரதம் இருப்பது நிலையான பலனைத் தரும். மகாபாரதத்தில் கிருஷ்ணர், யுதிஷ்டிரருக்கு ஏகாதசி விரதத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். இன்று விரதம் இருந்து, நாளை துவாதசி பாரணை செய்ய வேண்டும். அப்போதுதான் முழுபலன் கிட்டும்.

முனையடுவார் நாயனார் குருபூஜை20.3.2024 – புதன்

முனையடுவார் நாயனார், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சோழ நாட்டில் திருநீடூரில் வேளாள குலத்தில் தோன்றியவர். “அறை கொண்டவேல் நம்பி முனையடுவார்க் கடியேன்” என்று திருத்தொண்டத் தொகை இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. சிவபெருமான் திருவடியில் பேரன்புடையவர். பகைவர்களைப் போர்முனையில் வென்று பெற்ற செல்வத்தை சிவனடியார்க்கு கொடுத்து மனம் நிறைபவர். “போர் முனை யிற் கொல்லும் தொழிலே புரினும் அடியர்க்கு அமுதளித்தல் பெரும் பேறாம்.’’ என்ற சிந்தை உடையவர். வாய்மை உடையவர்; போர்செய்து பொருள் ஈட்டிச் சிவனடியார்களுக்குச் செல்வமும், உணவும் தந்து உபசரிப்பவர். முனையடுவார் நாயனார், நெடுங்காலம் சிவனடியார்களுக்காக தொண்டு புரிந்திருந்து, உமையொருபாகர் திருவருளாற் சிவலோகத்துப் பிரியாது, உறையும் பெருவாழ்வு பெற்றார். முனையடுவார் நாயனார் குருபூசை நாள்; பங்குனி பூசம்.

மதுரைஸ்ரீவெங்கடேசப்பெருமாள்21.3.2024 – வியாழன்

மதுரை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின், மதுரை நகரில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.
இக்கோயிலின் மூலவர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்; தாயார், அலர்மேல்மங்கை ஆவர். உற்சவர், சீனிவாசப் பெருமாள் ஆவார். பள்ளி கொண்ட பெருமாள், நரசிம்மர், லட்சுமி ஹயக்கிரீவர், பாண்டுரங்கன், ரகுமாயி தாயார், ராமர், வைஷ்ணவ விக்னேஸ்வரர், கருடாழ்வார், சுதர்சனர், ஆஞ்சநேயர், நடனகோபால நாயகி சுவாமி மற்றும் ஆண்டாள் ஆகியோரும் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலின் தீர்த்தம் “சர்வ அபீஷ்ட தீர்த்தம்’’ ஆகும். பாஞ்சராத்ர முறைப்படி பூசைகள் செய்யப்படுகின்றன. கிருஷ்ண ஜெயந்தி, பங்குனி பிரம்மோற்சவம், ராம நவமி, ஆடிப் பூரம், ரதசப்தமி, புரட்டாசி சனிக் கிழமைகள் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. `மாற்றுத் திருக்கோல சேவை’ என்ற வைபவத்தில், சுவாமி – ஆண்டாள் அலங்காரத்திலும், ஆண்டாள் – சுவாமி அலங்காரத்திலும் காட்சி தருகின்றனர். இன்று பெருமாள் வெண்ணெய்த்தாழி கொண்டும், இரவு குதிரை வாகனத்திலும் பவனி வருவது, கண்கொள்ளக் காட்சியாகும்.

மகா பிரதோஷம் 22.3.2024 – வெள்ளி

சிவனுக்குரிய வழிபாடுகளில், சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியம். மனிதர்களின் தோஷங்களையும் (குற்றங்களை) பாவங்களையும் நீக்குவதால், இந்த வழிபாடு பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சிவாலயங்களில், சுக்ரவார இன்று, மஹாபிரதோஷம் நடைபெறுகிறது. பிரதோஷ காலத்தில் சிவன் கோயிலில் வழிபாடு செய்தல், பல கோடி புண்ணியத்தை தரும். குறிப்பாக, ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலையில் இல்லாதவர்கள், பிரதோஷ நாளில் சிவன் கோயில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால், உங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் மாறும். அறிவு தெளிவாகும். மாலை 4.30 முதல் 6.00 மணி வரை என்பது பிரதோஷநேரம். இந்த சமயத்தில், நந்திதேவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். சந்தனம், பால், தயிர், திரவியப் பொடி, பன்னீர், தேன் முதலான அபிஷேகப் பொருட்களை வழங்கி தரிசியுங்கள். அதேபோல், செவ்வரளி, வில்வம், அறுகம்புல் கொண்டு நந்தி தேவருக்குச் சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். பிரதோஷ காலத்தில், அபிஷேக பொருட்கள் வாங்கிக் கொடுக்க, நன்மைகள் நடக்கும். பால் வாங்கித் தர, நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் வாங்கித்தர, தன லாபமும் வளங்களும் உண்டாகும். தேன் கொடுக்க குரல் வளம் இனிமையாகும். பழங்கள் வாங்கித்தர விளைச்சல் பெருகும். பஞ்சாமிர்தம் தர செல்வம் பெருகும். நெய் வாங்கிக் கொடுத்தால், முக்தி பேறு கிடைக்கும். இளநீர் கொடுக்க நல்ல மக்கட் பேறு கிட்டும். எண்ணெய் வாங்கித் தர, சுகமான வாழ்வும், சர்க்கரை தர எதிர்ப்புகள் மறையும். சந்தனம் வாங்கித்தர சிறப்பான சக்திகள் கிடைக்கும். மலர்கள் கொடுக்க தெய்வ தரிசனம் கிடைக்கும்.

ஸ்ரீ வில்லிபுத்தூர், பங்குனி ஆண்டாள் ரெங்கமன்னார், இரட்டை பரங்கி நாற்காலி 22.3.2024 – வெள்ளி

இன்று ஸ்ரீ வில்லிபுத்தூர், பங்குனி உற்சவத்தில் இரட்டை பரங்கி நாற்காலி வாகனத்தில் ரெங்கமன்னாரும் ஆண்டாள் நாச்சியாரும் பவனி வருகின்றனர். அது என்ன பரங்கி நாற்காலி சேவை? பரங்கி நாற்காலி என்பது வைணவ கோயில்கள் சிலவற்றில் இறைவன் உலா வருவதற்கு பயன்படுத்தும் வாகனமாகும். இந்த வாகனம் 17-ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்கர்கள் பயன்படுத்திய பெரிய சதுர வடிவிலான பரங்கி நாற்காலியை போன்று செய்யப்பட்டது. தென் தமிழகத்தின் பல வைணவ ஆலயங்களில் இந்த வாகனம் உண்டு. குறிப்பாக, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் வட்டத்தில் இருக்கும் பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தில் பரங்கி நாற்காலி வாகனம் பயன்படுத்தப்படுகிறது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா திருக்குறுங்குடி நம்பி கோயிலில் பங்குனி பிரமோற்சவம் திருவிழா முதல் நாள் இரவில் பெருமாள் பரங்கி நாற்காலியில் உலா வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் ஆவணித் திருவிழா இரண்டாம் நாள் இரவு பரங்கி நாற்காலி வாகனத்தில் அய்யா வைகுண்டர் உலா வருகிறார்.‌திருவில்லிபுத்தூர் ஆண்டாள் – ஸ்ரீ ரெங்கமன்னார் திருக்கோயிலில் பங்குனி திருவிழாவின் ஆறாம் நாளில் ஆண்டாள் நாச்சியார், ரங்கமன்னார் இருவரும் இரட்டை பரங்கி நாற்காலி வாகனத்தில் உலா வருகிறார். அந்த சேவை இன்று.

 

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Related Stories: