அடிமைகளை துரத்தியது போன்று எஜமானர்களையும் துரத்த தயாராக இருக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

பெரம்பூர்: கொளத்துார் தொகுதி ஜி.கே.எம். காலனியில் உள்ள மைதானத்தில் சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்துார், திருவிக நகர் சட்டமன்ற பாக முகவர்கள் மற்றும் பாக நிலை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தற்போது தமிழகத்திற்கு அடிக்கடி வரும் மோடி அவர்களிடம் ஒன்றே ஒன்றை கேட்கிறேன். சென்னை மற்றும் தூத்துக்குடியில் வெள்ளம் வந்த போது நீங்கள் ஏன் வரவில்லை.

இக்கட்டான காலக்கட்டங்களில் திமுக மட்டுமே மக்களுடன் நின்றது. நான் நிர்மலா சீதாராமனிடம் நாம் கட்டிய வரிப்பணத்தை தான் கேட்டேன். அதற்கு அந்தம்மாவின் தூக்கம் போய்விட்டது. கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழக மக்கள் ஒன்றிய அரசுக்கு ரூ.5.5 கோடி லட்சம் வரிப்பணம் கட்டியுள்ளனர். நாம் ஒரு ரூபாய் வரி கட்டினோம் என்றால் ஒன்றிய அரசு அதில் 28 பைசா மட்டுமே திருப்பி தருகின்றனர். அதனால் தற்போது மோடிக்கு நான் புதிதாக ஒரு பெயர் வைத்துள்ளேன். இனி நான் பாரத பிரதமர் அவர்களை 28 பைசா என்று தான் கூற வேண்டும்.

நாம் மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கான இலவச பேருந்து பயணம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் மற்றும் புதுமைப் பெண் திட்டம் போன்றவற்றை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். கலைஞர் முதல்வராக இருக்கும் போது வரை நீட் தேர்வு வரவில்லை. ஜெயலலிதா இருக்கும் போதும் வரவில்லை. அதன் பின் வந்த அடிமை ஆட்சியில், நீட் தேர்வுக்கு அனுமதி கொடுத்து விட்டனர். இதனால் அனிதா தொடங்கி ஜெகதீசன் வரை 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இது தற்கொலை அல்ல, கொலை, அதிமுகவும், பாஜவும் சேர்ந்து செய்த கொலை. இவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் பாக முகவர்கள், பொது மக்களிடம் நம் திட்டங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும். திமுககாரன் நினைப்பவன் தான் பிரதமராக வரவேண்டும். 2021ல் அடிமைகளை விரட்டியடித்தோம், 2024 அடிமைகளின் எஜமானர்களை விரட்டியடிக்க வேண்டிய தருணமே இந்த நாடாளுமன்ற தேர்தல் இது.

இதற்காக நீங்கள் வரும் 40 நாட்களும் உழைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ் குமார், மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post அடிமைகளை துரத்தியது போன்று எஜமானர்களையும் துரத்த தயாராக இருக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: