கல்லூரி மாணவர்களின் வாக்காளர் அட்டை எண் சேகரிப்புக்கு கடும் எதிர்ப்பு: ஆளுநர் மாளிகை புதிய விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றில் இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகளில் படிக்கின்ற மாணவ, மாணவியரின் வாக்காளர் அடையாள அட்டைகளின் எண்களை பல்கலைக்கழக துணை வேந்தர்கள் சேகரித்து 19ம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகையில் இருந்து சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு மாணவர்கள் இடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மாணவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டார்களா, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கிறார்களா, மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண் கல்லூரியிடம் இருக்கிறதா என்று ஆளுநர் கேட்பதும், உடனே பல்கலைக்கழகம் இத்தகைய தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபடுவதும் மிகவும் ஆபத்தான போக்காகப் பார்க்க வேண்டியுள்ளது‌. தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்’’ என கூறியுள்ளது.

இந்நிலையில் ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆளுநர், அனைத்து மாநில பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டி முதல்முறை வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குரிமை செலுத்துவதை உறுதிப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அடுத்த 10 நாட்களுக்குள் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைப்பதை எளிமைப்படுத்தவும், என்சிசி மற்றும் என்எஸ்எஸ் தன்னார்வலர்களை இதற்கு பயன்படுத்தவும் வாக்களித்தவர்களுக்கு இணைய வழி சான்று கிடைப்பதற்கான செயலியை உருவாக்கவும், இதை ஒரு இயக்கம் போல செயல்படுத்த துணை வேந்தர்கள் ஒப்புதல் அளித்தனர். 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்திய துறைகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடத்தப்படும். அதிக சதவீத வாக்குகளைப் பெற்ற பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் பாராட்டப்படுவார்கள்.

The post கல்லூரி மாணவர்களின் வாக்காளர் அட்டை எண் சேகரிப்புக்கு கடும் எதிர்ப்பு: ஆளுநர் மாளிகை புதிய விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: