திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு சென்னை உயா்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார். திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அமைச்சராக பொன்முடிக்கு பதவியேற்பு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வரின் கடிதத்துக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து நேற்று மாலை வரை எந்த பதிலும் கூறப்படவில்லை. இதற்கிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று காலை 6.50 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். வரும் 16ம் தேதி பிற்பகல் 12.40 மணிக்கு சென்னை திரும்புகிறார். பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என நேற்று முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளதால் டெல்லி செல்லும் முன் பதவிப்பிரமாணம் செய்து வைப்பாரா என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி appeared first on Dinakaran.

Related Stories: