சென்னையில் இருந்து விக்கிரவாண்டி, கும்பகோணம் வழியாக தஞ்சை செல்லும் நெடுஞ்சாலை பணிகள் எந்த நிலையில் உள்ளது?: தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

 


சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக செய்திதொடர்பாளர் கே.பாலு தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், சென்னையிலிருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி, நெய்வேலி கும்பகோணம் வழியாக செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையை கடந்த 2017ல் 4 வழி சாலையாக மாற்றும் திட்டம் அமல்படுத்தப்பட்டு இன்னும் பணிவுகள் முடிவடையவில்லை. சுமார் 160 கி.மீ. சாலை மிக மோசமாக உள்ளதால், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, ஆண்டி மடம் வழியாக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டியுள்ளது.

4 வழி சாலை இல்லாத விக்கிரவாண்டி-தஞ்சாவூர் சாலையில் சுங்க கட்டணம் ரூ.100 வரை வசூலிக்கப்படுகிறது. எனவே, 4 வழிச்சாலை பணி முடியும் வரை சுங்க கட்டணம் வசூலுக்கு தடை விதிக்க வேண்டும். சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிடவேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்துள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், இந்த பணிகள் மூன்று கட்டமாக நடைபெற்று வருகிறது. எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக பணிகளை முடிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2020ல் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கஜா, நிவர் புயல்களின் காரணமாக பணிகள் தாமதமானது.

மேலும், வீராணம் நீர் பைப் லைனை மாற்றுவதற்கு மாற்று இடம் கையகப்படுத்த தாமதம் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 7 ஆண்டுகளுக்கு மேலாக ஏன் இன்னும் பணிகளை முடிக்கவில்லை?. எனவே, தற்போதைய பணிகள் குறித்த நிலை அறிக்கையை தேசிய நெடுஞ்சாலை துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 10க்கு தள்ளிவைத்தனர்.

The post சென்னையில் இருந்து விக்கிரவாண்டி, கும்பகோணம் வழியாக தஞ்சை செல்லும் நெடுஞ்சாலை பணிகள் எந்த நிலையில் உள்ளது?: தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: