மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது அடிப்படை உரிமை கிடையாது: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டமன்ற தொகுதிகளில் 40 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தற்போது ஆட்சி அமைத்துள்ளது. இருப்பினும் அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி பூசலால் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜ வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் குல்தீப் சிங் அறிவித்தார்.

இந்த நிலையில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆறு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 5ம் தேதி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தை ஏன் நாடவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக இருக்கும் எங்களுக்கு இது அடிப்படை சார்ந்த விவகாரமாக இருக்கிறது’’ என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,‘‘மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்பது ஒன்றும் அடிப்படை உரிமை கிடையாது’’ என்று தெரிவித்து, வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது அடிப்படை உரிமை கிடையாது: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: