கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆகாய நடைமேடை அமைக்கும் பணி: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்!

சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய நுழைவாயிலில் ரூ.74.50 கோடி மதிப்பில் புதிய ஆகாய நடைமேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆகாய நடைமேடை அமைக்கும் பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கடந்த ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனிடையே, கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கவும், பேருந்து முனையத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேவேளை, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும் இணைக்க புதிய நடைமேம்பாலம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையும், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கியது. 74.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த புதிய நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை 400 மீட்டர் தூரத்திற்கு நடை மேம்பாலம் அமைகிறது.

இந்நிலையில், புதிய மேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பூமி பூஜையில் பங்கேற்று நடைமேம்பாலம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.12 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்றுகளுடன் கூடிய புதிய காலநிலை பூங்காவையும் அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்.

 

The post கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆகாய நடைமேடை அமைக்கும் பணி: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்! appeared first on Dinakaran.

Related Stories: