தொழிலாளியை கொன்று ஓட்டம் போலீசாரால் சுட்டு பிடித்த ரவுடி சாவு

நெல்லை: நெல்லை அருகே தொழிலாளியை கொன்று விட்டு தப்பிய போது போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்தார். நெல்லை மாவட்டம், வீரவநல்லூரை அடுத்த தென்திருபுவனம் கிராமத்தைச் சேர்ந்த காளி மகன் பேச்சிதுரை என்ற புத்தூரான் (23). கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சந்துரு (23). இருவரும் கடந்த 7ம் தேதி போதையில், வீரவநல்லூரை அடுத்த வெள்ளாங்குளியில் பால கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளியான விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த உடையநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி பாண்டியன் (36) என்பவரை வெட்டிகொன்று, போலீஸ் ஏட்டுவை வெட்டிவிட்டு தப்பினர். முக்கூடல் – திருப்புடைமருதூர் சாலையில் ஒரு வாழைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த 2 ரவுடிகளையும் பிடிக்க போலீசார் அங்கு சென்றனர். அப்போது அவர்கள் அரிவாளால் போலீசாரை வெட்ட முயற்சித்தனர்.

அப்போது போலீசார் சுட்டதில் பேச்சிதுரையின் முழங்காலில் குண்டு பாய்ந்தது. அவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். தப்பி ஓடிய சந்துரு, நெல்லை அருகே சீதபற்பநல்லூர் பாலம் அருகே போலீசுக்கு பயந்து குதித்தார். இதில் கை, கால்கள் உடைந்த நிலையில் சந்துருவை போலீசார் மடக்கிப் பிடித்தனர். 2 பேரும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தநிலையில் தொடர் ரத்த இழப்பால் நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் பேச்சிதுரை உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக சேரன்மகாதேவி நீதித்துறை நடுவர் ராஜலிங்க ம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினார். சந்துரு மற்றும் இறந்த ரவுடி பேச்சிதுரை மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

The post தொழிலாளியை கொன்று ஓட்டம் போலீசாரால் சுட்டு பிடித்த ரவுடி சாவு appeared first on Dinakaran.

Related Stories: