காலியாக உள்ள தேர்தல் ஆணையர் இடங்களை புதிய சட்டங்களை கொண்டு நிரப்ப தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!

புதுடெல்லி: காலியாக உள்ள தேர்தல் ஆணையர் இடங்களை புதிய சட்டங்களை கொண்டு நிரப்ப தடை கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாகூர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்து வரும் தேர்தல் ஆணையம், வரும் 15ம் தேதி மக்களவை தேர்தல் அட்டவணையை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, தேர்தல் ஆணையர் அருண் கோயல் நேற்று முன்தினம் இரவு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். ஏற்கனவே கடந்த மாதம் 15ம் தேதி, மற்றொரு தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டே பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற்றார்.

எனவே 2 தேர்தல் ஆணையர்களும் இல்லாததால், தற்போது 3 உறுப்பினர்களை கொண்ட தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மட்டுமே எஞ்சியிருக்கிறார். இதன் காரணமாக, மக்களவை தேர்தல் தேதி குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில், மக்களவை தேர்தலை சுமூகமாக நடத்த 2 புதிய தேர்தல் ஆணையர்களை உடனடியாக தேர்வு செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்காக முதலில் ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தலைமையில் உள்துறை செயலாளர் மற்றும் பணியாளர்கள், பயிற்சித் துறை செயலாளர் ஆகியோரை கொண்ட தேடல் குழு இரு தேர்தல் ஆணையர் பதவிகளுக்காக தலா 5 பேர் என 10 பேரை தேர்வு செய்யும். பின்னர், பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சர் ஒருவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் அடங்கிய தேர்வுக்குழு, 10 பேரில் இருந்து 2 தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும்.

பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்யும் 2 புதிய தேர்தல் ஆணையர்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவால் நியமனம் செய்யப்படுவார்கள். இதுதான் தற்போதைய தேர்தல் ஆணையர்கள் நியமன நடைமுறையாக உள்ளது. இதற்காக தேர்வுக்குழு வரும் 13 அல்லது 14ம் தேதிகளில் கூடும் எனவும், வரும் 15ம் தேதி 2 புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, காலியாக உள்ள தேர்தல் ஆணையர் இடங்களை மேற்கூறிய புதிய சட்டங்களை கொண்டு நிரப்ப தடை கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாகூர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்துள்ளார். சமீபத்தில் இயற்றப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (சேவை நிபந்தனைகள் மற்றும் அலுவலக விதிமுறைகள்) சட்டம், 2023ன் கீழ் புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க ஒன்றிய அரசுக்குத் தடை விதிக்க வேண்டும் என ஜெயா தாகூர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர், இந்தியத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவால் தேர்தல் ஆணையர்களை நியமிக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

The post காலியாக உள்ள தேர்தல் ஆணையர் இடங்களை புதிய சட்டங்களை கொண்டு நிரப்ப தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!! appeared first on Dinakaran.

Related Stories: