திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு கிராமத்தில் 800 மெகாவாட் வடசென்னை மிக உய்ய அனல் மின்நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு கிராமத்தில் 800 மெகாவாட் வடசென்னை மிக உய்ய அனல் மின்நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வடசென்னை அனல் மின்நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 3-வது நிலையில் இன்று உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. 800 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட மிக உய்ய மின்நிலையம் ரூ.10,158 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முதல்முறையாக குறைந்த நிலக்கரியை கொண்டு அதிக மின்உற்பத்தி செய்யும் வகையில் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின்நிலையம் இயங்கி வருகிறது

அனல் மின்நிலையத்தின் முதல் நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தி தற்போது நடைபெறுகிறது. 2-வது நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வடசென்னை அனல் மின்நிலையத்தில் மொத்தம் 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வடசென்னை அனல் மின்நிலையத்தில் 800 மெகாவாட் மின்உற்பத்தி 2010-ல் கலைஞரால் திட்டமிடப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 10 ஆண்டுகளாக மந்தகதியில் விரிவாக்க பணி நடைபெற்று வந்தது.

2021-ல் திமுக ஆட்சி அமைந்த பிறகு 3-வது நிலை கட்டுமான பணிகள் முடுக்கிவிடப்பட்டு நடந்து முடிந்தன. கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில் மின்தேவையை புதிய அனல் மின்நிலையம் பூர்த்தி செய்யும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அத்திப்பட்டு கிராமத்தில் 800 மெகாவாட் வடசென்னை மிக உய்ய அனல் மின்நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

The post திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு கிராமத்தில் 800 மெகாவாட் வடசென்னை மிக உய்ய அனல் மின்நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: