பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு நானே உதாரணம்!

நன்றி குங்குமம் தோழி

‘‘வாழையடி வாழையாக வாழவேண்டும் என்று பெரியவர்கள் நம் குலம் தழைக்க வாழ்த்துவது வழக்கம். அந்த வாழை மரம்தான் என்னுடைய குலம் தழைக்க மிகவும் உதவி வருகிறது’’ என்கிறார் கன்னியாகுமரியில் உள்ள சாமியார் மடத்தில் வசித்து வரும் ஸ்ரீகுமாரி. இவர் வாழைநாரில் புடவைகள் மட்டுமில்லாமல் பலவித கைவினைப் பொருட்களையும் தயாரித்து அதனை ஒரு சிறு தொழிலாக செய்து வருகிறார். ‘இயற்கை இலைகளின் கலைகளின் சங்கம்’ என்ற பெயரில் இவர் வாழைநாரில் பல வித்தியாசமான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். ‘‘நான் இந்தத் தொழிலுக்கு வர முக்கிய காரணம் என் அம்மா.

அவங்கதான் முதலில் வாழைநாரில் கைவினைப் பொருட்களை செய்ய ஆரம்பித்தார். அதில் பல வித்தியாசமான மற்றும் அழகான பொருட்களை தயாரிப்பார். அவர் வாழைநார் மட்டுமில்லாமல், கத்தாழை நார் மற்றும் பனை ஓலைகள் கொண்டும் பலவிதமான பொருட்களை தயாரிப்பார். அதனை ஒரு சிறு தொழிலாக நடத்தி வந்தார். என்னுடன் பிறந்தவர்கள் என்னையும் சேர்த்து பத்து பேர். அதில் ஐந்து பெண் குழந்தைகள், ஐந்து ஆண் குழந்தைகள். ஆனால் இதில் நான்கு ஆண் குழந்தைகளும் பிறந்தவுடன் இறந்துவிட்டனர். இப்போது நாங்க ஐந்து சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன்தான் கன்னியாகுமரியில் வாழ்ந்து வருகிறோம்.

நாங்க பிறக்கும் போது நல்ல வசதி வாய்ப்புடன்தான் இருந்தோம். அப்பா ஒரு நிறுவனத்தில் நல்ல நிலையில் வேலை பார்த்து வந்தார். ஆனால் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனம் திடீரென்று நஷ்டம் அடைந்தது. அதனால் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர்கள் அனைவரையும் வேலையை விட்டு தூக்கிவிட்டார்கள். அதில் என் அப்பாவிற்கும் வேலை பறிபோனது. நிரந்தரமாக மாதச் சம்பளம் வந்த நிலையில் திடீரென்று வேலை இல்லை, வீட்டிற்கான வருமானமும் தடையானதால், மொத்த குடும்பமும் நொடிந்து போய்விட்டோம்.

அதில் அப்பாதான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டார். எப்படி குடும்பத்தை கரை சேர்ப்பதுன்னு அப்பாவிற்கு கவலை ஏற்பட்டது. அந்த சமயத்தில்தான் அம்மா வீட்டில் இருந்த வாழை மட்டையில் இருந்து வாழை நாரை பிரித்து எடுத்து அதில் சின்னச் சின்ன கைவினைப் பொருட்களை தயாரிக்க துவங்கினார். அது பலருக்கு பிடித்துப்போக, அம்மா அதனை ஒரு தொழிலாக செய்யலாம் என்று முடிவு செய்து அப்பாவிடம் சொன்னார்.

அவரும் சம்மதிக்க, நாங்க குடும்பமா சேர்ந்து ஆரம்பித்த தொழில்தான் வாழை நாரில் கைவினைப் பொருட்கள். மேலும் முழுக்க முழுக்க இயற்ைக முறையில் தயாரிக்கப்படும் பொருட்கள். அதனால் பலரும் ஒன்றிணைந்து இந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்று நாங்க விரும்பினோம். ஆனால் அவ்வாறு உருவாக்குவதற்கு பண உதவி அவசியம். எங்களிடம் அவ்வளவு வசதி இல்லாததால், கன்னியாகுமரியில் உள்ள தொழிலதிபர்களை நிதி உதவிக்காக நாடினோம். பலர் மறுத்த நிலையில் ஒருவர் எங்களுக்கு உதவி செய்ய முன்வந்தார். ஆனால் அவர் ஒரு வேண்டுகோள் வைத்தார். 500 ரூபாய் செலவில் ஒரு பொருளை தயாரித்து கொண்டுவரச் சொன்னார்.

அது அவருக்கு திருப்தியாக இருந்தால், அவர் எங்களுக்கு நிதி உதவி அளிப்பதாக கூறினார். அப்படித்தான் 500 ரூபாயினை முதலீடாகக் கொண்டு இந்தத் தொழிலை துவங்கினோம். தற்போது வருடத்திற்கு 34 லட்சம் வருவாயை ஈட்டும் அளவில் எங்களின் நிறுவனம் வளர்ந்துள்ளது. எங்க நிறுவனத்தில் 30க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் வேலை பார்த்து வருகிறார்கள். எங்களின் நிறுவனத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக ஒற்றுமையுடன் வேலை பார்க்கிறோம். எங்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசுதான் இந்த வளர்ச்சின்னு சொல்ல வேண்டும்’’ என்றவர், ஒவ்வொரு வருடமும் வாழைநார் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்வது குறித்து முகாம் நடத்தி வருகிறார்.

‘‘எங்க அம்மா ஆரம்பித்த இந்தத் தொழிலை குடும்பமாகத்தான் செய்து வருகிறோம். நாங்க செய்யும் இந்தத் தொழில் மற்றவர்களுக்கும் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நாங்க பயிற்சி முகாமினை நடத்த ஆரம்பித்தோம். அதனால்தான் விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்க ஆரம்பித்தோம். எங்களிடம் பயிற்சி பெற்ற பல ஆண்கள் மற்றும் பெண்கள் இதனை தொழிலாக ஆரம்பித்து அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.

மேலும் அதில் பல சாதனைகள் மற்றும் விருதுகளும் பெற்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுக்க இருந்தும் ஆர்வம் மிகுந்தவர்கள் எங்களின் பயிற்சி முகாமில் இணைந்து பயிற்சி பெற்று வெற்றியும் கண்டுள்ளனர். எங்களைப் பொறுத்தவரை இந்தத் தொழில் எங்களின் குடும்பத் தொழிலாக மட்டுமில்லாமல், அனைவரும் கற்று, பெருமளவில் லாபத்தை ஈட்ட வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதற்காகத்தான் நாங்க பயிற்சி முகாமே நடத்தி வருகிறோம்.

நாங்க எங்க பொருட்களுக்காக இதுநாள் வரை இணையதளமோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விற்பனை செய்தது இல்லை. பெரும்பாலும் மொத்த வியாபாரமாகத்தான் எங்களின் அனைத்துப் ெபாருட்களும் விற்பனையாகி வருகிறது. தற்போது, ஆன்லைன் விற்பனை மூலமாகவும் நம்முடைய பொருட்களை உலகளவில் கொண்டு செல்ல முடியும் என்று தெரிந்த பிறகு அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம்.

எங்களின் வாழைநார் கைவினைப் பொருட்கள் டெல்லி, கர்நாடகா, திருவனந்தபுரம் என இந்தியா முழுதும் பல இடங்களில் விற்பனையாகிறது. மேலும் தமிழ்நாட்டில் எங்கு கைவினைக் கண்காட்சி நடைபெற்றாலும் அதில் கண்டிப்பாக எங்களின் நிறுவனம் பங்கு பெறும். அதுவும் எங்களின் வளர்ச்சிக்கு ஒரு வெற்றிப் பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறது.

அம்மாதான் இந்தத் தொழிலை ஆரம்பித்தார். அவர்தான் எங்களின் ஆணிவேர். அம்மாவினை தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக தொழிலை நான் எடுத்து நடத்தினாலும், அம்மாவின் உழைப்பினை கவுரவிக்கும் வகையில் அவருக்கு மாநில விருது கிடைத்தது. மேலும் பல பரிசுகளும் பெற்று சிறந்த பெண்மணியாக இந்தத் தொழிலில் வலம் வந்துள்ளார். தற்போது நான் இந்தத் தொழிலை எடுத்து நடத்துவதால், இந்த வருடத்திற்கான மாநில விருதில் என்னுடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வாழைநாரில் கைவினைப் பொருட்களை அடுத்து புடவைகளில் வாழைநாரில் எம்பிராய்டரி வேலைப்பாடு செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன். கூடிய விரைவில் அரசு அங்கீகாரத்தோடு அனைவரின் செயல்பாட்டிலும் இதைக் கொண்டு வர உள்ளேன். இதுவே எங்கள் தொழிலின் தனிச் சிறப்பாக வருங்காலங்களில் அமையும் என்று மன உறுதியுடன் கூறுகிறேன்’’ என்று பெருமையுடன் கூறுகிறார் ஸ்ரீகுமாரி.

தொகுப்பு: திலகவதி

படங்கள்: மணிகண்டன்

The post பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு நானே உதாரணம்! appeared first on Dinakaran.

Related Stories: