பழனி கிரிவல பாதையில் ஆக்கிரமிப்பு.. எந்தவிதமான வணிக நிறுவனங்களுக்கும் அனுமதி கிடையாது; உடனடியாக அகற்ற வேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: பழனி கிரிவல பாதையில் எந்தவிதமான வணிக நிறுவனங்களுக்கும் அனுமதி கிடையாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி; திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் பழனி முருகன் கோயில் உலக பிரசித்திபெற்ற கோயில். இந்து சமய அறிநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வருடந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கிரிவலப் பாதையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கேட்டிருந்தார்.

இந்த மனு இன்று உயர்நீதிமன்ற மாதுரைக்கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், தனபால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 86 கடைகள் தற்போது வரை அகற்றப்பட்டுள்ளது. ஒரு மினி பேருந்து, 3 பேட்டரி வாகனங்கள் பக்தர்களின் வசதிக்காக செயல்பட்டு வருகிறது. மேலும், பக்தர்கள் வசதிக்காக 3 கழிவறைகள் உள்ளன. 134 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அவற்றை அகற்றுவது குறித்து 58 வணிக மற்றும் 81 குடியிருப்புகள் வாடகை கட்டுவதர்களுக்கு உரிய முறையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள்; பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலின் கிரிவல பாதையில் எந்தவிதமான வணிக நிறுவனங்களுக்கும் அனுமதி கிடையாது. வணிக நிறுவனங்கள் ஏதுவாக இருப்பினும் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பார்க்கிங் வசதியை முறையாக செய்து கொடுக்க வேண்டும். பக்தர்களை அழைத்து செல்லும் வாகனங்களை கட்டணமின்றி இயக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து காவல்துறை போதிய பாதுகாப்பு வளங்காத பட்சத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி. நேரில் ஆஜராக நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

The post பழனி கிரிவல பாதையில் ஆக்கிரமிப்பு.. எந்தவிதமான வணிக நிறுவனங்களுக்கும் அனுமதி கிடையாது; உடனடியாக அகற்ற வேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: