புதுடெல்லி மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

புதுடெல்லி: புதுடெல்லியில் மக்களவை தொகுதி வேட்பாளராக மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மகளவை தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே முதல்கட்டமாக 195 வேட்பாளர்களை பாஜ வெளியிட்டுள்ளது.

இதில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டன. இந்த வேட்பாளர்கள் பட்டியல் அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேற்கு வங்கம் அன்சோல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பவன் சிங், ‘நான் போட்டியிட முடியாது’ என்று அதிரடியாக அறிவித்து விட்டார். அதே போன்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், மாஜி கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் ஆகியோரும், தங்களை வேட்பாளர்களாக அறிவிக்காததால் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் கோட்சேவை புகழ்ந்து பேசியதால் பிரதமர் மோடியால் மன்னிக்கவே முடியாது என கடும் கோபத்துக்குள்ளான பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாக்கூரும் அதிருப்தியில் இருக்கிறார். குஜராத் மாநிலம் மேஹ்சனா தொகுதியில், ‘வேட்பாளராக அறிவிக்கவே கூடாது’ என அம்மாநில முன்னாள் துணை முதல்வர் நிதின் பட்டேலும் இப்போதே அறிவித்து விட்டார். இந்நிலையில் தற்போது பாஜவின் புதுடெல்லி மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர் மீது டெல்லி ஆளும் ஆம் ஆத்மி அடுக்கடுக்கான புகார் கூறி வருகிறது. அவரை திரும்ப பெற வேண்டும் என கடுமையாக சாடி வருகிறது.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் வருமாறு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தொடங்கி வைத்த லலித் மோடி மீது பண மோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் விஸ்வரூபம் எடுத்தன. இதனால் நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் வசிக்கிறார். இந்த லலித் மோடியின் பாஸ்போர்ட் வழக்குக்காக கீழமை நீதிமன்றம் முதல் சுப்ரீம் கோர்ட் வரை வாதாடியவர்தான் இந்த பன்சூரி ஸ்வராஜ். மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனத்தினரிடையே தொடர் மோதல் நடந்து வருகிறது. 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மைத்தேயி வன்முறை கும்பலால் குக்கி இன பெண்கள் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட வீடியோ ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கியது. இதில் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து சுப்ரீம் கோர்ட்டில் வாதாடியவரும் பன்சூரி ஸ்வராஜ்தான்.

உச்சநீதிமன்றத்தால் ஜனநாயக படுகொலை என கடுமையாக விமர்சிக்கப்பட்ட சம்பவம்தான் சண்டிகர் மேயர் தேர்தல். அந்த தேர்தலில் பாஜவின் தேர்தல் அதிகாரி, சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்ட வீடியோ வெளியாகி சுப்ரீம் கோர்ட்டுக்கு வரவழைக்கப்பட்டு கண்டனத்துக்குள்ளானவர். இந்த சம்பவத்திலும் பாஜவுக்கு ஆதரவாக வாதாடியவர் இதே பன்சூரி ஸ்வராஜ்தான். இத்தகைய தேசவிரோத சக்திகளுக்காக வாதாடி வரும் பன்சூரி ஸ்வராஜை பாஜ வேட்பாளராக அறிவித்ததை திரும்ப பெற வேண்டும் என ஆம் ஆத்மியின் கோரியுள்ளது. இதனை பன்சூரி ஸ்வராஜ் நிராகரித்துள்ளார். ஆம் ஆத்மி சொல்லும் காரணங்களுக்காக என்னை பாஜ வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. என்னை ஆம் ஆத்மி குண்டர்கள் கொடூரமாக தாக்கிய காரணத்தாலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன் என்று பன்சூரி ஸ்வராஜ் கூறி வருகிறார். இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

The post புதுடெல்லி மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: