பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நான் முதல்வன் திட்டம் முதல்வரின் கனவு திட்டம். இந்த திட்டத்தின் கீழ் 1,725 பேருக்கு பணி நியமன கடிதம் வழங்கப்படுகிறது. இதுதவிர, பள்ளி மாணவர்களுக்கான கல்லூரி கனவு 2024 தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 28 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். பொறியியல் கல்லூரிகளில் மட்டும் இருந்த நான் முதல்வன் திட்டம் தற்போது கலை அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி என அனைத்து வகை கல்லூரிகளிலும் மற்றும் பள்ளிகளிலும் செயல்பட்டு வருகிறது. கோவையில் 1,725 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குவதன் மூலம் 1,725 குடும்பங்களில் முதல் அமைச்சர் ஒளி ஏற்றி வைத்துள்ளார்.
இது வெறும் பணி நியமன கடிதம் இல்லை. இது அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் துடுப்பு சீட்டு. இதில், 98 சதவீதம் பேர் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவர். விவசாய, ஆட்டோ ஓட்டுனர், கூலி தொழிலாளி குழந்தைகள் பயன்பெற்று உள்ளனர். இந்த திட்டத்தினால் 1 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. வருமானம் இல்லாமல் இருந்த குடும்பங்கள் வருமான வரி கட்டும் குடும்பமாக மாறி உள்ளது. அனைவருக்கும் வேலைவாய்ப்பை அரசு பெற்று கொடுத்து உள்ளது. வேலைவாய்ப்பு பெறுபவர்கள் அடுத்த 10 ஆண்டில் 100 பேருக்கு தொழில் அளிப்பவராக இருக்க வேண்டும். உங்களது கனவுகளை நனவாக்க நான் முதல்வன் திட்டம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
* பிரதமர் மோடிக்கு பதிலடி
கோவை கொடிசியா வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆனைமலை, அன்னூர், காரமடை, கிணத்துக்கடவு, மதுக்கரை உள்ளிட்ட 12 வட்டாரத்தை சேர்ந்த மொத்தம் 228 ஊராட்சிகளுக்கு 363 விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி பேசியதாவது: தமிழ்நாட்டில் விளையாட்டு துறை என்பது நகரம் முதல் கிராமம் வரை எல்லா இடத்திலும் பறந்து விரிந்து இருக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம். தமிழ்நாடு அரசு விளையாட்டு துறையில் ஒன்றிய அரசு திரும்பி பார்க்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது இங்கு வழங்கக்கூடிய விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி நம் வீரர் வீராங்கனைகள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிறந்த திறமையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களை மேலும் ஊக்குவிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர், திருநெல்வேலியில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் திமுக காணாமல் போய்விடும் என பிரதமர் மோடி கூறியுள்ளார் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘‘திமுக காணாமல் போய்விடும் என சொன்னவர்கள்தான் காணாமல் போயிருக்காங்க’’ என ஒற்றை வரியில் பதில் அளித்து பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
The post நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 1,725 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்; இதுவரை 1.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு appeared first on Dinakaran.