×

ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த மதுரை வாலிபர்களுக்கு இரட்டை ஆயுள்

விழுப்புரம், பிப். 29: விழுப்புரம் வழியாக தென் மாவட்டத்துக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரி மூலம் கஞ்சா கடத்தி செல்வதாக கடந்த 2020ம் ஆண்டு போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி விழுப்புரம் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் 2020 செப்டம்பர் 2ம் தேதி வாகன சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை பிடித்து சோதனையிட்டபோது, அதில் 112 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தைச் சேர்ந்த பழனியாண்டி மகன் முருகானந்தம்(34), ஜெயந்திபுரம் பொன்னுசாமி மகன் பிரபாகரன்(38) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் ஆந்திராவிலிருந்து தென் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி சென்றதை ஒப்புக் கொண்டனர்.

தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து லாரியில் கடத்தி வந்த கஞ்சா உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பல்வேறு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போதை பொருள் மற்றும் உள் சார்புள்ள வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி(பொ) வெங்கடேசன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் முருகானந்தத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும், பிரபாகரனுக்கு மூன்று ஆயுள் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால் இருவரும் ஒரு ஆயுள் தண்டனை மட்டும் அனுபவிக்க வேண்டும். தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த மதுரை வாலிபர்களுக்கு இரட்டை ஆயுள் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Villupuram ,Narcotics Intelligence Unit ,Andhra ,South ,
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி