×

சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு காரணமாக இருக்கக்கூடாது ஆந்திரா, சென்னையில் மீன்பிடிக்க வேண்டாம்

*புதுச்சேரி மீனவர்களுக்கு இயக்குனர் அறிவுரை

புதுச்சேரி : சென்னை மற்றும் ஆந்திர கடல் பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு புதுச்சேரி விசை படகு மீனவர்கள் தற்காலிகமாக அப்பகுதிகளில் மீன்பிடி தொழில் செய்வதை தவிர்க்க வேண்மென புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் அறிவுறுத்தியுள்ளார். புதுச்சேரி பகுதியை சேர்ந்த பதிவு பெற்ற சுமார் 100 விசைப்படகு மீனவர்கள் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு அவர்களுடைய மீன்பிடி தொழிலை புதுச்சேரி, சென்னை மற்றும் ஆந்திர கடல் பகுதிகளில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் புதுச்சேரி பகுதியை சேர்ந்த 2 விசைப்படகுகள் சென்னை காசிமேடு கடல் பகுதியில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது, காசிமேடு மீனவர்களால் படகுகள் சிறை பிடிக்கப்பட்டு பின்பு மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீன்பிடி விசைப்படகுகள் உரிமையாளர்களின் பேச்சுவார்த்தைக்கு பிறகு விடுவிக்கப்பட்டது.

மேலும், உப்பளம் துறைமுக பகுதியில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்யும் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் வானகிரி பகுதியை சேர்ந்த சில மீனவர்கள் சுருக்கு வலை விசைப்படகுகள் மூலம், தமிழகம் மற்றும் ஆந்திர மாநில கடல் பகுதி வரை சென்று மீன்பிடி தொழில் செய்கின்றனர். இதனால், அந்தந்த மாநில சிறு தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கின்றது. இதன் காரணமாக, புதுச்சேரியை சேர்ந்த விசை படகுகளுக்கு அங்கு தொழில் செய்ய அனுமதி கிடைக்காமல், சில சமயங்களில் விசைப்படகுகள் சிறை பிடிக்கும் நிலைமையும் ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து, விசைப்படகு மீனவர்கள் கடலில் சுமூகமான சூழலில் மீன்பிடி தொழில் செய்வதற்குண்டான கலந்தாலோசனை கூட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கருத்தரங்க அறையில் நேற்று நடந்தது. மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் தலைமை தாங்கினார். இணை இயக்குனர் தெய்வசிகாமணி, துணை இயக்குனர் (இயந்திரப்பிரிவு) ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள், மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் விசைப்படகு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பேசும்போது, புதுச்சேரி மீனவர்களுக்கும் சென்னை மீனவர்களுக்கும் மீன்பிடி தொழில் சம்பந்தமாக எவ்விதமான பிரச்னையும் இல்லை. முறையான மீன்பிடிப்பு தொழிலை மட்டுமே அந்தந்த கடல் பகுதிகளில் செய்து கொண்டு வருகிறோம். தற்போது ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலைக்கு காரைக்கால், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகுகளே காரணம் என்பதால் புதுச்சேரி அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று முறையிட்டனர்.

இறுதியாக இயக்குனர் முகமது இஸ்மாயில் பேசுகையில், தற்போது சென்னை மற்றும் ஆந்திர கடல் பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டும் அண்டை மாநில மீனவர்களிடையே மோதல் போக்கை தவிர்க்கும் பொருட்டும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த அனைத்து பதிவு பெற்ற விசைப்படகுகளும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ஆந்திர மாநில கடல் பகுதிகளில் மீன்பிடித்தலை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும்.

காரைக்கால் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த விசைப்படகுகள் எந்த ஒரு கடல் பகுதிகளிலும் கரையில் தொழில் செய்யக்கூடாது. அவர்கள் தொழில் செய்யும் கடல் பகுதிகளில் (புதுச்சேரி, தமிழகம் மற்றும் ஆந்திரா) நடைமுறையிலுள்ள மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட விதிகளுக்கு உட்பட்டு மீன்பிடி தொழில் செய்ய வேண்டும். இப்பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பதற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அனைத்து கடலோர மாவட்ட மீனவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு மீன்வளத்துறையிடம் கோரப்படும். மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதற்கு புதுச்சேரி மீனவர்கள் காரணமாக இருக்கக்கூடாது என்றார்.

அமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை

இக்கூட்டத்தில் மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் கூறுகையில், அண்டை மாவட்டம் மற்றும் மாநில மீனவர்களோடு சகோதரத்துவம் மற்றும் நல்லுறவை பேணிக்காக்கும் வகையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட வேண்டும். இப்பிரச்னை தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். உப்பளம் துறைமுகத்திலிருந்து வெளி மாநில சுருக்கு வலை விசைப்படகுகளை வெளியேற்ற வலியுறுத்தி ஏற்கனவே துறைமுகத்துறையை அணுகியுள்ளோம். இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள ஆவண செய்வதாக துறைமுகத்துறை இயக்குனர் உறுதி அளித்துள்ளார்கள் என்றார்.

The post சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு காரணமாக இருக்கக்கூடாது ஆந்திரா, சென்னையில் மீன்பிடிக்க வேண்டாம் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Chennai ,
× RELATED வரி வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து...