திருப்போரூர் கந்தசாமி கோயில் பிரம்மோற்சவ விழாவில் திருக்கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் வீதியுலா: திரளான பக்தர்கள் தரிசனம்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசாமி கோயில் பிரம்மோற்சவ விழாவில், திருக்கல்யாண உற்சவத்தில், வள்ளி – தெய்வானையுடன் முருகப்பெருமான் வீதியுலா வந்து காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருப்போரூர் கந்தசாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 15ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 21ம் தேதியும், 24ம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இறுதி நாள் நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மாலை வேடர்பரி உற்சவம் நடைபெற்றது.

பின்பு, நேற்று காலை 8 மணிக்கு முருகப்பெருமான் வள்ளியை மணமுடிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கந்தசாமி கோயிலின் உற்சவர் மண்டபத்தில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர். இதையடுத்து, பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்று கொடி இறக்கப்பட்டது. இதனையடுத்து, காலை 10 மணியளவில் தங்க மயில் வாகனத்தில் மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வீதியுலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், புதுமண தம்பதிகள் கலந்துக்கொண்டு, மணக்கோல முருகனை வழிபட்டனர்.

The post திருப்போரூர் கந்தசாமி கோயில் பிரம்மோற்சவ விழாவில் திருக்கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் வீதியுலா: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: