ஆர்.எஸ்.மங்கலம் சந்தையில் மிளகாய் வத்தலுக்கு கூடுதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலத்தில் நடைபெற்ற மிளகாய் சந்தையில் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் மிளகாய் வத்தலை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் கூடுதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மிளகாய் சந்தைக்கு, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுகணக்கான விவசாயிகள் மிளகாய் வத்தலை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஒரு குவிண்டால் மிளகாய் வத்தல் 17 ஆயிரம் ரூபாய் முதல் 21 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனையானது. சந்தையிலாவது விலை ஏற்றம் இருக்கும் என எண்ணி சந்தைக்கு ஏராளமான மூடைகளை விவசாயிகள் கொண்டு வந்து குவித்தனர். ஆனால் கூடுதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு ஒரு சில பகுதிகளில் பெய்த கனமழையால் பெரும்பாலான நெல் விவசாயம் தண்ணீரில் மூழ்கி வீணானது. அது மட்டுமின்றி மிளகாய், மல்லி உள்ளிட்ட தானிய வகை செடிகளும் மழையால் அழுகிப் போயின. இதனால் நெல் விவசாயத்தில் அடைந்த நட்டத்தை மிளகாய் விவசாயத்தில் ஈடு செய்துவிடலாம் என நினைத்திருந்தோம். மழையில் அழுகிய செடிகள் போக எஞ்சிய செடிகளை காப்பாற்றி, அதன் மூலம் விளைந்த மிளகாய் பழங்களை காய வைத்து, அதனை வத்தலாக்கி சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

இந்த ஆண்டு மிளகாய் மகசூல் மிகவும் குறைவுதான். ஆனால் வருடத்திற்கு வருடம் இடுபொருட்களின் விலை மற்றும் வேலை ஆட்களின் கூலி உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அதிகரித்து கொண்டே போகின்றது. இந்நிலையில் விவசாயிகள் நாங்கள் விளைவிக்க கூடிய மிளகாய்க்கு விலை ஏற்றம் இல்லை என்பதை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. ஆகையால் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து எங்களின் வாழ்வாதரத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்றனர்.

The post ஆர்.எஸ்.மங்கலம் சந்தையில் மிளகாய் வத்தலுக்கு கூடுதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: