நாகர்கோவிலில் 10 பயணிகள் படுகாயம் சென்டர் மீடியனில் மோதி அரசு பஸ் கவிழ்ந்தது எப்படி?

*டிரைவர் மீது வழக்கு

நாகர்கோவில் : நாகர்கோவிலில் அரசு பஸ் சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த சம்பவத்தில் அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று முன் தினம் இரவு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் இரவு 9.45 மணியளவில் நாகர்கோவில் டெரிக் சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ரோட்டின் நடுவில் இருந்த சென்டர் மீடியனில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த நாகர்கோவில் புன்னைநகர் பகுதியை சேர்ந்த ஜெனோஸ் (45), தக்கலை கொல்லன்விளையை சேர்ந்த அனுவர்ஷன் (21), சிதறால் பகுதியை சேர்ந்த விஜிலா (41), வில்லுக்குறி காரவிளை பகுதியை சேர்ந்த சக்தி (45), லீலா பாய் (54), பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த வேலம்மாள் (62), சித்ரா (33), அரசு பஸ் கண்டக்டர் அஜின் (45), பஸ் டிரைவர் குழித்துறையை சேர்ந்த ரமேஷ் (38) உள்பட மொத்தம் 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனை, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் சிகிச்சை முடிந்து திரும்பினர். இன்னும் 4 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

பஸ் வேகமாக வந்த போது சாலையின் குறுக்கே பைக்கில் ஒருவர் வந்தார். அவர் மீது மோதாமல் இருக்க பஸ்சை திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தற்போது நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அரசு பஸ் டிரைவர் ரமேஷ் (38) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ளார்.

டிரைவர் அதி வேகம் மற்றும் அஜாக்கிரையாக இருந்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த விபத்தால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்தை மேயர் மகேஷ் உடனடியாக வந்து பார்வையிட்டதுடன், காயம் அடைந்து சிகிச்சையில் இருப்பவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஒளிபிரதிபலிப்பான் ஸ்டிக்கர்

சென்டர் மீடியன்களில் ஒளி பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் இல்லாததால் இருட்டான இடங்களில் சென்டர் மீடியன்களில் வாகனங்கள் மோதி விடுவதாக புகார்கள் வந்தன. இதன் பேரில் மாவட்ட காவல்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து தற்போது சென்டர் மீடியன்களில் ஒளி பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள் ஒட்டும் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். அந்த வகையில் நாகர்கோவில் மாநகரில் 32 இடங்களில் ஒளி பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன. நேற்று முன் தினம் இரவு விபத்து நடந்த இடத்திலும் நேற்று ஒளிபிரதிபலிப்பான் ஸ்டிக்கர ஒட்டப்பட்டன.

The post நாகர்கோவிலில் 10 பயணிகள் படுகாயம் சென்டர் மீடியனில் மோதி அரசு பஸ் கவிழ்ந்தது எப்படி? appeared first on Dinakaran.

Related Stories: