இரட்டை இலையில் தான் போட்டி: ஓபிஎஸ் திட்டவட்டம்

புதுச்சேரியில் நேற்று திருமண விழாவில் பங்கேற வந்த ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்கள் அதிமுக கொடியுடன் வரவேற்றனர். பின்னர் ஓபிஎஸ் நிருபர்களிடம் கூறுகையில், ‘நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம். கடந்த 10 ஆண்டுகளாக பாஜவுடன்தான் கூட்டணியில் உள்ளோம். பழனிசாமிதான் போயிட்டார். அதிமுக கட்சி, கொடி, சின்னம் பயன்படுத்துவது தொடர்பான எல்லா வழக்கின் தீர்ப்புகளும், இன்று வரை எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக தீர்ப்புகளாகத் தான் வழங்கப்பட்டுள்ளது.

கடைசியாக உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்தபோது, சிவில் சூட்டில் விவாதித்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது. எனவே, இதுதொடர்பாக முன்னாள் சொன்ன எந்த தீர்ப்புகளும் செல்லாது, சிவில் கோர்ட்டில் வழங்கப்படும் தீர்ப்புத்தான் இறுதியானது. எந்த காலத்திலும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு இல்லை. இபிஎஸ்சை நம்ப யாரும் தயாராக இல்லை என்ற நிலை இன்று அரசியலில் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் யாரெல்லாம் அவருக்கு நல்லது செய்தார்களோ, அவர்களுக்கு நன்றி இல்லாமல் நடந்து கொண்டார்.

இதனால்தான் பிறகட்சிகள் அவரை நாடிச் செல்வதை தவிர்த்து வருகிறார்கள். டிடிவியுடன் இணைந்து பணியாற்றுகிறோம். சசிகலாவின் விருப்பத்தை பொறுத்தவரை அவரிடம் கேளுங்கள். சசிகலா அழைத்ததால் ரஜினிகாந்த போய் பார்த்து உள்ளார். வரும் தேர்தலில் எடப்பாடி அணி போட்டியிடும் எல்லா தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும். முதலில் பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்தது எடப்பாடிதான், அதன்பிறகுதான் அவர் விமர்சித்தார். சி.வி.சண்முகம் கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. என் மகன் ரவீந்திரன் தேர்தலில் போட்டியிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பாருங்கள். தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தை கேட்டு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்’ என்றார்.

The post இரட்டை இலையில் தான் போட்டி: ஓபிஎஸ் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: