ராகுல் யாத்திரையில் இணைந்தார் பிரியங்கா: இன்று அகிலேஷ் கலந்து கொள்கிறார்

லக்னோ: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மணிப்பூர் மாநிலத்தில் இருந்து இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மேற்கொண்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் இந்த யாத்திரை நடந்து வருகின்றது. நேற்று மொரதாபாத்தில் இருந்து நீதி யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரையில் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேசத்தில் யாத்திரை தொடங்கியபோதே பங்கேற்பதாக இருந்தார். ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக அவர் தாமதமாக யாத்திரையில் பங்கேற்றுள்ளார். ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் ஜீப்பின் மீது அமர்ந்து சென்றனர். வழிநெடுகிலும் திரண்ட மக்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து முழக்கமிட்டனர். அம்ரோஹா, சம்பால், புலந்த்சாகர், அலிகர், ஹத்ராஸ், ஆக்ரா வழியாக நடைபெறும் யாத்திரையானது இன்று படேபூர் சிக்ரியில் நிறைவடையும்.

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று யாத்திரையில் பங்கேற்கிறார். உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் இடையே மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு இழுபறி முடிவுக்கு வந்து உடன்பாடு எட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அகிலேஷ் இன்று ஆக்ராவில் ராகுலின் நீதி யாத்திரையில் பங்கேற்கிறார். ராகுல்காந்தி ஏற்கனவே திட்டமிட்டபடி, இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்கு செல்வதால், நீதி யாத்திரைக்கு இன்று முதல் ஓய்வு விடப்படுகின்றது. வருகிற மார்ச் 2ம் தேதி தோல்பூரில் இருந்து யாத்திரை மீண்டும் தொடங்கும். அதன் பின்னர் யாத்திரை மத்தியப்பிரதேசத்துக்குள் நுழையும்.

The post ராகுல் யாத்திரையில் இணைந்தார் பிரியங்கா: இன்று அகிலேஷ் கலந்து கொள்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: