பாஜவிற்கு மீண்டும் தாவுகிறார் சித்து?: யுவராஜ் சிங் குர்தாஸ்பூரில் போட்டி

அமிர்தசரஸ்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்து சித்து அமிர்தசரஸ் தொகுதியிலும், அதேபோல் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் குர்தாஸ்பூரிலும் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத்சிங் சித்து பாஜவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் சித்து, காங்கிரஸ் கட்சியின் மேலிட உத்தரவை அவர் தொடர்பு மீறி வருகிறார். மேலும், தன்னிச்சையாக பேரணி நடத்துவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருவதால் கட்சி மேலிடம் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், சித்து காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் பாஜவிற்கே செல்ல முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பாஜ நிர்வாகி சோம்தேவ் சர்மா கூறுகையில், ‘சித்து மீண்டும் பாஜவில் சேர்வதற்கான அதிகமான அறிகுறிகள் உள்ளன. இதுதொடர்பாக பாஜ மூத்த நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தகவல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன,’என்றார். சித்து பாஜவில் மீண்டும் இணைந்தால் அவருக்கு அமிர்தசரஸ் மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பாஜவின் கோட்டையாக விளங்கி வருகிறது. இதனால் அங்கு களம் இறக்கப்பட்டால் சித்து எளிதில் வெற்றி பெறுவார் என்று பாஜ கணக்குப்போடுகிறது.

இதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் பாஜ சார்பில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காகதான் அவர் சமீபத்தில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குர்தாஸ்பூரில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சன்னி தியோலுக்கு பதிலாக யுவராஜ்சிங் களம் இறங்குவார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

The post பாஜவிற்கு மீண்டும் தாவுகிறார் சித்து?: யுவராஜ் சிங் குர்தாஸ்பூரில் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: