பலவகை வடிவான தீர்த்தங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

புனிதமான நீர்நிலைகள் யாவும் இறைவனின் திருமேனிகளேயாகும். பெருங் கடல்கள், வற்றாது ஓடும் ஜீவநதிகள், மழைக்காலத்தில் பெருக்கெடுத்து ஓடிவரும் ஆறுகள், அருவிகள், குளங்கள், ஏரிகள், சுனைகள் யாவும் இறைவனின் பல்வகை வடிவங்களே ஆகும். இதை உணர்த்தும் வகையில் இவற்றின் கரையில் சிவபெருமான் திருக்கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றான். மனித நாகரிகங்கள் யாவும் ஆற்றின் கரையிலேயே தோன்றியதாகும். எனவே ஆறுகள் மானுட வாழ்வில்முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன.

நாகரிகத்தில் சிறப்படைந்த மனிதன் ஆதியில் ஆற்றங்கரைகளில் இறைவனுக்குத் திருக்கோயில்களை அமைத்து வழிபட்டான். இவை, ஆற்றுத்தளிகள் என்று அழைக்கப்பட்டன. ஆறுகளின் பெயரால் இறைவன் கங்காதீசர், யமுனேஸ்வரர், பாலீசர், வாருணீஸ்வரர், காவேரிநாதர், ஆரணீசர் முதலிய பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

திருவையாற்றிலுள்ள ஐயாறப்பர்ஆலயம், தேவாரத்தில் காவிரியின் பெயரால் ‘காவிரிக் கோட்டம்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. ஆறுகள் ஒன்றோடு ஒன்று கூடும் சங்கமத்துறைகளில் சிவபெருமான் மகிழ்வுடன் வீற்றிருக்கின்றார். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகள் கூடும் பிரயாகை, காவேரி, அமுதநதி, பவானி ஆகியன கூடும் (பவானி) நணா முதலிய கூடுதுறைகளில் பெருமான் சனிச்சிறப்புடன் வீற்றிருக்கின்றார். இந்த நிலையில் இவருக்குச் சங்கமேஸ்வரர் எனும் பெயர் வழங்குகிறது.

ஆறுகளுக்கு அடுத்த நிலையில் சிறப்புடன் போற்றப்படுபவை திருக்குளங்கள் ஆகும். ஆற்றங்கரையில் இருந்துகுடிபெயர்ந்த மனிதன், நல்ல நீர் நிரம்பிய குளங்களின் கரையில் குடியேறினான். குளங்களைச் சுற்றி அமைந்த ஊர்கள் குளப்பாக்கம், குளமங்கலம் எனப் பலவாறு அழைக்கப்பட்டன. இவ்வூர்களில் எழுந்தருளும் பெருமான் குளந்தையப்பன், தீர்த்தபுரீசர், குளந்தையீசர் எனும் பெயர் பெற்றார். (குளம் + எந்தை = குளந்தை: குளமாக இருக்கும் எனது தந்தை என்பது இதன் பொருள்) குளந்தையீசர் என்பது வடமொழியில் “தடாகபுரீஸ்வரர்’’ என வழங்குகிறது.

வடாற்காடு மாவட்டத்திலுள்ள குளத்தூரில் (மடம்) தடாகபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. கயம் என்பதற்கு குளம் என்பது பொருள். இதையொட்டி கயப்பாக்கம், கயத்தூர் முதலிய ஊர்கள் உண்டாயின. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கயப்பாக்கம் எனும் சிற்றூரும் அதில் தீர்த்தபுரீஸ்வரர் ஆலயமும் உள்ளன. காலபோக்கில் ஆலயங்களைச் சுற்றி மேலும் பல குளங்களை அமைத்து அன்பர்கள் சிவவழிபாடுசெய்தனர்.

இக்குளங்கள் இவற்றை அமைத்தவர் பெயரால் சிவகங்கை, பிரம்மன், விஷ்ணு, திருமகள், வாலி, சக்ரதீர்த்தம் முதலிய பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. குளங்களைவிட பரப்பில் சிறிய ஆழமான நீர் நிலை கிணறு (கூபம்) ஆகும். கிணறு களைச் சுற்றி அமைத்த ஊர்கள் கூவத்தூர், கூவல் என்று பெயர் பெற்றன. இத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமானுக்குக் கூவல்நாதர், கூவலப்பர் என்ற பெயர்கள் வழங்குகின்றன. தென்னகத்து ஆலயங்களில் எண்ணற்றகிணறுகள் தீர்த்தங்களாக உள்ளன. இவற்றின் சிறப்பு பற்றி இவற்றிற்கு அனேக
பெயர்கள் வழங்கப்படுகின்றன. சிதம்பரம் சிற்சபையை ஒட்டியுள்ளபரமானந்த கூபம், திருக்கடவூரிலுள்ளஅசுபதிதீர்த்தம், காசிநகரிலுள்ள ஆனந்தவாபி முதலியன கிணறுவடிவிலான சிறந்த தீர்த்தங்களாகும்.

குளங்களைவிடப் பெரிய நீர்நிலைகள் ஏரிகள் எனப்பட்டன. ஏரிகளில் இருந்து நீர் வெளியேறும் பகுதி மதகு எனப்பட்டது. மதகின் அருகில் எழுந்தருளியிருப்பதால் பெருமான் மதகீசர் என்றழைக்கப்படுகிறார். வடாற்காடு மாவட்ட சீயமங்கலம் தூணாண்டார், கோயில், குரங்கணிமுட்டம் கொய்யாமலரீசர் கோயில் முதலியவற்றைச் சுற்றிலும் விரிந்து பரந்த ஏரிகள் இருக்கின்றன. மலைகளிலுள்ள சுனைகளும், அருவிகளும்கூட புராணச் சிறப்புமிக்க தீர்த்தங்களாக விளங்குகின்றன. திருக்குற்றாலம்,பாபநாசம் முதலிய மலைத்தலங்களில் அருவிகள் தீர்த்தங்களாக உள்ளன.

திருவண்ணாமலையில் துர்கா தேவி தன் கை வாளால் ஒரு பாறையைப் பிளந்து உண்டாக்கிய கட்க தீர்த்தம் என்ற சுனை உள்ளது. இதன் கரையில் சிவபெருமான் கட்கேகர் எனும் பெயரில் வீற்றிருக்கின்றனர். திருஞானசம்பந்தர் கொடுங்குன்றத்திலிருந்த ‘குட்டாச்சுனை’ எனும் சுனையைக் குறித்துள்ளார். இது குட்டநோயைத் தீர்க்கும் வல்லமை பெற்றது என்று கூறுவர்.

தொகுப்பு: ஜெயசெல்வி

The post பலவகை வடிவான தீர்த்தங்கள் appeared first on Dinakaran.

Related Stories: