சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

 

விருதுநகர், பிப்.20: சுற்றுச்சூழல் கல்வி திட்டம் 2024ன் கீழ் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் மதுரை மாவட்டம் கிரீன் டிரஸ்ட் இணைந்து விருதுநகர் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார கலைப் பயணம் துவக்க விழா நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் வடமலைகுறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மதுரை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளரும் கிரீன் டிரஸ்ட் நிர்வாக இயக்குநருமான குழந்தைவேல் தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முத்து மாரியப்பன் முன்னிலை வகித்தார். ஆமத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகாசி இந்து நாடார் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிவகாசி பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்த்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, நீடித்த நிலையான வாழ்வியல் முறைகள், காற்று மாசு தவிர்த்தல் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கலைக்குழுவினர் மூலம் பாடல்கள் மற்றும் கரகாட்டம், ஒயிலாட்டம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது நிகழ்வின் போது ஆசிரியர்கள், மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் துணி பைகள் வழங்கப்பட்டன.

The post சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் appeared first on Dinakaran.

Related Stories: