முதுமையை ழுமையாக்கும் இயன்முறை மருத்துவம்

நன்றி குங்குமம் தோழி

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

முதுமை என்றாலே ஓய்வெடுப்பதும், வீட்டில் சின்னச் சின்ன வேலைகள் செய்தால் போதும் என நினைப்பதும், அருகில் உள்ள கடைகளுக்குப் போவதற்கு கூட பயந்து யோசிப்பதும் என நம் நாட்டில் உள்ளவர்கள் இன்றைக்கு முதுமையை ஒரு நோய் போல எண்ணி பல அறிவுரைகளைக் கூறி மேலும் அவர்களை முடக்கி வைப்பதை பார்க்கிறோம்.

என்னதான் முதுமையில் அதிக உடல் நலன் சார்ந்த மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அதனை ஆரோக்கியமான தசைகளைக் கொண்டு எப்படி முதுமையிலும் இளமையுடன் இன்பமாய் இருக்கலாம், அவற்றில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு என்ன என்பதனை இந்தக் கட்டுரையின் வாயிலாக தெரிந்துகொள்வோம்.

தசைகளின் இயக்கம்…

மூட்டுகளை அசைக்க உதவியாய் இருப்பது தசைகளே. மூளையிலிருந்தும், முதுகு தண்டுவடத்திலிருந்தும் சமிக்கைகள் நரம்புகள் வழியாக தசைகளுக்கு வரும். பின் தசைகள் அந்த சமிக்கைகளுக்கு ஏற்ப சுருங்கி விரிந்து அசைவினை உருவாக்கும். இதனால் மூட்டுகளை அசைக்க முடியும். உதாரணமாக, பேருந்தில் ஏற வேண்டும் என மூளை தசைகளுக்கு சமிக்ஞையை அனுப்பியதும் கால் தசைகள், கண் தசைகள் என தேவையான தசைகள் தயார் நிலையில் இருந்து அசைவினை உருவாக்கும்.

தசைகளில் மாற்றங்கள்…

* வயதாவதால் மற்ற உறுப்புகளில் எப்படி மாற்றங்கள் நிகழ்கிறதோ, அதுபோலவே தசைகளுக்கும் திறன் (function) குறைய வாய்ப்புகள் அதிகம்.
*தசைகளின் அடர்த்தி (bulk) குறையலாம்.
*தசைகளின் வலிமை (Strength) குறையலாம்.
*நரம்பு மண்டலத்தின் திறன் குறைவதால் தசைகளால் திறன்பட இயங்க முடியாமல் போகலாம்.
*தசைகளின் தாங்கும் ஆற்றல் (Endurance) குறையத் தொடங்கும்.
*தசைகளில் இறுக்கம் (Tightness), பலவீனம் எளிதில் ஏற்படும்.

இயன்முறை மருத்துவம்…

தசைகளை பலமுடனும், சரியான முறையில் ஆரோக்கியத்துடனும் இயக்க இயன்முறை மருத்துவம் உதவுகிறது. ஐம்பது வயதினைக் கடந்தவர்கள் உடலில் ஏதேனும் வலி இருந்தாலும் இல்லையென்றாலும் அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி, போதிய உடல் தசை பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம்.

தசை பரிசோதனை என்பது தசைகளை, மூட்டுகளை நம் அசைவுகள் மூலம் சோதித்து அதற்கு தக்கவாறு பயிற்சிகள் வழங்கப்படும். தசைகளில் உள்ள இறுக்கம், பலவீனம், தாங்கும் ஆற்றல் குறைந்திருப்பது என முதலில் பிரச்னைகளை சரி செய்ய பயிற்சிகள் வழங்கப்படும். பின் தசைகளில் வேறு ஏதேனும் பிரச்னைகள் வராதவாறு பேணிக் காத்திடவும் பயிற்சிகள் வழங்கப்படும்.

சிறப்பு பயிற்சிகள்…

* முதுமையில் ஸ்திரத்தன்மை (Body Balance) குறையும் என்பதால் அதனை அதிகரிக்கவும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.

*முதுமையில் மூளையின் ஒருகிணைப்புத் திறன் (Cordination) குறையும் என்பதால் அதனை மேம்படுத்தி பாதுகாக்கவும் பயிற்சிகள் கற்றுத்தரப்படும்.

* மூளையின் திறன் குறைந்து ஞாபக மறதி போன்ற சிக்கல்கள் தோன்றலாம் என்பதால் மூளைக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.

வரக்கூடிய பயன்கள்…

* முதுமையிலும் இளம் வயதினர் போன்று சுறுசுறுப்புடன் இருக்க முடியும்.

* தொடர் பயிற்சிகள் மூலம் கீழே விழுவது, நிலை தடுமாறுவது போன்ற முதிய வயது பிரச்னைகளை தடுக்கலாம்.

* வயதாவதால் முன்பு போல் இயங்க முடியாது என்ற மனநிலை மாறி மனச்சோர்வு இல்லாமல் இருக்கலாம்.

* முதுமையில் பசியின்மை, உடல் சோர்வு, செரிமான பிரச்னை, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இவ்வகை சிக்கல்களை உடற்பயிற்சி மூலம் எளிதில் வெல்லலாம்.

* மஜ்ஜை கிழிதல், தசை அழற்சி போன்ற பிரச்னைகள், முதுமையில் தசை, எலும்பு, மஜ்ஜை போன்ற பகுதிகளில் காயம் (injury) ஏற்பட்டால் எளிதில் குணமாகாது. ஆனால், தொடர் உடற்பயிற்சிகள் செய்து வருவதால் காயம் ஏற்படாது. அப்படியே ஏற்பட்டாலும் எளிதில் குணமடையும்.

* ஞாபக மறதி, கவனக்குறைவு, ஆர்வமின்மை போன்ற வயோதிக மன மற்றும் மூளை சிக்கல்களை எளிதில்
வெல்லலாம்.

வருமுன் காப்போம்…

*இளம் வயதிலேயே உடற்பயிற்சிகள் செய்து வருவதை ஒரு வாழ்க்கை முறையாக பின்பற்றி வந்தால், வயதான பின் வரும் பல பிரச்னைகளை தடுக்கலாம் என்பதால், இயன்முறை மருத்துவரின் ஆலோசனை படி உரிய உடற்பயிற்சிகள் செய்து வருவதே சிறந்தது.

*உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவர்கள் குறைந்தது நாற்பது வயதிலாவது பயிற்சிகளை தொடங்கினால் முதுமையில் உடலியல் சிக்கல்களை குறைக்கலாம்.மொத்தத்தில் முதுமையை ஒரு நோயாக இனியும் எண்ணாமல், நேர்மறை எண்ணங்களுடன் மிக உற்சாகமாக கழித்திட இயன்முறை மருத்துவம் மிக அவசியம் என்பதை ஒவ்வொருவரும் மனதில் நிலைநிறுத்தி ஆரோக்கியத்தை பேணிக்காத்திட வாழ்த்துகிறேன்.

The post முதுமையை ழுமையாக்கும் இயன்முறை மருத்துவம் appeared first on Dinakaran.

Related Stories: